
இன்றைய உலகில் வேகமாக வளர்ந்துவரும் சமயம் இஸ்லாம். காரணம், இந்த சமயத்தின் சமூகக் கட்டமைப்பு அத்தகையது. மற்ற சமயத்தினரின் கணக்கில் கூட்டலும் கழித்தலும் இருப்பதைப் போல முஸ்லிம் சமுதாயத்தில் கழித்தலுக்கு இடமில்லை; கூட்டலுக்குத்தான் இடமுண்டு.
மதமாற்றம் என்னும் அத்தியாயம் முஸ்லிம் மக்களிடம் அறவேக் கிடையாது; ஒருவேளை, உலகில் எந்த மூலையிலாவது ஒருவர் முஸ்லிம் சமயத்தைவிட்டு வெளியேறுவது என்றால், அது அத்துணை எளிதானதில்லை.
குடும்பம், உறவு, நட்பு, ஜமாத் ஆகிய எல்லைகளைக் கடந்து ஒரு முஸ்லிமானவர், அவரின் சமய எல்லையைக் கடப்பது இயலாத காரியம்; காரணம்..,
ஒரு முஸ்லிம் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து கட்டாய கோட்பாடுகளில், தலையாயது, தன்னை ஒரு முழு முஸ்லிமாக, தனக்குத் தானே ஏற்று, அங்கீகரித்து, தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமிய நெறியில் ஒழுகுவதும் இஸ்லாத்திற்கு பக்கபலமாக வாழ்வதும்தான் ஒரு முஸ்லிம் சகோதரரின் முதல் கோட்பாடு என்கிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த மார்க்க அறிஞர் முகம்மது சாலே மன்பயீ.
அடுத்தது, வெள்ளிக்கிழமை தொழுகை;
அதையடுத்தது, புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல்;
நான்காவது ஏழை வரி என்னும் ஸக்காத் கொடுத்தல்;
ஐந்தாவது மதினாவிற்கு மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரை என்னும் புனித பயணம்.
ஒரு முஸ்லிம், தன் வாழ்நாளில் எப்பாடுபட்டாவது, உடல் நலமும் பொருள் வளமும் வாய்க்கப்பெற்றால் கட்டாயம் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொண்டு, தன் பெயருக்கு முன்னால் ‘ஹாஜி’ என்னும் மார்க்கப் பட்டத்தை இணைத்துக் கொண்டால், சம்பந்தப்பட்டவர் சமயக் கடமையை முழுதாக நிறைவேற்றிய ஒரு முஸ்லிமாக இஸ்லாமிய சமூகத்தில் செம்மாந்து நடைபயிலுவார் என்கிறார் முகம்மது சாலே.
தவிர, ஏக இறைவன் அல்லாவின் தூதர், ‘ஸல்லல்லாஹுவலைகுவ ஸல்லம்’ நபி பெருமானாரின் வழிகாட்டுதலை நிறைவேற்றிவிட்ட மனநிறைவையும் எய்துவர்.
ஹஜ் யாத்திரையின் மிக முக்கியமான சடங்கு ‘தவாஃப்’ என்று கூறும் முகமது சாலே, ஹஜ் யாத்திரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பக்தர்கள் காபாவை எதிரெதிர் திசையில் ஏழு முறை வலம் வருகிறார்கள். இதில், இரண்டு மலைகளுக்கிடையே நடந்து செல்லும் இன்னொரு சடங்கும் உள்ளது.
ஹஜ்ஜின் ஒரு பகுதியாக, மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே அமைந்துள்ள சஃபா மற்றும் மர்வா எனும் இரண்டு மலைகளுக்கு இடையில் ஏழு முறை நடந்து செல்வதும் அடங்கும்; இப்ராகிம் நபியின் மனைவி ஹஜாரின் போராட்டம் மற்றும் சகிப்புத்தன்மையை நினைவுகூரும் செயலாக இது கருதப்படுகிறது. தவிர, அவர் தன் கைக்குழந்தை இஸ்மாயில் நபிக்காக தண்ணீர் தேடி, இவ்விரு மலைகளுக்கு இடையில் அலைந்த நிகழ்வைவும் இது குறிக்கிறது.
அதன் அடையாளமாக, ஹஜ் யாத்ரிகர்களுக்கு வழங்கப்படும் ‘ஸம் ஸம்’ நீரைப் பருகுவது, பெரும் பாக்கியமாகும். மனித வாழ்வில் எப்படிப்பட்ட பானங்களைப் பருகினானும், இந்த ‘ஸம் ஸம்’ நீரைப் பருகுவதற்கு இணை ஏதுமில்லை என்று உஸ்தாஸ் முகமது சாலே மன்பயீ குமரியிடம் தெரிவித்தார்.

நிகழும் 1446 ஹிஜ்ரி ஆண்டில், இன்று ஜூன் 7-ஆம் நாள் அணுசரிக்கப்படும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்துள்ளனர். ஹஜ் பயணம் மேற்கொண்டு இலட்சக் கணக்கில் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில், ஒரே எண்ணத்தில் திரளும் முஸ்லிம் மக்களிடம் ஆடை, அலங்காரம், செல்வம் உடைமை, ஏழ்மை உள்ளிட்ட எல்லா ஏற்றத் தாழ்வும் நீங்கி, சம மாந்தராக ஒருவரையொருவர் நேசிக்க வைக்கும் ஹஜ் யாத்திரை, சகோதரத்துவத்தையும் சமத்துவதையும் ஏற்படுத்துகிறது என்றும் முகமது சாலேத் தெரிவித்தார்.
மலேசியா, சமதரும ஜனநாயக நாடாக இருந்தாலும், அலுவல்படியான-அதிகாரிப்படியான சமயமாக இஸ்லாம் ஏற்கப்பட்டிருப்பதால், மலேசியவாழ் முஸ்லிம் மக்களும் பேரின்ப எல்லையில் இருக்கின்றனர்.
இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ‘ஹஜ்’ பயணத்தின்போது, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 20 லட்சம் பேர் சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்குப் படையெடுக்கின்றனர் என்று புனித ஹஜ் பயண ஏற்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டில், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றதாக, சவூதி அரேபிய அரசாங்கத் தரவு தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.
கோலாலம்பூரில், தமிழ் முஸ்லிம்கள் கட்டியெழுப்பிய பாரம்பரிய பள்ளிவாசல், மஸ்ஜிட் இந்தியா என்ற பெயரில் தலைநகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. இந்தப் பள்ளிவாசலின் தலைமை இமாம் டாக்டர் எஸ்.ஏ. செய்யது இபுறாகிம் அல்புகாரி, ஹஜ் பெருநாள் குறித்த பெருமையை குமரியுடன் பகிர்ந்து கொண்டார்.
ஹஜ் பெருநாள், மனித குலத்திற்கு பல தத்துவங்களை உணர்த்துகிறது; உலகின் எட்டுத் திக்கிலிருந்தும் மில்லியன் கணக்கான முஸ்லிம் பெருமக்கள், இறைவனின் பேராலயம்-இந்த உலகில் முதன்முதலில் மெக்காவில் நிறுவப்பட்ட காஃபதுல்லா ஆலயத்திற்கு வருகை மேற்கொள்கின்றனர்.
ஐந்து கடமைகளில் ஐந்தாவது கடமையாக, ஒவ்வொரு முஸ்லிமும் இங்கு வரவேண்டும் என்பதை இறைவனே வகுத்துள்ளான்;

இனம்-மொழி-தேசம்-நிறம் உள்ளிட்ட அனைத்து வேறுபாட்டையும் கடந்து அனைத்து முஸ்லிம்களும் சமம் என்னும் சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாக எல்லா முஸ்லிம் மக்களும் மதினாவில் ஒன்றுகூடும் ஏற்பாட்டை இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
தவிர, ஹஜ் யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆன்மிக சமன்பாட்டையும் சமூக சமத்துவத்தையும் பணிவையும் பிரதிபலிக்கும் வகையில் இடுப்பிற்குக் கீழொன்று மேலொன்று என இரு எளிய வெள்ளாடையை மட்டும் அணிகின்றனர்; ஆண் யாத்ரீகர்கள் அணியும் ‘இஹ்ராம்’ எனப்படும் எளிய, வெள்ளை நிற ஆடை, சமூக அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
தைக்கப்படாத இவ்விரு ஆடைகளை அணிவதன்மூலம், ஒரு மனிதன், தான் வாழும் காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் பொன்னையும் பொருளையும் பெற்றிருந்தாலும் இறந்துவிட்டால், அதன்பின் ஒன்றும் கூடவராது என்பதை நினைவுறுத்தவே இறைவன் வகுத்த ஏற்பாடு இது என்று இமாம் செய்யது இபுறாகிம் தெரிவிக்கிறார்.
மனிதன் மண்ணறையை தஞ்சம் அடையும் காலத்தில், அவன் சேர்த்துவைத்த பணமோ, நிலைநாட்டிய அதிகாரமோ எதுவுமே கூடவராது; வெறுங்கை-யுடன்தான் செல்வோம் என்பதை நினைவுபடுத்தும் விதமாக வெள்ளை ஆடையைப் போர்த்தி இறந்த முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வார்கள். மொத்தத்தில் எளிமையையும் தூய்மையையும் வெளிப்படுத்தவே வெள்ளாடை அணிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில்தான் ஹஜ் சடங்கின்போது இரு எளிய வெள்ளுடையை அணிவது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இறைவனின்முன் அடியார்களாகிய மக்கள் அனைவரும் சமம் என்பதுதான் இந்தச் சங்கின் முக்கிய கோட்பாடு.
இறைவன் ஒருவன்தான் ‘தக்பீர்’; மிகவும் பெரியவன்; ஹஜ் கிரியையின்போது, அந்த அமல்களை நிறைவேற்றும்பொழுது உச்சரிக்கக்கூடிய ‘அல்லாகு அக்பர்’ என்னும் வாசகம், இறைவன் ஒருவனே எல்லாவற்றிலும் பெரியவன் என்பதை நிலைநாட்டும்.
இதில் பொதிந்துள்ள உண்மையான கருத்து, மக்கமாநரில் கூடுகின்ற முஸ்லிம்களில் பணக்காரரும் இருப்பார்; ஏழையும் இருப்பார்; தமிழரும் இருப்பார்; அரேபியரும் இருப்பார்; ஆங்கிலேயரும் இருப்பார்; ஆப்பிரிக்கரும் இருப்பார்; வெளுத்தவர்-கருத்தவர்-நம்மைப் போன்ற மாநிறத்தவரும் இருப்போம்; உயர் அதிகாரியும் இருப்பார்; ஏழைத் தொழிலாளியும் இருப்பார்; அரசரும் இருப்பார்; ஆண்டியும் இருப்பார்; எவராக இருந்தாலும், ‘இறைவா நீதான் மிகப் பெரியவன்; மாந்தர்களாகிய நாங்கள் அனைவரும் உன்முன் சமம்’ என்பதை எடுத்துரைப்பதுதான்.

தர்க்கத்தில் ஈடுபடக்கூடாது; கோபத்தை அடக்க வேண்டும்; அன்பையும் பணிவையும் முந்நிறுத்த வேண்டும் என்னும் ஒழுக்கத்தை ஹஜ் யாத்திரை கற்றுத்தரும்; நாம் எவ்வளவுதான் நிதானத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலும், வாழ்க்கையில் ஓரோர் வேளையில், நமக்கு அறிந்தவர்கள்-குடும்ப உறுப்பினர்கள்-நண்பர்கள்மீது நாம் கோபதாபம் கொள்வோம்; ஆனால், மதினாவிலே காஃபதுல்லா ஆலயத்தில் இலட்சக் கணக்கானோருடன் ஒன்றாகக் குழுமியிருக்கும் வேளையில் நம் இடப்பக்கத்தில் ஆப்பிரிக்கர் இருப்பார்; வலப்பக்கத்தில் சீனர் இருப்பார்; என்ன நடந்தாலும் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் எவர்மீது சங்கடமோ-வருத்தமோ அடையாத பக்குவத்தை ஹஜ் யாத்திரை கற்றுத்தரும்.
இது இறைவனின் கட்டளையாக குர் ஆன் 2-ஆவது அத்தியாயம் 197-ஆவது வசனத்தில் வகுக்கப்பட்டுள்ளது.
ஹஜ் சடங்குகள் ஒவ்வொன்றும் இப்ராகிம் நபியையும் அவரின் குடும்பத்தினரையும் நினைவுபடுத்தக்கூடியதாக அமையும். இப்ராகிம் நபி அவர்களுக்கு இறைவன் பலவித சோதனைகளைக் கொடுத்தான்; உதாரணத்திற்கு, ஒரிறைக் கொள்கையை சொன்னதற்காக அவர் தண்டிக்கப்பட்டார்; தன் குடும்பத்தினரை பாலைவனத்தில் விட்டுவிட வேண்டும் என்று இறைவன் சொன்னான்; அதையும் இப்ராகிம் நபி நிறைவேற்றினார்;
இப்ராகிம் நபி, தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய ஒரே மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுவதைப் போல தொடர்ந்து மூன்று நாட்கள் கனவு கண்டார். தான் ஒரு நபி(இறைத் தூதர்) என்பதால், அந்தக் கனவை உண்மை என கருதி, இது இறைவனுடைய கட்டளையாக இருக்குமென எண்ணிக் கொண்டு, மகனை அறுத்து பலியிடுவதற்காக அழைத்துச் சென்றார்.
தவமிருந்து பெற்ற ஒரே மகனான இஸ்மாயிலை பலிகொடுக்க இப்ராகிம் நபி தயாரானார். இந்த வேளையில், இப்ராகிம் நபியின் மனைவி ஹாஜ்ரா-வும் தன் ஒரே மகன் பலியாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளவில்லை; தன் கணவர், இறைவனின் கட்டளையைத்தான் நிறைவேற்றப் போகிறார் என்றெண்ணி, அவரும் கணவரை பின்தொடர்ந்தார்.
மகன் இஸ்மாயிலும், நம்முடைய வாப்பா(அப்பா), தன்னைப் பலியிட அழைத்துப் போகிறாரே என்று கவலைகொள்ளவில்லை; இறைவனின் கட்டளை அதுவாக இருந்தால், அவன் சித்தப்படியே நடக்கட்டும் என்று தாயையும் தந்தையையும் பின் தொடர்ந்தார்.
உண்மையில் இறைவனின் நாட்டம் அதுவல்ல; தன் அடியாரான இப்ராகிம் நபி, எந்த அளவிற்கு தன் கட்டளையை நிறைவேற்றுகிறார் என்பதை அறிவதற்கான சோதனையே இந்த ஏற்பாடு.
தான் வைத்த சோதனையில் இப்ராகிம் நபி வென்றுவிட்டதை அறிந்து மகிழ்ந்து, இப்ராகிம் நபி, தன் மகனை பலியிட வேண்டாம் என்று வானவர் தலைவர் ஜிப்ரீல் மூலம் சொல்லி அனுப்பிய இறைவன், வானத்தில் இருந்து ஓர் ஆட்டையும் இறக்கி அருளினான்; அந்த ஆடுதான் வெட்டி பலியிடப்பட்டது; இதன் அடிப்படையில்தான், ஹஜ் அல்லது பக்ரீத் பண்டிகையின்போது, குர்பானி கொடுக்கப்படுகிறது. பலியிடப்பட்ட விலங்கை பகிர்ந்துண்ணும் பாங்கால், ஒற்றுமை வளர்கிறது.

இதன் உள்ளார்ந்த பொருள், தன் அடியார்கள் ஆசைக்கும் பாசத்திற்கும் ஆட்பட்டு, அதிகாரம்-பொன்-பொருள்மீது பற்றுகொண்டு நிலையில்லா உலக வாழ்வில் மையல் கொள்கிறார்களா அல்லது இறைவன்தான் பெரியவன் என்பதை உணர்ந்து இறைக் கட்டளையை மதிக்கிறார்களா என்பதை அறிவதற்காக வைத்த சோதனைதான் இது என்று இமாம் செய்யது இபுறாகிம் ஹஜ் யாத்திரைக்கான மூலத்தை விவரித்தார்.
அதைப்போல இறைவனின் ஆலயம் காஃபதுல்லாவைச் சுற்றி வலம்வருவது எதைக் குறிக்கிறதென்றால், ஒருவன் தன் வாழ்நாளின் மையப் புள்ளியாக இறைவனைக் கருத வேண்டும் என்பதாகும்.
ஒவ்வொரு நாளும் என்றில்லாமல் ஒவ்வொரு இமைப்பொழுதும், மனிதனுக்கு இறைவனைப் பற்றிய சிந்தனை அகலாது-விலகாது தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்; அதன்வழி, அடியார்தம் மனதில் இறையச்சம் நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மதினாவில் உள்ள காஃபதுல்லா ஆலயத்தைச் சுற்றிவர வேண்டும் என்னும் ஏற்பாடு;
ஹஜ் யாத்திரைச் சடங்கின்போது, சைத்தான்மீது கல் எறிதல் என்னும் கிரியை அல்லது அமலை ஒவ்வொரு ஹஜ் பயணியும் நிறைவேற்ற வேண்டும். மூன்று சைத்தான்கள்மீது கல் எறிவார்கள்; அதற்காக, அங்கு மூன்று பெரிய கற்களை- பாறையைப் போல வைத்திருப்பார்கள்.
மூன்று சைத்தான்களை பிரதிபலிக்கும் வகையில் அங்கு நிறுவப்பட்டிருக்கும் மூன்று பெருங்கற்கள்மீது ஹஜ் யாத்திரிகள் அனைவரும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சிற்சிறு கற்களை எடுத்து ஒவ்வொரு நாளும் வீசுவார்கள்.
எதற்காக மூன்று சைத்தான்கள்மீது கற்கள் வீசப்படுகின்றன என்றால், முதல் சைத்தான் இப்ராகிம் நபி, தன் மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க அழைத்துச் சென்றபோது, குறுக்கே வந்து உன் மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க வேண்டாம் என்றுகூறி அவரின் மனதை கலைக்கப்பார்ப்பான்;
இப்ராகிம் நபியோ, இறைவனின் ஆணையை நிறைவேற்ற இருக்கும் தன் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த முனையும் சைத்தானை விரட்டி அடிக்க, அச்சைத்தான்மீது கல்லை எடுத்து விசினார்.
அடுத்து, இப்ராகிம் நபியின் மனைவியிடம் சென்ற சைத்தான், “உங்களுக்கு சங்கதிதெரியுமா? உங்கள் கணவர், உங்கள் மகனை எதற்காக அழைத்துச் செல்கிறார் தெரியுமா? ஏதோ என்னவோ இறைவனின் கட்டளையாம்; அதன்படி பலிகொடுப்பதற்காகத்தான் உங்கள் மகனை அவர் அழைத்துச் செல்கிறார் என்பது தெரியுமா என்ற கேட்டவுடன், இறைவனின் கட்டளையைத்தானே நிறைவேற்ற இருக்கிறார். இறைவனின் சித்தம் அதுவானால், அது, அப்படியே நடக்கட்டும்; முதலில் நீ இங்கிருந்து போ என்று இப்ராகிம் நபியின் மனைவியும் கல்லை எடுத்து சைத்தான்மீது வீசி அவரும் விரட்டினாராம்;
அப்படியும் சளைக்காத சைத்தான், அடுத்து மகன் இஸ்மாயில் நபியிடம் சென்று, உன்னுடைய வாப்பா(அப்பா) எதற்காக உன்னை அழைத்துச் செல்கிறார் தெரியுமா? உன்னை அறுத்து பலிகொடுக்கத்தான் என்று அந்த மகனின் மனதையும் கலைக்கப்பார்த்த நேரத்தில், “என்னை அழைத்துச் செல்வது என்னுடைய வாப்பா; உடன் வருவது என் அன்புத் தாயார்; எல்லாம் இறைவனின் சித்தப்படிதான் நடைபெறுகிறது; இறைவனின் கட்டளை எதுவோ அதை ஏற்பதுதான் என் கடமையும்; அதனால், முதலில் நீ இங்கிருந்து ஓடு” என்று கூறி, அவரும் சைத்தான்மீது கல்லெடுத்து வீசினாராம்.
இதன் அடைப்படையில்தான், மூன்று சைத்தான் கற்கள் வைக்கப்பட்டு, அவற்றின்மீது ஹஜ் யாத்திரீகர்கள் கல்லெறியும் முக்கிய சடங்கு இடம்பெறுகிறது.
உண்மையில், அந்தக் கற்களில் சைத்தான் இருக்கிறானா என்றால், இல்லை என்பதுதான் பதில்; அதேவேளை, அந்த சைத்தான் பெருங்கற்கள்மீது, ஹாஜி’க்கள் பொடிக் கற்களை வீசும்பொழுது, தங்கள் மனதில் இருக்கும் கோபதாபங்கள், விரோதம், குரோதம் உள்ளிட்ட பகை உணர்வு, அழுக்காறு உள்ளிட்ட தீய குணத்தை-கெட்ட எண்ணத்தை தம்மனதிலிருந்து அகற்றும் விதமாகத்தான் சைத்தான்மீது கல்லெறியும் அமல் அல்லது செயல் இடம்பெறுகிறது என்று இமாம் செய்யது இபுறாகிம் மேலும் விளக்கம் அளித்தார்.
ஹஜ் யாத்திரையின் மையப் புள்ளியாக காபா இருந்தாலும் அந்த வழிபாட்டின் உச்சகட்டம் மெக்கா நகரத்துக்கு வெளியே உள்ள பாலைவனப் பகுதியில் அரஃபா என்று அழைக்கக்கூடிய ஓரிடம் இருக்கிறது; அது மலை சூழ்ந்த இடம்.
அங்கு, சூரியன் தோன்றியதிலிருந்து மறையும்வரை ஒரு நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஒன்றுகூடி, பிரார்த்தனை செய்து, தியானத்தில் ஈடுபட்டு, குர்ஆன் ஓதி வழிபடுகின்றனர். மனம் உருகி அழுது புலம்பி பிரார்த்தனையில் ஈடுபடும் அந்த வேளையில் இறைவனின் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று ‘ஸல்லல்லாகுவலைகுவ ஸல்லம்’ நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்.

இந்தப் பிரார்த்தனையின்போது, ஒவ்வொரு ஹாஜியும் தான்புரிந்த தவறுகளை எல்லாம் வெளிப்படையாக இறைவனிடத்தில் சொல்லி, பாவமன்னிப்பு பெற்று, அன்று பிறந்த புது மனிதனைப் போல இல்லம் திரும்புவார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி, முகம்மது நபி தன் கடைசி பிரசங்கத்தை நிகழ்த்திய இடமாக கருதப்படும் இந்த புனித தலம், இஸ்லாத்தில் ஆழமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்றும் இமாம் செய்யது இபுறாகிம் குறிப்பிட்டார்.
ஹஜ் யாத்திரையின்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்த பாலின பாகுபாடும் கடைபிடிக்கப்படுவது இல்லை. அதேவேளை, பெண் யாத்ரீகர்கள் ஆண்களைப் போன்ற வெள்ளை ஆடையை அணிவதில்லை; பெண்கள் தங்கள் உடலை முழுவதும் மறைக்கும்வண்னம் தளர்வான ஆடைகளை அணியலாம். எப்பொழுதும்போல தலையில் முக்காடிட்டு ஹஜ் சடங்கின்போது முகம் மறைக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது மரபு!


