
மலேசிய கல்வி முறையில் மறுமலர்ச்சி தேவை என்று பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்தி உள்ளார்.
பன்னாட்டுக் கல்வித் தரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் மாணவர்களிடையே சமய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, உலகளாவியப் பார்வை, பரந்துபட்ட கல்வி ஞானம், இளம் வயதிலேயே மாணவ சமுதாயத்தில் நல்லிணக்க எண்ணம் உள்ளிட்ட பண்பு நலன்களை வளர்க்கும் வகையில் கல்வி முறையில் மாற்றம் தேவை என்று நேற்று தலைநகரில் மக்கள் முன்னேற்றக் கட்சி-பிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்குப்பின் நடத்திய செய்தியாளர்க் கூட்டத்தின்போது பேசினார்.
இந்து கோவில்கள் குறித்து Kuil Haram(சட்டவிரோத வழிபாட்டுத்தலம்) என்று பயன்படுத்தப்படும் சொற்றொடர், இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் உள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் தலைதூக்கியபோது இந்த கோவில் திடீரென Kuil Haram என்று முத்திரை குத்தப்பட்டது. அதைத் தொடர்ந்தும், நாட்டில் உள்ள பல கோவில்கள் சட்டவிரோத கோவில்கள் என்று கூறப்பட்டது. தமிழர்களின்பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களை இவ்வாறு வகைப்படுத்துவது, மிகவும் கடுமையானது என்று அவர் சொன்னார்.
பினாங்கு மாநிலத்தில் வீடுகளை வாங்கும் இந்திய முஸ்லிம் மக்களுக்கு 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது; இதை தாங்கள் வரவேற்கும் அதேசமயம் பி-40 பிரிவு குடும்பங்களை சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வசதி குறைந்த அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அனைவரும் மலேசிய கூட்டுச் சமுதாயத்தில் ஐக்கியமானவர்கள் என்பதால், இன-மத அடிப்படையில் பாகுபாடுகாட்ட வேண்டிய அவசியம் இல்லை; இதை பினாங்கு மாநில அரசு கருத்தில் கொள்ளும் என்று நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிபிபி துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், இளைஞர் அணித் தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, பினாங்கு மாநில தலைவர் ஜெயராமன், ஜொகூர் மாநிலத் தலைவர் கிருஷ்ணன், மலாக்கா மாநிலத் தலைவர் ஜெயசீனா, சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட உச்சமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


