Saturday, April 11, 2026

கல்வி மறுமலர்ச்சி தேவை! பிபிபி கட்சியின் தேசியப் பார்வை!

மலேசியாவின் இன்றைய கல்வி முறை, உலகத் தரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பிபிபி கட்சி அண்மையில் விடுத்துள்ள கோரிக்கை, அக்கட்சியின் தொலைநோக்குப் பார்வையையும், நாட்டின்மீது அக்கட்சி கொண்டிருக்கும் பற்றுதலையும் வெளிப்படுத்துகிறது.

இடைநிலைப் பள்ளி, அனைத்து மாணவர்களும் சங்கமிக்கும் இடம்; இனம்-தாய்மொழி-சமயம்-பண்பாடு உள்ளிட்ட எல்லைகளைக் கடந்து, நாம் அனைவரும் மலேசியர்கள்-மலேசிய மாணவர்கள் என்னும் தேசிய உணர்வையும் உந்துதலையும் ஏற்படுத்தும் இடம்;

ஆனால், அத்தகைய நிலையை இன்றைய இடைநிலைப் பள்ளிகள் எட்டி இருக்கின்றவா என்றால், இல்லை என்பதுதான் உண்மை.

மலாய், சீன, தமிழ் மாணவர்கள் என, இன ரீதியாகப் பிரிந்து தனித்தனி குழுவினராகத்தான் பழகுவார்கள். பள்ளி சிற்றுண்டிச் சாலை முதல் விளையாட்டுத் திடல் வரை இத்தகையப் போக்கைக் காணமுடியும்.

காரணம், இதற்கான அடிப்படை ஆரம்பப் பள்ளியிலேயே கட்டமைக்கப் படுகிறது; குறிப்பாக, சமயப் பள்ளியிலும் தேசியப் பள்ளியிலும் ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு, இடைநிலைப் பள்ளிக்கு வருகின்ற ஒரு மாணவன், தான் ஒரு மலேசிய மாணவன் என்னும் தகுதியுடன் வருவதில்லை; தான் இன்ன சமயத்தைச் சேர்ந்தவன்; தனக்கான அடையாளம் அதுதான் என்னும் எண்ணம் இளம் வயதிலேயே அவனுக்கு ஊட்டப்படுகிறது.

அதைப்போல தமிழ்ப் பள்ளியில் பயிலுகின்ற மாணவர்களும், சமயம்-இனம் சார்ந்த தனி பண்புநலனை மனதில்கொள்ளும்படியான நிலைக்கு ஆட்படுகின்றனர்.

இத்தகையக் கூறுகள், சீனப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிகமாக உள்ள நிலையில், இவர்கள் அனைவரும் இடைநிலைப்பள்ளிக்கு வரும்போது, ஏதோவொரு வகையில், சமய தாக்கமும் இனப் பற்றும் கொண்டவர்களாகத்தான் வருகின்றனர்.

இந்த நிலை, உயர்க்கல்வி நிலையம்வரை நீடிக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள்கூட, தேசிய சிந்தனையின் அடிப்படையிலோ அல்லது மாநில-வட்டார அடையாளத்தின் அடிப்படையிலோ அன்றி, மத அடிப்படையில்-தான் சங்கத்தை அமைக்கின்றனர்; அவ்வண்ணமே இயங்குகின்றனர்; தேர்தல் வாக்களிப்பிலும் இது எதிரொலிக்கிறது.

சரித்திர காலத்தில் செயல்பட்ட நாலந்தா பல்கலைக்கழகத்தின் பெருமையை உணர்ந்து சீன தத்துவ ஞானியரெல்லாம் ஆயிரக் கணக்கான மைல் தொலைவை கால்நடையாகவே கடந்து வந்து ஞானம் நாடிய வரலாறு அன்றைய உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு இருந்தது.

இன்றோ, தத்துவம் என்ற பாடமே தொலைந்துவிட்டது; எங்கு பார்த்தாலும் எந்த இடத்திலும் மதம்தான் துருத்திக்கொண்டு முன்னேவந்து நிற்கிறது.

வரலாற்றுப் பாடம் என்றால், வட்டார சுல்தானியரைப்பற்றித்தான் நம் மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர். நெப்போலியன், அலெக்சாண்டர், அலெக்சாண்டரின் குரு அரிஸ்டாட்டில், கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ், சீன மேதை கன்ஃபூசியஸ், தமிழ் மேதையர் கணியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், இவர்களுக்கு முந்தைய தொல்காப்பியர் போன்றோரை தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்கள் அறிந்திருக்கவில்லை.

சைவ சமயம் என்னவென்று தெரியவில்லை; வள்ளலாரையும் புரியவில்லை; ஒன்றேகால் மணி என்றால் எத்தனை நிமிடங்கள் என்று தெரியவில்லை. அதம பொது மடங்கு(Least Common Factor) என்றால் என்னவென்று அடியோடு தெரிவதில்லை.

தேசியப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பூஜாங் பள்ளத்தாக்கின் அசல் வரலாறும் இராஜேந்திர பெருமன்னனின் குறிப்பும் இரட்டடிப்பு செய்யப்படுகின்றன; மெர்டேக்கா காலத்திற்கு முந்தைய ஒன்றுபட்ட மலாயாவைப் பற்றியோ, அக்காலத்தில் மலாயா பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தியர்களும் சீனர்களும் ஆற்றிய அருந்தொண்டு பற்றியோ சொல்லிக் கொடுப்பதில்லை.

மாணவர்கள், தன்னிச்சையாக இயங்கும் ஆற்றலையும் துணிவையும் இன்றைய கல்வி முறை வழங்குவதற்குப் பதிலாக, தொட்டதற்கெல்லாம் அடுத்தவரை சார்ந்திருக்கும் தன்மையை அதிகமாக ஊட்டுகிறது.

பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்ப நம் மாணவர்கள் உருவாக வேண்டுமென்றால், தேசிய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா

ஜூன் 16-ஆம் நாள், காலமறிந்து முன்வைத்த கோரிக்கை தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது. இதில், அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக ஆளுந்தரப்பு அக்கறைக் காட்டுவது நலம் பயக்கும்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை