
மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 43-ஆவது தேசிய பேராளர் மாநாடு எதிர்வரும் 28 ஜூன் 2025, சனிக்கிழமை காலை 8:00 முதல் மாலை 5.00 மணி வரை சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் உள்ள யு.ஒ.சி. கிராண்ட் மண்டபத்தில் மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 200 பேராளர்கள் அருள்நிலையங்களான கிளைகளைப் பிரதிநிதித்துப் பங்கேற்க உள்ளனர்.
இப்பேராளர் மாநாடு இரண்டு அங்கங்களாக நடைபெறவுள்ளது. முதல் அங்கத்தில் நாட்டிலுள்ள இந்து சமயம், தமிழ்மொழி, மற்றும் சமூகம் சார்ந்த அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மாமன்ற தோற்றுநர்கள், ஆலோசகர்கள், அறங்காவலர்கள், பார்வையாளர்கள் முதலிய அனைவரும் காலை மணி 8:00 மணியளவில் நடைபெறும் மாநாட்டுத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

மாநாட்டுத் தொடக்க விழாவில் விருதளிப்பு நிகழ்வும் நடைபெறும். இப்பாராட்டு நிகழ்வில் பிரத்தியேகமாக மொழி, சமயம், சமூகம் முதலிய துறைகளில் தன்னலமற்ற சேவையாற்றி, இனத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த மூவருக்கு மலேசிய இந்துதர்ம மாமன்மன்றத்தின் தேசிய விருதான ‘தர்ம ரத்னா’விருது வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட உள்ளனர்.
தர்ம ரத்னா விருது பெறுபவர்கள்:
- தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர், டத்தோ பா.சகாதேவன்,
- மலேசியத் திருவருள் தவநெறி மன்றத்தின் மேனாள் தலைவர் நடேசன் முருகேசு,
- முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் தோற்றுநர்,
முத்து நெடுமாறன் ஆகியோர் அம்மூவர்
மாநாட்டுத் தொடக்க விழாவில் மற்றொரு முக்கிய அங்கமாக பல ஆண்டுகளாக கடும் சவால், போராட்டம், துன்பத்தை எல்லாம் எதிர்கொண்டு அவை அனைத்தையும் முறியடித்து, தன்னுடைய முன்னாள் கணவரால் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட தன் மூன்று பிள்ளைகளையும் மீட்டெடுத்து அவர்களை மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்திற்குத் திரும்பச் செய்த தனித்துவாழும் தாயாகிய திருமதி லோ சியூ ஹொங்-உம் சிறப்பு செய்யப்படவுள்ளார்.

லோ சியூ ஹொங், துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் தர்மத்திற்காகப் போரடி வெற்றி கண்டது இந்து சமயத்தினரிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சிறப்பித்துப் போற்றும் வகையில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் ‘இந்து எழுச்சித் தாய்’ எனும் சிறப்பு விருதினை வழங்கி பாராட்டவிருக்கின்றது என்பதை பெருமையுடன் அறிவிக்கின்றோம்.
மேலும், மாமன்றத்திற்கும் இந்து தர்மத்திற்கும் ஆற்றிய தன்னலமற்ற திருத்தொண்டினை அங்கீகரித்து மாமன்ற உறுப்பினர்களாகிய அறுவருக்கு ஆண்களாயின் ‘தர்ம மாமணி’ விருதும் பெண்களாயின் ‘தர்ம பூஷணி’ விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட உள்ளனர்.
அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற மாமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளைச் சிறப்புச் செய்யும் வகையில் அவர்களுக்கு சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கப்படவுள்ளது
மதிய உணவிற்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது அங்கத்தில், மாநாட்டு நிரலில் 2025–ஆம் முதல் 2028-ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுத் தவணைக்கான புதிய தேசியத் தலைவர், தேசிய துணைத் தலைவர், தேசிய உதவித் தலைவர்கள், மற்றும் தேசியப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தலும் நியமனங்களும் நடைபெறவிருக்கின்றன.
பேராளர் மாநாடு குறித்த மேல் விவரங்களுக்கும் தங்களின் வருகையை உறுதி செய்துகொள்வதற்கும் மாமன்றத்தின் தேசியத் துணைத்தலைவர் திரு.ரிஷிகுமார் வடிவேலுவுடன் (012-2016115) தொடர்பு கொள்ளலாம் என்று மலேசிய இந்து தர்ம மாமன்ற தலைமையகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.


