
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி 20 வயது மனிஷா ப்ரியெட் கோர் அக்காரா கொலை வழக்கில் அதிரடி புலனாய்வில் இறங்கிய காவல்துறையினர், இந்த கடும் குற்றம் தொடர்பில் அதிரடியாக மூவரை கைது செய்து இன்று நீதிமன்றத்திலும் நிறுத்தியதற்கு பிபிபி கட்சி சார்பில் பாராட்டுவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா தெரிவித்துள்ளார்.
19க்கும் இருபது வயதுக்கும் உட்பட்ட இம்முவரும் ஜொகூர் பாரு, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கெமெஞ்சே ஆகிய இடங்களில் நேற்று வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கும் இன்று விடியற்காலை இரண்டு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வளைத்துப் பிடிக்க பட்டதாக சிப்பாங் மாவட்ட காவல் படை தலைவர் Norhizam Bahaman தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் சம்பந்தப்பட்ட மூவரும் சிப்பாங் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், போலீசாரின் மேல்விசாரணை தடங்கலின்றி தொடர்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட மூவருக்கும் ஜூலை மூன்றாம் நாள் வரை நீதிமன்ற காவல் அனுமதி அளிப்பதாக நீதிபதி Azaraorani Abdul Rahman உத்தரவிட்டுள்ளார்.
சைபர் ஜெயா தங்கும் விடுதியில் 20 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது; மனதை நெருடுகிறது என்று லோகபாலா முன்னதாக தெரிவித்திருநதாதார்.
இரக்கமற்ற இந்தக் கொடுமை, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த நாகரிக சமூகமும் இத்தகைய பாதகத்தை அனுமதிக்காது.
நாட்டின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய கொடுமை மிகுந்த வேதனை அளிப்பதாகவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் லோக பாலா தெரிவித்தார்
இந்த விவகாரத்தில் உடனடியாக துப்பு துலக்கி சந்தேக நபர்களைக் கைது செய்துள்ள காவல் துறையினரை சமூகம் பாராட்ட வேண்டும்; பி பி பி பி கட்சியும் பாராட்டுகிறது.
அதேவேளை சம்பந்தப்பட்ட மாணவியை இழந்து ஆறாத் துயரில் மூழ்கியுள்ள பெற்றோர், உறவினர் நட்பினர் அனைவருக்கும் பிபிபி கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் டத்தோடாக்டர் லோக பாலா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


