
நாட்டின் தலைமை நிருவாகப் பொறுப்பை வகிக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம், அதே பிரதமர் பதவியின் மூலம் தான் எதிர்கொண்டுள்ள பாலியல் சிவில் வழக்கில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த கொஞ்சமும் கூச்சமின்றி முனைப்பு காட்டுவதால், பிரதமர் துறை அலுவலகத்திற்கும் நீதித் துறை நடைமுறைக்கும் இடையே கொள்கை முரண் அல்லது நலன் முரண்பாடு இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. அதனால், பிரதமர் பொறுப்பில் இருந்து அன்வார் உடனே விலக வேண்டும்; குறைந்தபட்சம் விடுப்பில் செல்ல வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவரும் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் சாசனத்தின் மேன்மை, நீதித் துறையின் சுதந்திரம், அரச நிருவாக அலுவலகத்தின் தூய்மை ஆகியவற்றில் பற்றுகொண்ட ஒரு குடிமகன் என்னும் அடிப்படையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாக பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது விடுப்பில் செல்ல வேண்டும் என்று இதற்கு முன்னும் விட்ட அறிக்கைகள் ஒருபுறம் இருக்க, கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதியின் சட்ட ஆய்வாளர் ஒருவரால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை புகார் தொடர்பான அண்மைய வெளிப்பாடுகள், நீதி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் கொண்டிருந்த நம்பிக்கை-வைத்திருந்த நன்மதிப்பில் ஏற்கெனவே பழுது ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அது இன்னும் மோசமடைந்துள்ளது.
நீதித்துறை நியமனங்கள் குறித்து மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் பரிந்துரை செய்யும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சாசனம் பிரிவு 122-பி, பிரதமருக்கு அளிக்கிறது. அதே நீதித் துறையின் அணுகூலத்தை பிரதமர் எதிர்பார்த்து இருப்பதால், அவர் பொறுத்தமான நியமனத்தைச் செய்வாரா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
எந்தவொரு பதவியும் அரசியலமைப்பை விட உயர்ந்தது அல்ல என்பதால், பொது அதிகாரத்தில்/பதவியில் இருப்பவர்களின் செயல்களை உறுதிசெய்யக் கூடியது நேர்மை ஒன்றுதான். தவிர, பிரதமர் பொறுப்பில் இருப்பவர், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்துவதுடன், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டிய கடப்பாடும் இருக்கிறது.
இத்தகைய சூழலில் நீதித்துறை நியமனங்கள் குறித்து மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதில் பிரதமரின் பங்கு மிக முக்கியமானது. மேலும், தனிப்பட்ட நலன் அல்லது நலன் மோதல் குறித்த எந்த சந்தேகமும் எழாமல் இருக்க வேண்டும்.

கடந்த மே மாதத்தில் நடைபெற்றதாக நம்பப்படும் நீதித்துறை நியமன ஆணைய-JAC கூட்டத்தில், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டதாக அந்த போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு, சம்பந்தப்பட்ட நீதிபதி இதற்கு முன்னர் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றியதால் அதன் தொடர்பில் ஏற்படும் சாத்தியமான தவறான நடத்தைகளை உள்ளடக்கி உள்ளது; இது, கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 125 (3) இன்கீழ் ஒரு தீர்ப்பாயத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடும்; சட்ட ஆய்வாளரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகவும் மறுக்காமல் இருப்பதையும் இது குறிப்பிடுகிறது.

சட்ட ஆய்வாளர் முவைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, கசிவை விசாரிக்க காவல்துறைக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறார்; இது அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கை, குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அவற்றை நீர்த்துப்போகச் செய்வதற்கான ஒரு முயற்சியாக (பொதுமக்களால்) பார்க்கப்படலாம். இது நீதித்துறை மற்றும் நீதிபதி நியமன செயல்முறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது.
இந்த உண்மைகளே போதுமானவை.
இதில் அரசியலமைப்பு ரீதியாக கவலைதரக்கூடியது என்னவென்றால், நாட்டின் கிட்டத்தட்ட 2/3 நீதித்துறை பதவிகள் அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில் காலியாகப் போகிற நிலையில் இந்த முக்கிய நியமனங்களில் பிரதமரின் அரசியலமைப்பு நிலை மிகவும் முக்கியமானது; மேலும் பிரதமரின் முன்னாள் உதவியாளர் முகமது யூசோஃப் ராவுத்தர் தாக்கல் செய்த பாலியல் துன்புறுத்தல் சிவில் வழக்கு மற்றும் பிரதமர் பதவி வகிப்பவருக்கு எந்தவொரு வழக்கில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டிய அவசியம் குறித்து கூட்டாட்சி நீதிமன்றத்தில் பிரதமர் குறிப்பிட்ட 8 அரசியலமைப்பு கேள்விகள் உட்பட, இந்த வழக்கில் இருந்து பிரதமர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும் இந்த நேரத்தில் இவை அனைத்தும் நடக்கின்றன.

பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளபடி, இதுபோன்ற தனிப்பட்ட சட்ட உரிமைகோரலை முன்வைக்கும் அதேவேளையில் பிரதமர் பதவியிலும் தொடர்வது, பொது அலுவலகத்தில் நலன் மோதல் மற்றும் சாத்தியமான தவறான செயல்களுக்கான வாய்ப்பை இந்த வழக்கு அட்டியின்றி முன்வைக்கிறது.
நீதித்துறை நியமனங்கள் குறித்து மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதில் பிரதமரின் பங்கு ஏற்றுக்கொள்ள முடியாததுடன், நீதித்துறை நிலைநிறுத்த வேண்டிய நடுநிலைமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
யூசோஃப் ராவுத்தர் விஷயத்தில்-“உயர் பதவியில் இருப்பவர்கள் அரசியலமைப்பு கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற சிவில் வழக்குகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பிரதமர் முன்வைத்த விவாதம், குற்றத்தை ஒப்புக்கொள்வதாகப் பொருள்படுகிறது. கூட்டாட்சி அரசியலமைப்பு சாசனம் பிரிவு ‘122-பி’இன்படி, பிரதமரின் நிலை முரண்படுகிறது. பிரதமரின் பாரபட்சமற்ற தன்மையும் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மாமன்னருக்கு அளிக்கும் பரிந்துரைகளும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கலாம்.
பிரதமர் என்பவர் அரசியலமைப்பு அதிகாரத்தை மட்டுமல்ல, பொதுமக்களின் நம்பிக்கையையும் நிலைநாட்டவேண்டியிருக்கிறது; தவிர, நீதித்துறை சம்பந்தப்படாதவராகவும் இருக்க வேண்டும்; அதனால், இப்போதைக்கு, அதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, பிரதமர் உடனே பதவிவிலக வேண்டும் அல்லது விடுப்பில் செல்வதுதான் என்று பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.


