
பல்கலைக்கழக படிப்பிற்கு முந்தைய புகுமுகக் கல்வியான மெட்ரிகுலேஷன் கல்வியைப் பற்றி மலேசிய இந்திய சமுதாயம் நீண்ட காலம் அறியாமலேயே இருந்தது.
இன்றோடு நூறு வயதை நிறைவு செய்கின்ற துன் மகாதீர் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, அதை கமுக்கமாகவே வைத்திருந்தது.
எஸ் பி எம் தேர்வில் பின்னடைவை சந்திக்கின்ற மலாய் மாணவர்களுக்காக இது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை அவரே பின்னர் தெரிவித்தார்.
மெட்ரிகுலேஷன் படிப்பை பற்றி, ஓரளவுக்கு விவரம் தெரியவந்து, இந்திய மாணவர்கள் அதில் ஆர்வம் காட்டிய பொழுது, அந்த உயர்க்கல்வி புகுமுக வகுப்பில் ஓரளவிற்கு வாய்ப்பு பெற்று வந்தனர்.
2013 மே 5, 13ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் நஜீப்பும் இந்திய சமுதாயத்திற்கு ஓரளவுக்கு வாய்ப்பை வழங்கி வந்தார். 14 வது பொது தேர்தல் நெருங்க நெருங்க, இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு ஆயிரத்திலிருந்து 1,500 ஆக உயர்த்தப்பட்டது.
தேர்தல் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டில் மேலும் 700 இடங்களை அதிகரித்து 2,200 இடங்களாக அறிவித்தார் பிரதமர் நஜீப்.
அந்த 2,200 மெட்ரிகுலேஷன் இடங்களையும் நிரப்புவதற்குள் ஆட்சி மாறிவிட்டது; துன் மகாதீர் இரண்டாவது முறையாக மே பத்தாம் நாள் பதவியேற்றார்.
சீர்திருத்த முழக்கத்தை ஆண்டுக் கணக்கில் கையில் எடுத்த மக்கள் நீதி கட்சி-பிகேஆர், தேசிய முன்னணியையும் அதன் தளபதி அம்னோவையும் குற்றம் சுமத்தையே பதவிக்கு வந்தது.
‘ரீஃபோமாசி’ முழக்கத்தை கையில் எடுத்த பிகேஆர் ஆட்சிக்கு வந்த 2018 முதல் இந்த ஆண்டுவரை மலேசிய இந்திய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்ற உயர்கல்வி வாய்ப்பு, மெட்ரிகுலேஷன் கல்வி குறித்த தகவலை தெரியப்படுத்துவதே இல்லை.

இவர்களிடம் உண்மையும் நேர்மையும் இருந்தால் இந்திய சமுதாய மாணவர்களுக்கு எத்தனை இடங்களை வழங்கி இருக்கிறோம் என்று சொல்வதில் என்ன தயக்கம் இருக்கக்கூடும்?
ப.கமலநாதன் கல்வித்துறை துணை அமைச்சராக இருந்தபொழுது மெட்ரிகுலேஷன் கல்வி குறித்து வாய்கிழிய கத்திய பி கே ஆர், ஜசெக கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது கொலு பொம்மைகளை போல நாடாளுமன்றத்தில் அமர்ந்துவிட்டு செல்கின்றனர்.
இந்திய சமுதாயத்திற்கான மெட்ரிகுலேஷன் கல்வி பற்றியோ அதன் எண்ணிக்கை பற்றியோ வாய் திறக்க அஞ்சிக். கிடக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் அண்மையில் அம்னோ கட்டடத்தில் பி கே ஆர் உதவித் தலைவர்களில் ஒருவரும் தொழில் முனைவோர் மேம்பாடு – கூட்டுறவுத் துறை துறை அமைச்சருமான இரா இரமணன் கலந்து கொண்ட ஒரு செய்தியாளர் கூட்டத்தின் பொழுது, இதைப் பற்றி வினவியதற்கு ஒருவித நமட்டுச் சிரிப்புடன், இந்த விவரம் குறித்து கல்வி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறி நழுவினார்.

நாங்கள் இந்தியர் அல்லர்; எங்கள் இனம் சீக்கியம்; மொழி சீக்கியம்; சமயமும் சீக்கியம் என்று சொல்லி அடையாள அட்டையில்கூட இனம் என்ற இடத்தில் ‘இந்தியர்’ என்னும் அடையாளத்திற்குப் பதிலாக சீக்கியர் என்று பதிவு செய்து கொள்ளும் சமுதாயத்தை சேர்ந்த கோபிந்த் சிங் டியோ அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறார்.
தீபாவளி – பொங்கல் போன்ற இந்தியர்களின்- தமிழர்களின் பண்டிகை மற்றும் விழாக்களில் பங்ரா நடனத்தையும் பானிப்பூரி விற்பனையையும் இணைத்துக் கொள்வதில் முனைப்பு காட்டுகின்ற கோபிந்த் சிங் டியோ, இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு குறித்து அக்கறை காட்டுவாரா என்ன?
அதனால், துணை அமைச்சராக இருந்தாலும் ஓரளவிற்கு செய்தியாளர்களையும் பொது மக்களையும் சந்தித்து வருபவர் ரமணன் என்பதால் அவரிடம் இந்த கேள்வியை கேட்டபொழுது அவரிடம் பதில் இல்லை; காரணம் அதைப்பற்றிய விவரம் அவரிடம் இல்லை; அக்கறை இன்மையால் அது பற்றிய விவரமும் அவரிடம் இல்லை.
நீங்கள்தான் இந்தியரின் பிரதிநிதி; வேறு யாரிடம் இதைப் பற்றி கேட்பது என்று அடுத்த கேள்வியை ரமணனிடம் முன் வைத்த போது, ரமணனின் பிரதிநிதியைப் போன்று குறுக்கே வந்த குமரேசன், மெட்ரிகுலேஷன் கல்விக்காக இப்பொழுதுதான் விண்ணப்பம் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால் இது பற்றிய விவரம் இனிமேல் தான் தெரிய வரும் என்று(ஜூன் 26-இல்)சொன்னார்.
இந்த குமரேசன் சாதாரண குமரேசன் அல்லர்; பினாங்கு மாநிலத்தின் பத்து ஊபான் சட்டமன்ற தொகுதியின் மக்கள் பிரதிநிதி.
2024 கல்வி ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவு கடந்த மே மாதம் 24-ஆம் நாள்
அறிவிக்கப்படுவதற்கு முன்னமே சம்பந்தப்பட்ட மாணவர்கள் மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட உயர்கல்விக்காக UPU மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர்;
எஸ் பி எம் தேர்வு முடிவு அறிவிப்பிற்குப்பின், மெட்ரிகுலேஷன் கல்விக்கான வாய்ப்பும் அறிவிக்கப்பட்டு, வாய்ப்பு கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து அதன்வழி வாய்ப்பு கிடைத்தவர்களும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர்கின்ற இந்த நிலையில் இப்பொழுதுதான் விண்ணப்பம் நடைபெறுகிறது என்று ஒரு சட்டமன்ற உறுப்பினரான குமரேசன் சொல்கிறார் என்றால், சமுதாயத்தின்மீது இவர்களுடைய அக்கறையையும் இந்திய மாணவர்கள் மீதான ஈடுபாட்டையும் என்னவென்று சொல்வது?
நிகழும் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு பற்றி கல்வித் துறையில் தெரிந்த ஒரு சில அதிகாரிகளிடம் கேட்டால் எந்த விவரமும் இல்லை என்றுதான் கைவிரிக்கின்றனர்.
இந்த விவரத்தை கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் ஏன் மூடி மறைக்கிறார் என்று தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் பிரதமர்கள் டாக்டர் மகாதீர், டான்ஸ்ரீ முகைதீன் யாசின், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி, தற்பொழுது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகிய பிரதமர்களின்கீழ் செயல்பட்ட – செயல் படும் கல்வி அமைச்சர்கள் இந்திய சமுதாயத்திற்கான மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு குறித்த எண்ணிக்கையை தெரிவிக்காமல் ஏன் மறைக்கின்றனர் என்பது தெரியவில்லை!
டத்தோஸ்ரீ ரமணன் தேசிய உதவித் தலைவராக இருக்கும் பிகேஆர்- இன் மகளிர் தலைவிதான் கல்வி அமைச்சரான ஃபட்லீனா சீடேக். அவரிடம் கேட்டால் ரமணனுக்கு விவரம் கிடைக்காதா?
இந்த நிலையில் அன்வாருக்கு முட்டு கொடுப்பதற்காக தற்பொழுது புறப்பட்டுள்ள சார்லஸ் சந்தியாகுவை(கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்), அண்மையில் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்க் கூட்டத்தில் சந்திக்க நேர்ந்தது; அப்போது, அவரிடமும் இதைப்பற்றி கேட்ட பொழுது அவர் புன்னகையையே பதிலாகத் தந்தார்.

மலேசிய இந்திய சமுதாயத்திற்கு திரை மறைவில் இருந்து காரியம் ஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் பிரதமரின் மகளும் பி கே ஆர் கட்சியின் துணைத் தலைவருமான நூருல் இஸாவாவது இதற்கு பதில் சொல்வாரா என்றால் நிச்சயமாக இல்லை.
காரணம் அவர்களிடம் நியாயமான தரவு இல்லை.
மொத்தத்தில் மலேசிய இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பில் மடானி முழக்கத்தை முன்னெடுக்கும் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசு, நேர்மையாக நடந்து கொள்ள வில்லை; இரண்டகம் புரிகிறது என்பது தெளிவாகிறது!


