ஆயுட்கால உறுப்பினர் சிவசுப்பிரமணியம்

மலேசிய இந்து சங்க தலைமைத்துவத்தில் பலவீனம் நிகழ்வதால் இந்த தேசிய சமய அமைப்பில் தலைமை மாற்றம் தேவை என்று இந்த அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் எல் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தை நீதிமன்ற கூண்டில் ஏற்றிய மோகன்ஷானுடன் கூட்டுவைத்துக்கொண்டு, இதுவரை தனக்கு தோள்கொடுத்த துணைத் தலைவர் கணேஷ் பாபுவை எதிர்க்கும் கணேசன் தங்கவேலுவை இந்து சங்க உறுப்பினர்கள் அடையாளம் காண வேண்டும்; அதேப்போல, 3 வருடங்களுக்கு முன்பு, இதேக் கணேசன் இந்து சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின், அவரை சங்கத்தின் தேசிய கட்டிடத்தில் நுழைய விடாமல், பூட்டை மாற்றி நடுரோட்டில் நிற்கவைத்தவர் மோகன்ஷான். பிரச்சினை போலீஸ்வரை சென்றது; அப்படிப்பட்ட மோகன்ஷானுடன் இப்போது கணேசன் கைகோர்ப்பதும் இதே மோகனை தோற்கவைக்க அப்போது துணையாக வந்த கணேஷ்பாபுவை இப்போது எதிர்ப்பதும் ஏன் என்று இந்து சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; மலேசிய இந்து சமுதாயத்திற்கும் கணேசன் விளக்கம் அளிக்க வேண்டும்.
பதவி மோகம் பிடித்த கணேசன், கூட இருந்தவருக்கே குழிபறிக்கிறார். யாரை துரோகி-விரோதி என்றாரோ அவரின் காலில் விழுந்துவிட்டார்.

இந்து சங்க தேசியப் பொறுப்பாளர்கள், தங்களுக்குள்ளே அடித்துக் கொள்வதில்தான் வல்லவர்களேத் தவிர, இந்து சமுதாயத்திற்கோ இந்து சமயத்திற்கோ பாடுபட இவர்கள் தயாராக இல்லை.
மொத்தத்தில் சோர்ந்து கிடக்கின்ற மலேசிய இந்து சங்கம் எழுச்சிபெற வேண்டுமானால் அதில் தலைமை மாற்றம் தேவை என்று தான் முழுமையாக நம்புவதாக மலேசிய இந்து சங்கத்தில் நீண்ட காலமாக பயணிக்கும் எல். சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வாழ்கின்ற இந்து மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் ஏராளம்; ஆன்மீக நன்னெறி மேலோங்கும் அளவிற்கு குறிப்பாக இளைய சமுதாயம் சமய சிந்தனையில் மேம்பட்டு, எதிர்காலத்தில் பலஇன மக்கள் வாழும் இந்த நாட்டில் நல்ல குடிமக்களாக வாழ்வதற்கு ஏற்ப, சமயநெறி பயிற்றுவிக்கப்படுவதில் தற்பொழுது தொய்வுநிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது; அதைப்போல நாடு முழுவதும் எழுகின்ற ஆலய பிரச்சனைகளைப் பற்றி சொல்லித் தீராது;
இந்த நாட்டில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை இந்து சங்கத்தில் அங்கத்தினராக பதிந்து கொண்டு அவர்களிடம் கட்டணமும் பெற்றுக்கொண்டு, ஆலயங்கள் நாதஸ்வர-மேள இசைக் கலைஞர்களையும் சிற்பிகளையும் வெளிநாட்டில் இருந்து வரவழைப்பதற்காக குடிநுழைவுத் துறைக்கு சிபாரிசு கடிதம் வழங்கும் மலேசிய இந்து சங்கம், அதே ஆலயங்கள் எதிர்நோக்கும் இடப் பிரச்சினை, ஆலய சிப்பந்திகளின் நடத்தை போன்றவற்றை தீர்த்துவைக்கும் தைரியம் இல்லாமல் கிடக்கிறது.

ஆலயங்கள் தொடர்பில் இந்து சங்கம் சரியான-உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டால், மற்றத் தரப்பினர் இதில் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது.
வருடந்தோறும் பதவிக்காக அடித்துக்கொள்ளும் இவர்களுக்கு, சமயத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோப் பேச தகுதியில்லை.
அரசியல் கட்சிகளே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேராளர் மாநாட்டை நடத்தும்பொழுது, சமய அமைப்பான இந்து சங்கத்திற்கு வருடம் தப்பாமல் ஆண்டுக் கூட்டம் எதற்கு? அதை நடத்தும்பொழுதெல்லாம் சண்டையிட்டுக் கொள்வது எதற்காக?
சமயக் கட்டுப்பாடும் சமூக அக்கறையும் இல்லாமல் தொண்டு சிந்தனையும் இல்லாமல் நேற்றுவரை ஒன்றாக இருந்துவிட்டு இன்று அணி பிரிந்து, தோல்வி அடைந்து ஒதுங்கி இருந்தவர்களின் உதவியை நாடுவது என அண்டுதோறும் இந்த சங்கம் இப்படியே நீடித்தால், மலேசிய இந்து மக்கள் இந்த சங்கத்தின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அடியோடு சிதைந்துபோகும்.
அதனால், மலேசிய இந்து சங்கத்திற்கு தலைமை மாற்றம் தேவையென மலேசிய இந்து சங்கத்தில் அக்கறை கொண்ட ஆயுள் உறுப்பினர் என்னும் அடிப்படையில் தெரிவிப்பதாக சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் கணேஷ்பாபு அடுத்த தேசியத் தலைவராக வரவேண்டும் என்று பெரும்பாலான இந்து சங்க அங்கத்தினர்கள் விரும்புவதை நானும் வரவேற்கிறேன். .
கணேஷ் பாபுவை புதியத் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி மலேசிய இந்து சங்க அங்கத்தினர்களை கேட்டுக் கொள்வதாக, இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிவசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.


