
மலாயா அரசியல் வரலாற்றிலும் நவீன மலேசியாவிலும் மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா பேரியக்கத்திற்கு எண்ணற்ற வரலாற்றுச் சுவடுகளும் பெருமையும் உண்டு.
இந்த மண்ணில் மெர்டேக்கா உணர்வையும் விடுதலை வேட்கையையும் மக்கள் மனங்களில் தூவியக் கட்சி மஇகாதான்.
விடுதலைக்காக ராணுவ இயக்கம் கண்டதும் இந்த மண்ணில் இந்தியர்கள்தான்; குறிப்பாக தமிழர்கள்.
இந்தியா விடுதலை அடைந்து விட்டால் அடுத்து மலாயாவும் நிச்சயம் விடுதலை பெறும் என்று எண்ணத்தில் அரசியல் ரீதியாகவும் இராணுவ நடவடிக்கை மூலமும் செயல்பட்ட தமிழர்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கத்தையே நேதாஜி வழிநடத்தினார் இன்றைய மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்றிணைந்திருந்த அன்றைய மலாயாவில்.
நேதாஜியின் இந்த முயற்சிக்கு ஜெய்ஹிந்த் செண்பகராமன், மலாயா கணபதி போன்றவர்கள் எல்லாம் துணை நின்றனர்.
1945-இல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நிலையில் இந்த மண்ணில் இராணுவ நடவடிக்கைக்கு அவசியம் இல்லாமல் போனது; ஜப்பானியர்கள் முன்னெடுத்த மயான ரயில் தண்டவாள கட்டுமானப் பணியும் இடை நின்றது.
இத்தகைய சூழ்நிலையில் தான் 1946-ஆம் ஆண்டு இதே மாதத்தில் விடுதலை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஓர் இயக்கம் கண்டனர்; அது அரசியல் இயக்கமாக முகிழ்ந்தது. அதுதான் இன்றைய ம இ கா.
இந்த சுதந்திர மாதத்தில் இத்தகைய வரலாற்று அத்தியாயங்களை நினைவுகூரும் வேளையில் மனதில் பீறிட்டெழுகிறது கம்பீர உணர்வு.
அதைப்போல, நவீன மலேசிய அரசியல் களத்தில், குறிப்பாக தேர்தலில் 100 விழுக்காட்டு வெற்றியை அடைந்த ஒரே அரசியல் இயக்கம் மஇகா-தான்.
இந்த மாசாதனையை புரிந்தது, மலேசிய இந்தியர்களின் கல்வி நாயகன் துன் சாமி வேலு.
எண்பதாம் ஆண்டை எட்டிவிட்ட இந்த அரசியல் கட்சியின் சிலாங்கூர் மாநிலக் கிளையின் 79 ஆம் ஆண்டுக் கூட்டம் நேற்று சௌஜானா புத்ரா பகுதியில் அமைந்துள்ள மாசா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது
ம இ கா விற்கு இது ஆண்டு கூட்டப் பருவம்.

நாடு முழுவதும் மாநிலக் கிளைகளின் ஆண்டுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளாந்தான், ஜோகூர், நெகரி செம்பிலான், மலாக்கா பகாங், கோலாலம்பூர் கூட்டுரசு பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆண்டுக் கூட்டங்கள் கட்டங்கட்டமாக நடைபெற்றுள்ள நிலையில், நேற்று ஆகஸ்ட் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 2:00 மணி அளவில் இந்தக் கூட்டம் கூட்டம் தொடங்கியது.
இன்று ஆகஸ்ட் 25-இல் திரங்கானு
மாநிலக் கூட்டமும் நிறைவாக மெர்டேக்கா தினத்திற்கு முதல் நாள் சபா மாநிலக் கூட்டமும் நடைபெற இருக்கின்றன.
சிலாங்கூர் மாநிலக் கூட்டம் ஏறக்குறைய 4 1/2 மணி அளவில் நடைபெற்று முடிந்த நிலையில், மஇகா இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாநிலத்தின் தொகுதி & கிளைத் தலைவர்கள் ஏனைய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட அனைவரும் மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் – பலகார உபசரிப்பில் கலந்து கொள்ள சென்று விட்டனர்.
பத்திரிகையாளர்களோ மஇகாவின் தேசியத் தலைவர் மற்றும் மாநிலத் தலைவர் ஆகியோரின் செம்மாந்த கருத்தை அறிவதற்காக அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்துபொழுது, கூட்டம் நடைபெற்ற BallRoom மண்டப நுழைவாயிலின் இடப்புறத்தை ஒட்டி அமைந்துள்ள தனி அறையில் செய்தியாளர்களை காத்திருக்கும்படி தகவல் தெரிவித்ததால் அனைத்து செய்தியாளர்களும் அங்கே சென்று காத்திருந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்த பின்னும் செய்தியாளர்களை சந்திக்க எந்தத் தலைவரும் வராத நிலையில் “இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது?” என்று நான் கேட்ட பொழுது,
அந்த அறையில் நுழைந்த காஜாங் ரவி என்னும் இரண்டாம் கட்டத் தலைவர், விளக்கம் சொல்வதற்குப் பதிலாக என் மீது வஞ்சம் கொண்டார்.
இவர் மஇகாவின் கட்டடக் குழுத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் 2:00 மணிக்கு வந்த செய்தியாளர்கள் ஏறக்குறைய நான்கரை மணி அளவில் முடிந்து விட்ட நிலையில் எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்த வேளையில், செய்தியாளர்கள் மட்டும் தனி அறையில் வெறுமனே காத்திருந்து.., காத்திருந்து ஐந்தே கால் மணி அளவைஎட்டியது.
இந்த நிலையில் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று வினவியதற்காக, “தேசியத் தலைவர் ஒன்றும் சும்மா இருக்கவில்லை;”
“அவர் காசோலைகளிலும் கடிதங்களிலும் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்; கட்சியினரையும் மற்றவர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்; அதனால்தான் தாமதம் ஆகிறது என்று சமாளித்த காஜாங் ரவி,
அந்த மட்டில் நிறுத்திக் கொள்ளாமல் “உங்கள் வயதுக்கு இதுபோல உரக்க உரக்க பேசுவது நல்லது அல்ல” என்று இறுமாப்புடன் பதில் சொன்னார்.
50 கிலோ மீட்டர் பயணம் செய்து கூட்ட அரங்கிற்கு சென்ற நிலையில், மீண்டும் 50 கிலோமீட்டர் பயணம் செய்து இல்லம் திரும்ப வேண்டும்;
மஇகா தேசியத் தலைவருக்கும் மாநிலத் தலைவருக்கும் நேரத் தட்டுப்பாடு இருந்தால், இவர்களின் மேனாள் தேசியத் தலைவர் துன் சாமி வேலனாரின் வழியைப் பின்பற்றி இருக்கலாம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், செய்தியாளர்களை சந்திக்க முடியாது போனால்
“மேடையில் பேசியதைத்தாங்கஏறக்குறைய தரையிலும் பேசுவேன்; அதனால அடுத்த முறை சந்திப்போங்க” என்று இதமாக சொல்லி செய்தியாளர்களை இங்கிதமாக திரும்பச் செய்வார் மஇகாவின் அந்த மேநாள் தேசியத் தலைவர்.
அந்த வகையில் சாமிவேலனாரின் வழியைப் பின்பற்றியாவது செய்தியாளர்களை காக்க வைக்காமல் உரிய நேரத்தில் திரும்பும்படி செய்திருக்கலாம்;
அல்லது மாநில தலைவரையாவது அனுப்பி செய்தியாளர்களுக்கு உரிய கருத்தைச் சொல்லி அவர்கள் திரும்பும்படியான ஏற்பாட்டை செய்திருக்கலாம். அதுவும் இல்லை.
மேடையில் பேசிய மாநில – தேசியத் தலைவர்களின் கருத்தே போதுமானது; அதை அடிப்படையாகக் கொண்டு இணைய ஊடகத்தினர் மாலை 5 மணி அளவில் செய்தியை பதிவேற்றம் செய்து விட்டனர் என்பதுதான் உண்மை நிலை.
ஆனாலும் அச்சு ஊடகத்தினரின் நிலை வேறு;
அடுத்த நாள் இதழில் செய்தியை வெளியிடுவதற்காக இன்னும் ஏதும் சிறப்பான செய்திகள் கிடைக்குமா? தலைவர்களை நேரில் சந்தித்து சில ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாமா என்றெல்லாம்
காத்திருந்த நேரத்தில் தலைவர்களுக்கு காசோலையிலும்ம் கடிதத்திலும் கையெழுத்திட வேண்டிய வேலை இருந்தால் எதற்கு செய்தியாளர்களை காத்திருக்கும்படி செய்ய வேண்டும்?.
தேசியத் தலைவருக்கு சிலாங்கூர் மாநில தொகுதி த் தலைவர்களையும் மத்திய செயலவை உறுப்பினர்களையும் சந்திக்க வேண்டிய முக்கிய அலுவல் இருந்தால், செய்தியாளர்களை காத்திருக்கும்படி ஏன் சொல்ல வேண்டும்?
இதற்கெல்லாம் உரிய பதிலை சொல்ல வேண்டிய ரவி,
“உங்கள் வயதிற்கு இதுபோன்றெல்லாம் பேசக்கூடாது” என்றால் இதன் பொருள் என்ன?
முன் வைக்கப்பட்ட வினாவிற்கும் அதற்கு காஜாங் ரவி சொல்ல வேண்டிய விளக்கத்திற்கும் என்னுடைய வயதிற்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை;
மாறாக அவரிடம் இறுமாப்பும் ஆணவமும் தென்பட்டன.
நிகழ்ச்சி முடிந்தபின் பத்திரிகை நண்பர்கள் வீடு திரும்ப வேண்டுமா இல்லையா?
செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது அல்லது இல்லை என்ற விவரத்தை சொல்ல வேண்டுமா இல்லையா?
அவர்களை தேவையில்லாமல் காக்க வைத்ததற்காக கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமா இல்லையா?
இதையெல்லாம் எடுத்து சொல்ல வேண்டிய காஜாங் ரவி, தேசியத் தலைவர் ஒன்றும் சும்மா இல்லை; அவர் காசோலைக்கும் கடிதங்களுக்கும் கையொப்பமிட்டு கொண்டிருக்கிறார்; கூடவே மாணவர்களையும் மற்றவர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், செய்தியாளர்களையும் சந்திக்க வேண்டும் என்ற கடப்பாடு அவருக்கு இல்லையா?
பொதுவாக செய்தியாளர்க் கூட்டங்களில் அன்பளிப்பாக 100 வெள்ளியோ அல்லது ஐம்பது வெள்ளியோ கொடுக்கப்படுவது உண்டு; சில வேலைகளில் இல்லாமல் போவதும் உண்டு
அதற்காக செய்தியாளர்களை இளப்பமாக எவரும் எடைபோட்டு விட வேண்டாம்; வண்டி ஓடம் ஏறும்; ஓடமும் வண்டியில் ஏறும்; எவருக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை; வாழ்க்கை உட்பட!
மஇகா சிலாங்கூர் மாநில நிர்வாகத்தினருக்கு 79 ஆவது ஆண்டுக் கூட்டத்தை நடத்திட மண்டபம் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக மாசா உயர்க்கல்வி நிலைய வளாகத்தில் அவர்கள் ஏற்பாடு செய்தனர்; எங்களைப் போன்றவர்கள் 100 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலையில், நாங்களும் உரிய நேரத்தில் திரும்ப வேண்டும் என்பதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பாகவும் ஏதுவாகவும் நடந்து கொள்ள வேண்டுமா இல்லையா?
இணைய ஊடகத்தினரைப் பொறுத்தவரை தாழ்வில்லை; அவர்கள் இருந்த இடத்திலேயே அந்தந்தபொழுதே செய்தியை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவார்கள்;
ஆனால் அச்சு ஊடக செய்தியாளர்கள் அவ்வாறில்லை; அலுவலகத்திற்குத் திரும்பி நிகழ்ச்சி குறித்த செய்தி- படங்களை அன்றைய செய்தி ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது;
கூட்டம் முடிந்து ஏறக்குறைய ஒரு மணி நேரம்வரை காத்திருந்தபின், நிலைமையை சுட்டிக் காட்டினால், பதிலுக்கு வயதை சுட்டிக்காட்டுவதும் “ஆகாது இந்த பேச்சு’ என்பதுதும் என்ன நியாயம் என்று தெரியவில்லை.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் இடம் ஒதுக்கியவர்கள், பத்திரிகையாளர்களுக்காக எந்த இடமும் ஒதுக்கவில்லை.
அதனால் அவரவரும் எங்கெங்கே நாற்காலி ஆள் இல்லாமல் இருந்ததோ அங்கங்கே அமர்ந்து கொண்டனர்.
பத்திரிகையாளர்களை மதித்து தேசிய தலைவரின் அறிக்கை மாநிலத் தலைவரின் அறிக்கை அல்லது எதிர்காலத் திட்டங்கள், மாநிலக் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முக்கியமான நிகழ்ச்சிகள் போன்ற எந்த குறிப்பும் தரவில்லை. ஆண்டு மலரைக் கூட கெஞ்சிதான் வாங்க வேண்டி இருந்தது.
முகப்பிட சேவையில் இருந்த பெண்கள் சிலாங்கூர் மாநில மஇகா மாநாட்டு மலரை கொடுப்பதற்கு அடியோடு மறுத்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக தீர்மானங்களை வாசித்த துணைத் தலைவர் செய்தியாளர்களுக்கு அதன் பிரதியை கொடுக்கத் தவறிவிட்டார்.
எத்தனை மாமாங்கங்கள் கடந்தாலும் ஆணவம் கொண்ட காஜாங் ரவி போன்றவர்கள் இருக்கும்வரை, மஇகா இப்படித்தான் கறைப்படும்!
இது குறித்து சமுதாயமே எடை போடட்டும்!


