பிள்ளையார் சதுர்த்தி!
திடீர் தொழில்முனைவோர்!!

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை காலத்தில் நான்காவது நாள் பிள்ளையார் சதுர்த்தி விழா இந்துப் பெருமக்களால் பேரளவில் கொண்டாடப்படுகிறது.
அண்மைய தசாப்தங்களாக தமிழ்ச் சமுதாய இந்துக்களின் வழிபாட்டு முறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது கணபதியம் என்னும் பிள்ளையார் வணக்க முறை.
இதன்தொடர்பில் பிள்ளையார் வழிபாட்டிற்குரிய தென்னந் தோரணம், மாவிலை ஆகியவற்றை விற்பனை செய்யும் திடீர் தொழில்முனைவர், கோலாலம்பூரின் பல பகுதிகளிலும் குறிப்பாக,, தமிழர்கள் கூடும் வர்த்தக இடங்களிலும் ஆலய வளாகங்களிலும் காணப்படுகின்றனர்

ஒன்பது தோரணங்கள் ஐந்து வெள்ளிக்கும் 11 மா இலைகள் ஒரு வெள்ளிக்கும் என கட்டி கொத்தாக விற்கப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்களுக்கு அந்நியப்பட்டிருந்த- அறிமுகம் இல்லாத பிள்ளையார் வணக்கம் முறை, அதே நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் ஏகமான இடத்தைப் பிடித்து விட்டது.
இந்தியா விடுதலை அடைந்த 20ஆம் நூற்றாண்டு மத்திய பகுதியில் வெளிவந்த திரைப்படங்களில் கூட தமிழ் கடவுள் திருமுருகனையும் புத்தரையும் வழிபடும் காட்சிகளும் முன்னிலைப்படுத்தும் அம்சங்களும் அதிகமாக இடம்பெற்று இருப்பதை நாம் இப்பொழுதும் காணலாம்.
இந்தியா விடுதலை அடையப்போகிறது என்ற காலகட்டம் உருவான சமயத்தில், 19 ஆம் நூற்றாண்டு மையப்பகுதியில் ”இந்து-இந்தி- இந்தியா’ என்னும் மூன்று இலக்குகளை ஒருங்கிணைத்து அதனுள் ‘இந்து ராஷ்டிரம்’ என்கிற அரசியல் கருத்தை பொதியவைத்து மராத்திய சித்பவன பார்ப்பனர்கள், பால கங்காதர திலகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடக்கப் புள்ளிதான் ஆர் எஸ் எஸ் (ராஷ்ட்ரிய சுயசேவை சங்கம்). காந்தியைக் கொள்வதற்காக ரகசிய திட்டம் தீட்டி 20 வருடங்கள் காத்திருந்து அவர்களுக்கு பொருத்தமான நேரம் வாய்த்தபொழுது அண்ணல் காந்தியின் உயிரைக் குடித்த இயக்கம் இதே ஆர்எஸ்எஸ்-தான்.
சைவம், வைணவம், சாக்தம், கணபதியம், கௌமாரம், சௌரம் என்னும் ஆறு கொள்கைகளை உள்ளடக்கி, இந்து சமயம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் வடபகுதியில் குறிப்பாக மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மராத்தியத்தில் வாழ்கின்ற சித்பவன பிராமணர்களின் தலையாய இறைவணக்க முறை, விநாயக வழிபாடுதான்.

வட இந்தியாவில் பாஜக என்னும் அரசியல் கட்சியின் தாயான ஆர்எஸ்எஸ் உருவாக்கியுள்ள எண்ணற்ற சங்க பரிவார அமைப்புகள் முன்னெடுக்கும் அத்தனை மதக் கலவரங்களுக்கும் விநாயகர் வழிபாடு முறை அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
விநாயகர் சதுர்த்தி என்னும் சமய விழாவின்பொழுது விநாயகர் சிலையோடு நடைபெறும் ஊர்வலம், தமிழ்நாட்டைப் பொருத்தவரை, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கி, அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்கு முன்பு விநாயகர் சிலை விற்பனையோ விநாயகர் சிலை ஊர்வலமோ தமிழகம், இந்த மலையகம், ஈழ தேசம், தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக உரிமை பெற்றுள்ள சிங்கப்பூர் உட்பட தமிழர் மிகுதியாக வாழும் பகுதிகளில் அறிமுகம் காணாமல் இருந்தது.
தமிழ்ச் சமுதாயத்தில் முன்பெல்லாம் ஒரு சொல வடை இருந்தது.
மற்றவர்கள் தன்னை இளக்காரமாக கருதுவதாக ஒருவர் நினைக்கும் பொழுது பயன்படுத்தப்படும் சொலவடை அது;
‘என்னை என்ன ஒன்றாம் வகுப்பு வாத்தியாரை போலவும் பிள்ளையார் கோயில் ஆண்டியைப் போலவும் நினைத்துக் கொண்டீர்களா?’ என்று வினவும் சொலவடைதான் அது;
மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் ஆசிரியர்களுடைய பணியை விட இளம் மாணவர்களுக்கு ஆத்திச்சூடி- அரிச்சுவடியை கற்றுக் கொடுக்கின்ற ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களின் நிலை பெரும் பாடாக இருக்கும்; ஆனாலும் அவர்களைப் பற்றி யாரும் அதிகம் பாராட்ட மாட்டார்கள்; அதைப்போல முன் நாட்களில் பக்தர்கள் அதிகம் வராத விநாயகர் ஆலயங்களில் இருக்கின்ற ஆண்டிகள் மிகவும் இளைத்தும் வாடி வதங்கியும் காணப்படுபவர்; காரணம் பக்தர்கள் அதிகம் வராததால் அவர்களுக்கான அன்பளிப்பு, நைவேத்திய பண்டம், காணிக்கை பொருட்கள் என எதுவும் அந்த அளவிற்கு கிடைக்காது;
இதை மையமாக வைத்துதான் இந்த சொலவடை தமிழ் மக்களிடம் புழக்கத்தில் இருந்தது; இப்பொழுது அது மங்கி விட்டது; காரணம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது; பிள்ளையார் கோயில் ஆண்டியர்கள் மிகவும் நல்வாய்ப்பு பெற்று திகழ்கின்றனர். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் விநாயக தலங்களில் பக்தர்க் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டைப் போல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்பொழுது விநாயகர் சிலை விற்பனையோ அல்லது கடந்த ஆண்டுகளில் போர்ட்டிக்சன் கடற்கரைக்கு செல்கிறோம் என்ற பெயரில் விநாயக ஊர்வலம் என்பதைப் பற்றிய பேச்சும் நடவடிக்கையும் மலேசியாவில் தென்படவில்லை.

இந்தியாவின் தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அலுவலகமாக மாறி சனாதன தேர்தல் ஆணையமாக உருமாறி வாக்கு திருடும் வேலைகளை செய்து, தேர்தல் காலங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு தேசிய அளவில் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் பொழுது குயுக்தியாக காரியமாற்றி வந்தது அம்பலமாகியுள்ள இப்போதைய நிலையில் இந்த முறை அவர்களுக்கு விநாயகர் ஊர்வலத்தில் அக்கறைக் காட்ட நேரமும் மனமும் இல்லை.
குறிப்பாக, இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும்பீகார் மாநில வாக்காளர் பதிவேட்டில், இலட்சக்கணக்கான வாக்குகளை திருடி, அதாவது பாஜ கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என அடையாளம் காணப்படும் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து காதும்காதும் வைத்தாற்போல நீக்கிவிட்ட தகிடுதத்த வேலை, இந்திய அரசியலையும் கடந்து உலக அளவில் இப்பொழுது பேச ப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனம் பித்தலாட்டம் பற்றி ஊருக்கும் உலகுக்கும் தெரிந்து விட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஒரு கிளையாக மாற்றி, வாக்கு திருடும்படி அதை ஏவிவிட்ட பாஜகவும் பாஜகவின் பிரதமர் மோடியும் செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பின்னடைவால் தான் அந்த தரப்பினர் இந்த ஆண்டு விநாயக ஊர்வலத்தைப் பற்றியும் விநாயக சிலை உற்பத்தி குறித்தும் அதிகமாக கவலைப்படவில்லை; சிந்திக்கவும் இல்லை; செயல்படவும் இல்லை;
எல்லாராலும் எல்லா காலத்திலும் எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
இதைத்தான் வள்ளுவன் சொன்னான், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே!”என சுருக்கமாக.
இந்தியாவின் ஆன்மீக அரசியலின் பிரதிபலிப்பாக, மலேசியாவிலும் விநாயக சிலை விற்பனை, விநாயக ஊர்வலம் பற்றி இந்த ஆண்டு பேசப்படவில்லை.
பக்தர்கள் மட்டும் வழக்கம்போல எளிய முறையில் ஆலயங்களில் வழிபடும் ஆன்மீக நன்னெறிப் போக்கு தென்படுகிறது.


