Monday, April 20, 2026

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் மீது மதானி அரசு மறைமுக நெருக்கடி!

கோலாலம்பூர், நவ.26:
குமரி வான்முற்றவாசியருக்கு முதற்கண் வணக்கம்.
நலம்; வாழிய நலம்.

15வது நாடாளுமன்றத்தின் 3வது தொடரின் தற்போதைய 3வது கூட்டம், தெளிந்த நீரோடையைப் போல அதிக சலனமின்றி செல்வது ஊராட்சி அமைச்சகத்திற்குப் பிடிக்கவில்லை போலும்!

நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்கள், ஏற்கெனவே அரசு உதவிநிதியைப் பெற்றிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மூச்சுவிடக் கூடாது; மானியம், உதவி யென்றால்லாம் எந்தக் காரணத்தையும் சொல்லிக்கொண்டு விண்ணப்பப்படிவத்துடன் வந்து விடாதீர்கள் என்று நேற்றைய(நவம்பர்-25)க் கூட்டத்தின்போது ஊராட்சித் துறை துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு அறிவித்திருப்பது பெரும்பாலான ஆலய நிருவாகத்தினரை கவலை அடையச் செய்துள்ளது. நாட்டில் உள்ள கிறித்துவ, பௌத்த, தாவோயிச, சீக்கிய வழிபாட்டுத் தலங்களின் சமூகப் பங்களிப்பு குறித்து, குமரிக்கு சரியாகத் தெரியவில்லை என்பது உண்மைதான் என்றாலும் அவை அந்தந்த சமூக மக்களுக்கு கல்வி-பொருளாதார-சமூக முன்னெடுப்புகளை இடையறாது மேற்கொண்டு வருகின்றன என்பது மட்டும் உண்மை. இத்தகையப் பாங்கு இந்து சமய வழிபாட்டுத் தலங்களுக்கு காலம் கடந்துதான் ஏற்பட்டது. அதற்கான காரணமும் தெளிவானது. மலேசியவாழ் இந்தியர்களைப் பொருத்தவரை பெரும்பான்மைச் சமயம் இந்து என்பதால், ஓர் ஏகாந்த நிலைக்கு ஆட்பட்டிருந்தனர். ஆனால், தமிழர்கள் சார்ந்த தேவாலயம், சீக்கியர்களின் குருத்வாராக்கள் போன்றவை ‘வழிபாட்டுத் தலம்’ என்னும் எல்லையைக் கடந்து, அவை பெரும்பாலும் சமூக மையங்களாக எப்போதோ உருமாறிவிட்ட நிலையில்.. .,

ஊராட்சித் துறை துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு

புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய நேரத்தில், மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்திய டத்தோ அ.வைத்திலிங்கம்-‘சமயச் செல்வர்’ சோ.பரஞ்சோதி இணைத் தலைமை, இந்து வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் சமூக மையமாக உருமாற வேண்டும் என்னும் முழக்கத்தை பேரளவில் முன்னெடுத்தன; இவ்விருவரும் தலைமையேற்றிருந்த காலம், இந்து சங்கத்திற்கு பொற்காலம் எனலாம். தற்பொழுது, பெரும்பாலான இந்து வழிபாட்டுத் தலங்கள் சமுதாயக் கூடமாக உருவாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

அதிகமான ஆலயங்கள் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தகுந்த ஓதுவார் பெருமக்களைக் கொண்டு வெள்ளிதோறும் திருமுறைப் பாடல்களை பயிற்றுவிப்பது, நலிந்த குடும்பத்து பிள்ளைகளுக்கு டியூசன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, புத்தகைப் பை-எழுது பொருட்களை வழங்கி என கல்விசார் நடவடிக்கைக்கு உதவுவது, கட்டங்கட்டமாக நன்கொடை மூலம் ஆலய வளாகத்தில் திருப்பணி மேற்கொள்வது, சுற்று வட்டார மக்களை ஒருங்கிணைப்பது என சமூக மையங்களாக உருமாற்றம் கண்டு வருகின்றன.

இதில், நகரப் பகுதிகளைக் காட்டிலும் உட்புறங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் முனைப்பு அதிகம் எனலாம்.

இப்படிப்பட்ட ஆலயங்கன் நிருவாக சீரமைப்பு, ஆலய விரிவாக்கம், ஆன்மிக நிகழ்ச்சிகள், சமூக-கலாச்சார நடவடிக்கை என்றெல்லாம் நாளுக்கு நாள் முன்னேறிச் செல்ல முயலலாம். அப்படிப்பட்ட நேரங்களில் சுற்று வட்டார மக்களின் ஆதரவு-நன்கொடை மட்டும் போதுமானதாக இருக்காது.

அவற்றுக்கான ஒரேப் பற்றுக்கோடு, அரச ஆதரவுதான்; மத்தியக் கூட்டரசு, மாநில அரசுகள், மாநகராட்சி மன்றங்கள், மாவட்ட-ஊராட்சி மன்றங்கள் ஆகியவற்றின்வழி மானிய உதவி தேவைப்படலாம்.இத்தகைய சூழலில், மூன்று ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் அணுகூலம் கிடைக்காது; அதனால், அருகில் வராதீர்கள். ஏற்கெனவே ஏதும் உதவி பெற்றிருந்தால், அப்படிப்பட்ட ஆலயங்களின் மனைய கோரிக்கை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படாது என்பதால் விலகி நில்லுங்கள் என்று கூறுவது ‘மாதனி’ முழக்கத்துடன் செயல்படும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு பொருத்தமானதா என்பதை அரசாங்கமே எண்ணிப் பார்க்க வேண்டும்; மறுபரிசீலனை செய்ய வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் சமுதாயத்தின் ஒருகூறு என்றாகிவிட்ட நிலையில், மத்திய கூட்டரசாங்கத்தின் ஊராட்சித் துறையும் பிரதமர் துறையும் இதை ஆழமாக பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, ஊராட்சித் துறை அமைச்சர் அமைச்சர் ங்கா கோர் மிங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்;

தற்போதைய நாடாளுமன்றக் கூட்டம் டிசம்பர் 12-ஆம் நாள் நிறைவடைய இருக்கும் நிலையில், இன்னும் 10 நாட்களுக்கு கூட்டம் தொடரும். அதற்குள், ஊராட்சித் துறை துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு மூலமே இந்த உத்தரவை திரும்பப் பெற்றால், அது, முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு இனிமையான செய்தியாக அமையும்.

2024 செப்டம்பர் 30-ஆம் நாள்வரை முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் இருந்த கிடைத்த 1,074 விண்ணப்பங்களில் 422 மட்டும் பரிசீலிக்கப்பட்டு வெ.46.1மில்லியன் மானிய நிதியாக வழங்கப்பட்டுள்ள விவரத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள ஐமான் அதிரா சாபு, ஒற்றுமை அரசாங்கத்தில் மட்டும் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களா இவை என்பது பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

எது எவ்வாறாயினும் மதானி அரசின் நல்ல முடிவை எதிர்பார்ப்போம்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை