
மலேசியாவில் வாழ்கின்ற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் திருவோணம் பண்டிகை திருநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொல்லவர்ஷம் என்னும் மலையாள நாட்காட்டி அடிப்படையில் ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திர நாளில் இந்த திருவோண பண்டிகை மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.
சாதி மத வேறுபாடு இன்றி கேரள தேசத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகின்ற திரு ஓணம் பண்டிகையை ஒற்றுமைதா திரு விழா என்று அழைத்தாலும் பொருத்தமானது.
பொதுவாக மலேசியாவில் எந்த சமய பண்டிகையாக இருந்தாலும் அது நாட்டின் ஒற்றுமைதாதிரு விழாவாக கொண்டாடப்படும் வேளையில் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கி இன்று நிறைவு பெறுகின்ற திருவோணம் பண்டிகையும் மலேசியத் திருநாட்டின் ஒற்றுமை விழாவாக அண்மை ஆண்டுகளாக கொண்டாடப்படுவதில் மஇகா மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.
ஆண் பெண் இருபாலரும் வெள்ளாடை உடுத்தி, வாசலில் மலர்க் கோலம் இட்டு ஆனந்தமாக கூடி களித்துக் கொண்டாடும் ஓணம் பண்டிகையில் மஇகாவும் பங்கெடுக்க விரும்புகிறது.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் நாள் தொடங்கப்பட்ட இவ்விழா இன்று செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதால் இன்றைய நாளில் மலையாள மொழி பேசும் மக்கள் இந்த ஓணம் பண்டிகையை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடிய வருகின்றனர்
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில் , குறிப்பாக அந்நாளைய கேரள தேசத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஒரு சிறப்புமிக்கத் திருவிழா ஆகும்.
மகாபலி மன்னன் சிறப்பான ஆட்சியைப் புரிந்து மக்களின் ஆதரவோடு விளங்கினாலும் அம்மண்ணன் இந்த உலகில் தன்னைவிட ஒப்பாரும் மிக்காரும் எவரும் இலர் என்று எண்ணி இறுமாப்புடன் விளங்கியதாகத் தெரிகிறது.
மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்க நினைத்த, திருமால், நெடிய உருவம் தாங்கிய வாமனராக அவதரித்து, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியை நிலத்தில் வைத்து இரண்டாம் அடியை வானத்தில் வைத்தபின் மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று வாமன அவதாரம் கொண்டிருந்த திருமால் கேட்ட பொழுது வந்திருப்பது யார் என்பதை அறிந்து கொண்ட சக்கரவர்த்தி தன்னுடைய வாக்கை காப்பாற்றுவதற்காக தன்தலையைக் கொடுத்து மூன்றாவது அடியை வைக்கச் சொன்னதாகவும் அதே நேரத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவம் அதிகார உட்பட அனைத்தையும் அழிக்க வாமன வடிவில் இருந்த திருமால் உயர்ந்த பொழுது, அவரை தொழுதொழுகிய சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் புரிய வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ஏற்று திருமால் அருள் வழங்கியதாகவும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் திருவோண நட்சத்திர நாளில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வணங்கவே இத்தகைய திருவோண திருநாள் கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னவனே ஆனாலும் ஆணவமும் செருக்கும் எவருக்கும் வந்து விடக்கூடாது எனும் நன்னெறியை உணர்த்துவதற்காகவே இந்த வைணவ சமய கதை சொல்லப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே மலையாள மக்கள் இந்த விழாவை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவதாகவும் அதேவேளை ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்தி தங்களின் பாரம்பரிய புகழ் மன்னனை சந்திக்க ஆவல் கொண்டிருப்பதை எடுத்துரைக்கவும் இந்த விழா வழிவழியாக கொண்டாடப்படுகிறது.
மொத்தத்தில் ஒருமைப்பாட்டு விழாவாக கொண்டாடப்படுகின்ற ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மலையாள மொழி பேசுவோருக்கும் ஏனைய இந்திய சமுதாயத்தினருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் ஏ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


