
கோலாலம்பூர் அக். 16-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
முன்னதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மெட்ராஸ் பேக்கரி உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
பிரதமருக்கு எதிர் வரிசையில் மலேசியதா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சே.வே.முத்தமிழ் மன்னன் அமர வைக்கப்பட்டார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் கடந்த வாரம் எண்ணியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அப்பொழுது, கோபிந்த் சிங் டியோ மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 25,000 வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்தார்.
அதேசமயம் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவை தொடர்பு கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 50,000 வெள்ளி வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.
உடனே அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த 50,000 வெள்ளி மானியத்தை அப்போதே அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் சங்கத்தின் சார்பில் பிரதமருக்கு மனமார்ந்து நன்றி தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 50,000 வெள்ளி பிரதமர் துறை அமைச்சு மூலம் வழங்கப்பட்டது.
இவ்வாண்டும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.


