
இலக்கியம் கற்போரின் இதயத்தில் இளமை ததும்பும்; இருப்புகொள்ளா மனம்வாய்த்த அத்தகையோரின் எண்ணவெளிக்கு தொடுவானமே எல்லை; இலக்கிய இன்பத்தை நாடுவோரின் முகத்தில் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் ஊடாடி உயிர்மெய்யெழுத்தாவைப் போல இளநகையும் மென்னகையும் அணிசேர்ந்து சிறுநகை வடிவெய்தி, அது புன்னகை உருக்கொண்டு எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் என்பார் ‘நினைவில் வாழும்’ மு.மணிவெள்ளையனார், அடிக்கடி.
மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்திற்கு தலைவராக வாய்த்த அந்தப் பெருமகன்தான், இலக்கிய தாகத்தை என்னிடத்தும் சிறிதேற்படுத்தினார்.
தொடர்ந்து இலக்கியம் படிப்போரின் எண்ண வெளிப்பாடு, முகத் தோற்றம், சமூகத்தில் காட்டும் நாட்டம் குறித்தெல்லாம் பாடவேளையில் அடிக்கடி பேசுவார். அதிகமாக குறிப்பிடுவார்.
அத்தகைய தன்மையை, காவல் துறையில் செம்மாந்த முறையில் பணியாற்றி, பணி ஓய்விற்குப் பின் இலக்கியவாணராக உருமாற்றம் பெற்றுவரும் ஐயா டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனிடம் காணமுடிகிறாது.
ஆங்கிலேய ஆதிக்க ஆட்சி காலத்தில் நேர்ந்த ஒரு காட்சியை படம் பிடித்துள்ளார். அது, இம்மலையகத்தில் இடம்பெற்றதன்று; தமிழகத்தில் நேர்ந்தது.
ஆங்கிலேய ஆட்சியாளர்களிடத்தில் எத்தனையோ நல்ல அம்சங்கள் இருந்தன; அதைவிட தீய அம்சங்கள் மிகுந்திருந்தன. இராபர்ட் கிளைவ் பதுக்கி வைத்த சொத்து, கோகினூர் வைரத்தை ஒரு நிருவாகமே திட்டமிட்டு திருடிச் சென்றது, தமிழ் நாட்டு மக்களையும் அரசியலையும் பிரித்தாண்ட வஞ்சகம்(இதற்குப் பெயர் ராஜதந்திரமாம்), காந்தியை சாக்குகாட்டி மாவீரன் பகத்சிங்கை தந்திரமாக தூக்கிலிட்ட ரிப்பன் பிரபுவின் கேடுகெட்டத்தனம், அஞ்சாநெஞ்சினன் வ.உ.சி.யை செக்கிழுக்கும்படி சாட்டையால் அடித்த பச்சைப் போக்கிரித்தனம், விடுதலை மறவன் சுப்பிரமணிய சிவாவை தனிமைக் கொட்டடியில் அடைத்து குட்ட நோயை பரப்பியது என்றெல்லாம் சொல்லசொல்ல மாளாது; மாளாது.
எதைச் சொல்வது? எதை விடுவது??
அத்தகையை கொடுமைகளில் ஒன்றைத்தான், ஒரேயொரு காட்சிமூலம் விரிவுபடுத்தி இருக்கிறார் டத்தோ ஆ.தெய்வீகன்.
இதோ அவரின் வரிகள் தொடர்கின்றன!

1880களில், பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின்கீழ், கொடூரப் பஞ்சம் தமிழகத்தில் தாண்டவம் ஆடியது. 19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பஞ்சப் பேரிடர் இதுவாகும். தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பம்பாய் பிரசிடென்சியிலும் இலட்சக்கணக்கோர் பசியின் கோரப்பிடியில் சிக்கி மாண்டனர். இருப்பினும், துறைமுகங்களில், உணவுத்தானியங்கள் ஏற்றுமதிக்காகக் குவிந்த வண்ணம் இருந்ததாக அறியப்படுகின்றது.
உணவின்றி மக்கள் தத்தளித்தபோதும், பிரிட்டீஷ் அரசு, எந்த ஒரு காருண்யமும் காட்டியதாகத் தெரியவில்லை. பசியைப் போக்குவதற்கு எவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க மனமில்லாத அரசு, பசிப்பிணியை சிறிதளவாவது தணிக்கக்கூட எதுவும் செய்யவில்லை. அப்படி செய்தால், அவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்று, வெறுமனே இருந்தனர்.
இதனால் சில கிராமங்களில் முழு மக்கள் தொகையும் அழிந்துபோகும் அளவுக்கு நிலைமை இருந்திருக்கின்றது. உயிர் பிழைத்திருந்தவர்கள் வெறும் எழும்புக்கூடுகளாக இருப்பதை மேலே உள்ள படத்தில் காணமுடிகிறது.
இந்த வேளையில்தான் சில சிந்தனையாளர்கள், இந்த நிலைக்குக் காரணம் யார் என்று யோசிக்க ஆரம்பித்தனர். ஏகாதிபத்தியம், மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் இன்றி, மனமும் குணமுமற்ற சுயநல அரசு என்பதைச் சுட்டிக்காட்டினர்.
வெள்ளைக்கார அரசு, மக்களைக் காக்க வந்த அரசு அல்ல! கொள்ளையடிக்க வந்த அரசு! தங்களைப்பிழிந்து உயிரை எடுக்க வந்த அரசு என்று உணர்ந்தார்கள். இதுதான் பின்னர்(1885-இல்) இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகக் காரணமாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவை கொள்ளையடித்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மில்லியன் கணக்கான, இலட்சோப இலட்ச இந்தியர்கள் மாண்டதில் எந்த கவலையும் கொண்டதாக அறியப்படவில்லை. கூட்டம் கூட்டமாக செத்தால் என்ன? “அதுங்க சுண்டெலிக் கூட்டம். ரொம்ப சீக்கிரம் குஞ்சுபோட்டு பெருகிவிடும். கவலையை விடுங்கள்.” என்று எகாதிபத்திய பெருந்தலைவர் ஒருவர் கூறினாராம். ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த அட்டூழியங்களை இன்று நினைத்தாலும், நெஞ்சு பொறுக்குதில்லயே!
அதைவிட மோசமான, வெட்கப்படவேண்டியது என்ன தெரியுமா? அத்துணை அட்டூழியங்களுக்கெல்லாம், எங்கெங்கோ அவ்வப்போது ஆங்கிலேயருக்கு ஒத்தாசையாகவும் உறுதுணையாகவும் இருந்தவர்கள் யார்? நெஞ்சில் உரமுமின்றி; நேர்மைத்திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்த நம்மவர்கள்தான் என்ற செய்திகளும் நிறைய உண்டு.


