Thursday, April 23, 2026

16 ஆண்டு கால இந்திரா காந்தி சிக்கல்:நீதி வழங்க முடியவில்லை என்றால் பதவி விலகுக!சட்டத்துறை மேநாள் அமைச்சர் முழக்கம்!!

ஓன்றரை வயதுக் குழந்தை சொந்தத் தந்தையாலேயே கடத்தப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண் குழந்தை பிரசன்னா தீக்சாவை மீட்டு தாய் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்து நீதியை நிலைநாட்ட முடியாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் பதவி துறக்க வேண்டும்; சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற ஒரு நாட்டில் இது நேர்ந்திருக்கூடாது என்று சட்டத்துறை மேநாள் அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராகிம், இன்று காலையில் ‘சோகோ’ வர்த்தக வளாகத்தில் முழங்கினார்.

பாலர் பள்ளி மேநாள் ஆசிரியரான திருமதி இந்திரா காந்தி, தன்னுடைய மகளை மீட்டு, கடந்த 16 ஆண்டுகளாக தான் அனுபவித்துவரும் துயரைக் களையும்படி கேட்டு, தேசிய காவல் படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் இஸ்மாயிலிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கும் பொருட்டு காவல் படைத் தேசிய தலைமையகம் ‘புக்கிட் அமானை’ நோக்கி ‘பொம்மைக் கரடி’ அணிவகுப்பை சோகோ வர்த்தக வளாகத்தில் இருந்து தொடங்குமுன், அரசியல்-சமூக-சமயத் தலைவர்கள்-உறுப்பினர்கள் என நூற்றுக் கணக்கானோர் காலை முதலே அங்குத் திரளத் தொடங்கினர்.

சட்டத்துறை துணை அமைச்சர் மு. குலசேகரன், வழக்கறிஞர் மன்ற மேநாள் தலைவர் அம்பிகா சினிவாசன், சமூக செயல்பாட்டாளரும் மேநாள் பிரதமர் துன் மகாதீரின் மகளுமான மரினா, மலேசிய இந்து தரும மாமன்றத்தின் முன்னாள்-இந்நாள் தலைவர்களான பேராசிரியர் டத்தோ என்.எஸ். இராஜேந்திரன்-வ.ரிஷிக்குமார், பன்னாட்டு மனித உரிமை அமைப்பின் தலைவர் சசிக்குமார், இந்திய சமுதாயத்தில் நன்கு அறியப்பட்ட வழக்கறிஞர்களான டி.பி.விஜேந்திரன்-ஈப்போ மதியழகன்-ராஜேஷ் நாகராஜன் உள்ளிட்டோர் அங்கு திரண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்தப் பேரணி குறித்து, அண்மை நாட்களாக சமூக ஊடக வெளியில் அதிகமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டும் வெறும் நூற்றுக் கணக்கானவர்களே அங்கு திரண்டது சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

குறைந்தது ஓராயிர பேராவது திரண்டுவந்து, இந்திரா காந்திக்கு ஆதரவாக அணிவகுத்திருக்க வேண்டும். வெறும் நூற்றுக் கணக்கானோர் முன் ஒலிவாங்கியை கையிலேந்தி பேசுவதற்கு மட்டும் அதிகமானோர் வரிசைப் பிடித்தனர்.

ஒருவழியாகப் புறப்பட்ட பேரணியில் ‘காவல் துறையே நியாயமாக நடந்து கொள்’; ‘இந்திரா காந்திக்கு நீதி வேண்டும்’; ‘பிரசன்னா தீட்சாவை மீட்க வேண்டும்’, ‘தேசிய காவல்ப்டைத் தலைவரே, எங்கே என் மகள்?’ என்றெல்லாம் பொறிக்கப்பட்ட அட்டைகளை அதிகமானோர் ஏந்திச் சென்றனர்.

Made with LogoLicious Add Your Logo App

முன்வரிசையில் நடந்த இந்திராகாந்தியுடன் அவரின் மற்ற இரு பிள்ளைகளும் தம் உடன்பிறப்பான பிரசன்னாவின் குழந்தைப் படம் பொறிக்கப்பட்ட தட்டியுடன் பிரசன்னாவிற்கு பிடித்த பொம்மைக் கரடியையும் ஏந்திச் சென்றனர்.

பிபிபி கட்சியின் மகளிர் பிரிவினரும் இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையை ஏந்திச் சென்றனர். அதைப்போல, மஇகா இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்களும் குழுமி இருந்தனர். முரளி தலைமையிலான அமைப்பினரும் அங்கு காணப்பட்டனர்.

தனி ஆர்வலர்களும் பொது மக்களும் ஏராளமாகத் திரண்டு, தனித்தும் செல்ல மகளைப் பிரிந்தும் வாழும் தாயான இந்திரா காந்திக்கு ஆதரவு நல்கினர்.

அனைத்தையும் காவல் அதிகாரிகளும் காவல் படையினரும் அவதாணித்த வண்ணம் இந்த நிகழ்ச்சியை, ஆகம அணியின் சார்பில் அருண் துரைசாமி ஒருங்கிணைத்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை