200-க்கும் மேற்பட்டோர் மரணம்! 100-க்கும் அதிகமானோரை காணவில்லை!! உதவிக்கு போர்க்கப்பல் தயார் நிலையில்!!!

தீவு நாடு இலங்கையைச் சூழ்ந்திருக்கும் கடல் பகுதியில் விமானந்தாங்கி போர்க்கப்பல் தயார் நிலையில் இருக்கிறது.
எந்த நாட்டின்மீதும் போர் தொடுப்பதற்காக இந்தப் போர்க் கப்பல் தயாராக இல்லை; மாறாக முழு வெள்ளக்காடாக மாறி உள்ள இலங்கையின் மக்களை காப்பாற்றுவதற்காக;
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு
ஏற்பட்டிருக்கும் வெள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளவும் மீட்புப் பணில் ஈடுபடவும் போர்க்கப்பல்களில் உள்ள விமானங்களை பயன்படுத்த அரச உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடாவை அடுத்து நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை புயலாக உருமாறியது.
திட்வா-Ditwah) என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் தொடர்பாக, கடந்த சில நாட்களாகவே இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வாகனம், சான்றிதழ், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளுமாறு இலங்கை அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

‘உமா ஓயா’ அணைக்கட்டில் நீர் நிரம்பி வழிந்ததால் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து வெள்ளம் மேலும் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு கொழும்பு நகரில் ஏற்பட்டதை விட மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.
மஹாவெலி, தெதுரு ஒயா, மஹா ஒயா, காலா ஒயா, மெனிக் கங்கா, மல்வாது ஒயா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயக் கட்டத்தைத் தாண்டி இருப்பதாகவும் இந்த ஆறுகளுக்கு அருகில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும் வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் இலங்கையின் நீர்பாசனத்துறை மேலும் எச்சரித்துள்ளது. .
இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தால் இருநூற்றுக்கும் அதிகமான பேர் பலியாகியுள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..
கடுமையான வெள்ளப் பேரிடர் காரணமாக, கண்டி, பதுளை, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 100 பேர்வரை உயிரிழந்துள்ளனர்; காணாமல் போனோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை உற்பத்திக்கு பெயர் பெற்ற இந்த நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 51 ஆயிரம் ஏக்கரிலான நெல் வயல்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள இலங்கை வானிலை ஆய்வுத் துறை, ‘1978 சூறாவளியின் போது, பேராதனையில் ஒரு மலை இடிந்து விழுந்து நிலச்சரிவை ஏற்படுத்தியது. பேராதனை சந்திப்பில், கம்போலா நோக்கி சாலை திரும்பும் இடத்தில், ஒரு மலை இடிந்து விழுந்தது, சில வீடுகள் சேதமடைந்தன. இன்று, பேராதனை பல்கலைக்கழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 40 ஆண்டு காலத்தில் இதுபோன்ற ஒரு வெள்ளம் ஏற்பட்டதில்லை.” என்று தெரிவித்துள்ளது.
மகாவலி ஆறு முதல்முறையாக கரைபுரண்டு ஓடுவதாகவும் கண்டி நகரமும் முதல் முறையாக மூழ்கியுள்ளதாகவும் இலங்கை வானிலைத் துறை தெரிவித்துள்ளது

இலங்கையில் அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்க வேண்டிய துறை அலுவலகங்கள் மட்டும் திறந்துள்ளன
மக்கள் தங்கள் அவசர தேவைக்கு, பேரிடர் மேலாண்மை மையத்தை 117 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்காக சுமார் 20,000 -க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய மலைப்பகுதி உட்பட இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நவம்பர் 27 வியாழக்கிழமை சிக்கிய 3,800 பேரை பாதுகாப்பாக மீட்க இராணுவ வீரர்கள் துரிதமாக கடமையாற்றுனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில அத்தியாவசிய ரயில்கள் தவிர மற்ற அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் – புத்தளம் சாலையில் 70 பேருடன் சென்ற பேருந்து பாலத்தில் சிக்கிக்கொண்டது. அந்த பேருந்தில் உள்ளவர்களை மீட்க உலங்கூர்தி உதவி நாடப்பட்டது.
கலாவாவி பகுதிக்குட்பட்ட நெல்லியாகம கிராமத்திலிருந்து மேய்ச்சலுக்காக விட்ட கால்நடைகளை அழைத்துவரச் சென்ற ஒருவர் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார்.
வெள்ளத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு தென்னை மரத்தில் ஏறி தவித்த அவரை, ஒரு நாளுக்குப் பிறகு நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை விமானப் படை மீட்டது.
நுவரெலியா சாலையில்
ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, மலை சரிந்து விழுந்ததில் ஒரு கிராமமே புதைத்துவிட்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு குழந்தை,, இரு சிறுமியர் உட்பட15 பேர்வரை புதையுண்டதாக அஞ்சப்படும் நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களில் 1000 மில்லீமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ள நிலையில் மலையடிவாரத்தில் உள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏறக்குறைய கால் பகுதி இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது; அதேவேளை, இலங்கை மக்களில் ஏறக்குறைய கால் பங்கினர் இணைய சேவை இன்றி கைத் தொலைபேசிகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்
இலங்கையில் போக்குவரத்து அடியோடு நிலைகுத்தியுள்ளது வாடகை வண்டி பேருந்து ரயில் சேவை மச்சக்கர வண்டி உள்ளிட்ட யாவும் தடைப்பட்டு உள்ள நிலையில் அந்த நாட்டிற்கு வருகின்ற
இலங்கைக்கு விமானங்கள் இந்தியாவை நோக்கித் திருப்பி விட தீர்மானிக்கப் பட்டுள்ளது.


