
கடைச் சங்கம் மறுவிய காலத்தில், ஏறக்குறைய 3-ஆம் நூற்றாண்டு அளவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சமூக சிக்கலும் போக்கும் இருந்திருக்கின்றன.
அத்தகையவற்றை அடையாளம் கண்டுத்தான் தாம் இயற்றிய 1,330 குறும்பாக்களின் வழி பொய்யாமொழி யார் திருவள்ளுவப் பெருந்தகை நமக்கெல்லாம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
அதில் ஒன்றுதான் அழுக்காறாமை என்னும் 17-ஆவது அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஆறாவது குரல்வழி சொல்லி இருக்கும் கருத்து.
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகிறவன் அல்லது தடுப்பவன் மட்டும் அல்லன்; அவனுடைய சுற்றத்தினரும்கூட, உடையும் உணவும் இல்லாமல் இன்னலை எதிர்கொள்வர் என்று
மு. வரதராசனார் விளக்கம் அளித்துள்ள அந்தக் குறள், இதுதான்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்- உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
தமிழ் மலர் நாளிதழ் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், அதில் பணிபுரிந்த 14 பேருக்கு அரசாங்கத்தின் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது.
அன்பர் செ. வே. முத்தமிழ் மன்னன் தலைமையிலான மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மேற்கொண்ட அயராத- முனைப்பான முயற்சியின்வழி இந்நிதி உதவி கிடைத்துள்ளது.
இந்த நிதி உதவியை வழங்கியது, மடாணி – ஒற்றுமை அரசாங்கம்; குறிப்பாக, தகவல் அமைச்சகம்.
இந்த உதவித் திட்டத்தில் அந்த நாளேட்டின் செய்தியாளர்களான ரமணி, மெத்தியூஸ், டி கே மூர்த்தி, பந்திங் மணிமாறன் ஆகியோர் புறக்கணிக்கப் பட்டிருப்பதை நினைக்குங்கால் மேற்குறிப்பிட்ட குறள், மீண்டும் மனத்திரையில் நிழலாடுகிறது.


