
மலேசிய இந்திய சமூகம் முன்னேற்றம் காணவும் வலிமை பெறவும் ஒருமைப்பாடு மிக முக்கியம். அதற்கான அடித்தளமாக விளங்கும் கூறுகளில் சமய விழாக்களுக்கு முக்கிய பங்குண்டு; அதன் அடிப்படையில் கார்த்திகைத் தீப திருநாளும் மலேசியவாழ் இந்தியர்களிடையே ஒற்றுமையை முன்னிலைப்படுத்தும் சமய விழா என்று தெரிவித்துள்ல மக்கள் முற்போக்குக் கட்சி – பிபிபி தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன், கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத்.தெரிவித்துள்ளார்.
சௌரம், சைவம், வைணவம், சாக்தம், கணபதியம், கௌமாரம் என்னும் ஆறு சமயக் கொள்கைகளை உள்ளடக்கிய இந்து சமயத்தில், தமிழ்க் கடவுளும் கௌமார வழிபாட்டுக் கொள்கையின் நாயகனுமான திருமுருகக் கடவுக்குரிய விழாக்களில் இன்று கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளுக்கு சிறப்பான இடம் உண்டு.
கார்த்திகைத் திங்களில் முழுநிலவு நாளில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவருகின்ற வேளையில் இல்லங்களிலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி திருமுருகக் கடவுளை வணங்கி வழிபடும் தமிழர் மரபு, பல்லின மக்களைக் கொண்ட இந்த மலைத் திருநாட்டிலும் வழிவழியாக பின்பற்றப் படுகிறது.

குன்றந்தோறும் குடியிருக்கும் மலைவாழ் கடவுளான திருமுருகனுக்கு, இம்மலை- யகத்திலும் சிறப்பான தலங்கள் உண்டு. அத்தகைய தலங்களில் இன்றைய கார்த்திகை தீப் நந்நாளில் தீபம் ஏற்றுவதுடன் இந்து மக்கள் தத்தம் இல்லங்களிலும் தீபமேற்றி கார்த்திகை நாயகன் கந்த வேலனை வழிபடுகின்றனர்.
ஞான வடிவான வேலவன், பெருஞ்சோதி வடிவக்காட்சி தந்து தம் பக்தர்களைக் காப்பதுபோல், இந்து சமய பக்த பெரு மக்களும் ஒன்றுபட்டு அவனருள் நாடுகின்ற இந்த நாளில், மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வையும் ஒருமைப்பாட்டையும் முன்னிலைப்படுத்த வேண்டும்; அதுதான், சக வாழ்வுக்கும் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கவல்லது என்று டத்தோ டாக்டர் லோக பால மோகன் வெளியிட்டுள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியியில் தெரிவித்துள்ளார்.
அரசியல் வேறுபாட்டுடன் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும் தங்களின் முன்னேற்றத்திற்கும் நிலைத்தன்மைக்-குமான ஒருமைபாட்டைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நாளில் மனதிற் கொள்வோம்; கார்த்திகை திருநாளின் ஒளி அனைவரையும் இணைக்கும் சக்தியாக அமைய வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கார்த்திகை ஒளி நம் எண்ணங்களை ஒளிரச் செய்து, வேறுபாடுகளைப் புறம் தள்ளி, அனைவரையும் ஒன்றுபடுத்தட்டும்” என்று லோகபால மோகன் வெளியிட்டுள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


