
நம்பிக்கை ஊடகக் குழுமத்தின் 4-ஆவது நட்சத்திர விருதளிப்பு விழா நேற்று கோலாலம்பூரில் நட்சத்திரத் தகுதியோடும் பல்துறைசார் நட்சத்திரங்களோடும் வெகுசிறப்பாக நடைபெற்றது.

மலேசிய இந்திய சமுதாயத்தின் நாளைய தானைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன், கோடம்பாக்கத்து நட்சத்திர தம்பதியரான சரத்குமார்-ராதிகா இணையர், டான்ஸ்ரீ த. மாரிமுத்து, பேராசிரியர் முனைவர் சு.குமரன் உள்ளிட்ட கல்வியாளர்கள், மக்கள் நீதிக் கட்சி(பிகேஆர்) உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மருத்துவருமான டாக்டர் சத்திய பிரகாஷ், அரசியல்வாதியும் விளையாட்ட்டுத் துறையைச் சேர்ந்தவருமான டத்தோ த.மோகன், மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் புனிதன் ம.இ.கா. தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மலேசிய தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள்- சாகுல் உள்ளிட்ட வர்த்தக பிரபலத்தினர், தேசம் காட்சி-செய்தி ஊடகத் தோற்றுநர் ‘தேசம்’ குணாளன் மணியன், ஆர்.டி.எம். டி.வி.-2 தமிழ்ச் செய்தியாளர் பிரேம் ஆனந்த் தண்ணீர் மலை, தமிழ் லென்ஸ் காட்சி-செய்தி ஊடகத் தோற்றுநர் வெற்றி வாணன் விக்டர், மூத்த புகைப்பட கலைஞர் சுந்தர், காளிதாசன் இளங்கோ, தினத் தந்தி இணைய ஊடகத்தின் பவளச் செல்வன் உள்ளிட்ட தமிழ் அச்சு-இணைய-காட்சி ஊடகத்தினர், மின்னல் பண்பலை வானொலி நிருவாகி குமரன், மூத்த அறிவிப்பாளர்களான நாச்சியா மஸ்ஜித், சந்திரா சூரியா, நடப்பு அறிவிப்பாளர்கள் தெய்வீகன் தாமரைச் செல்வன், நளினி அச்சுதன், உள்ளிட்ட மின்னல் படையினர், கலைத் துறையைச் சேர்ந்த தினேஷ் குமார்-விமலா பெருமாள் இணையர் உள்ளிட்ட கலைத் துறையினர், எழுத்தாளர்கள், சிறியோர் முதல் பெரியோர் வரையிலான விருது வெற்றியாளர்கள், பொது மக்கள் என ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழாவாக நேற்றைய 2-ஆம் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.

பேராசிரியர் சு. குமரன், விமலா பெருமாள், கலைத் துறைசார் செய்தியாளர் எஸ்.சரவணன், கே.எஸ். மணியன், தினேஷ் குமார் ஆகியோரைக் கொண்ட நடுவர்க் குழு தேர்ந்தெடுத்த 41 பேருக்கு பல்துறைசார் விருதுகள் வழங்கப்பட்டன.

நம்பிக்கை ஊடகத்தின் சார்பில் பிதாவுல்லா, நா.பார்த்திபன் உள்ளிட்ட குழுவினர் இருநாள் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தனர்.

ஈரோட்டு மகேசும் உள்நாட்டு ரேவதியும் அறிவிப்பு செய்த இந்த நிகழ்ச்சி நம்பிக்கைக் குழுத் தலைவரும் மலேசிய இஸ்லாமிய கல்வி அறவாரியத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமது இக்பால் வரவேற்பு உரையுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

தொடர்ந்து சொல்வேந்தர் டத்தோஸ்ரீ மு சரவணன் சிறப்புரையாற்றினார்.
அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், ஆன்மீக எல்லையில் பயணிப்போர் என பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் எவ்வளவுதான் தூய்மையாக விளங்கினாலும் அதையும் இழித்தும் பழித்தும் கருத்து சொல்கின்ற காலம் இது.

எங்கெங்கும் பரவி இருக்கின்ற சமூக வலைத்தளமும் விவேக கைபேசியை வைத்திருக்கிற அத்தனை பேரும் ஊடகரைப் போல செயல்பட முனைந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இப்படி பிரம்மாண்டமான அளவில் நம்பிக்கை நட்சத்திர விருது என்ற பெயரில் பல்துறை சார்ந்து சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்வது ஆக்கமும் ஊக்கமும் தரவல்லது என்று சரவணன் குறிப்பிட்டதுடன் நம்பிக்கையை ஊடக குழுவினருக்கு பாராட்டும் தெரிவித்தார்.
















