
கோலாலம்பூர், டிச.27:
மக்கள் முற்போக்குக் கட்சி-பிபிபி இளைஞர் மற்றும் மகளிர் அணிகள் இணைந்து, B40 வருமானக் குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் நடத்தும் ‘பள்ளிக்குத் திரும்பு’ திட்டத்தையும், கிறிஸ்துமஸ் விழாவையும் ஒரு சேர இன்று நடத்தினர்.
பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் மூலம் பத்து (Batu) தொகுதியைச் சேர்ந்த 100 மாணவர்கள் பயனடைந்ததாக தெரிவித்தார். மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், பென்சில் பெட்டி, மற்றும் அத்தியாவசிய பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பயனடைந்த மாணவர்களின் பெற்றோர்களில் பலர் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பள்ளி வயதுக் குழந்தைகளைப் பராமரித்து வருவதால் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து வரும் சூழலில் பெரும் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக நகர மையமான பத்து பகுதியில், கிராமப்புறங்களை விட செலவுகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினர்
இதனிடையே, பிபிபி இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன் கூறுகையில், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்.
“குழந்தைகளின் மகிழ்ச்சியும் உற்சாகமும் மனதை நெகிழச் செய்தன. இப்படிப்பட்ட தருணங்களே இத்தகைய சமூக சேவை திட்டங்களின் அவசியத்தை உணர்த்துகின்றன” என்று அவர் கூறினார்.
அதேபோல், பிபிபி மகளிர் அணித் தலைவர் புனிதா முனுசாமியும் இதே கருத்தை பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் நடனங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டதைப் பார்த்து தானும் மகிழ்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

“மாணவர்கள் நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் மூலம் மகிழ்ச்சியாகக் கலந்து கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது அனைவருக்கும் நினைவில் நிற்கும் ஒரு அர்த்தமுள்ள கொண்டாட்டமாக அமைந்தது,” என்றும் அவர் கூறினார்.
கல்வி உதவித் திட்டத்துடன் சேர்த்து, கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விளையாட்டுகள், பரிசுப் பரிமாற்றம், நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தின.
கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை என்றும், பொருளாதார காரணங்களால் எந்தக் குழந்தையும் பின்தள்ளப்படக் கூடாது என்றும் டத்தோ டாக்டர் லோக பால மோகன் வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற ‘பள்ளிக்குத் திரும்பு’ திட்டம் பிபிபியின் தொடர்ச்சியான சமூக சேவை முயற்சியின் ஒரு பகுதியாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும், மேலும் அந்தந்த பிபிபி மாநிலத் தலைவர்களின் வழிநடத்தலில் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


