
ஷா ஆலம், ஜன 6-
தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசம் மது இல்லாத தைப்பூசமாக இருப்பதை உறுதி செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு சில தினங்களுக்கு பத்துமலை வட்டாரத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை.
குறிப்பாக பத்துமலை தைப்பூசத்தில் மது விற்பனைக்கு அனுமதி இல்லை.
செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார்.
மலேசிய திருநாட்டில் தைப்பூசத்தன்று பத்துமலை, பினாங்கு, ஈப்போ, கெர்லிங், சுங்கை பட்டாணி போன்ற முருகப் பெருமான் திருத்தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
ஆகவே பத்துமலை தைப்பூசம் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் மது இல்லாத தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட வேண்டும் என்பதில் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி உறுதியாக இருக்கிறது.
தைப்பூசத்தில் மதுபான விற்பனைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் பிபிபி கட்சியின் தலைவர் என்ற முறையில் முழு ஆதரவை வழங்குவதாக அவர் சொன்னார்.
செய்தி: செ.வே. முத்தமிழ் மன்னன்


