
மக்கள் முற்போக்குக் கட்சி-பிபிபி-யின் 72-ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று தலைநகரில் உற்சாகப் பெருக்குடன் நடைபெற்றது.
மமுக தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தலைமையில் கோலாலம்பூர் உலக வாணிப மையம் மெர்டேக்கா அரங்கத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தை தேசிய முன்னணித் தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமை உரையாற்றி முறைப்படி தொடங்கி வைத்தார்.

மமுக, தேசிய முன்னணியில் இணைந்து பயணிப்பதற்கும் 16 வது பொது தேர்தலில் இணைந்து களம் காண்பதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.
இதனால் தீபகற்ப மலேசியா முழுவதிலூம் இருந்து திரண்டு வந்திருந்த ம.மு.க தலைவர்களும் உறுப்பினர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்; ஜாஹிட் ஹமிடி தலைமை உரை ஆற்றுகையில், அவர் பேச பேச கட்சியினர் பெருத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் புரிந்தனர்.

மமுக-வின் 72 ஆண்டு கால அரசியல் பயணத்தில் இன்றைய நாள் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக அமைந்தது. குறிப்பாக பெண் உறுப்பினர்கள் அதிகமாக கலந்து கொண்டது, அந்தக் கட்சிக்கு அடித்தட்டு அளவில் இருக்கின்ற ஆதரவை புலப்படுத்துகிறது.
2018, 14-ஆவது பொது தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணியிலும் அதன் உறுப்பு கட்சியான மமுக-விலும் சற்று தொய்வு நிலை இருந்தது என்னவோ உண்மைதான்.

இன்றைய கூட்டத்தின் மூலம் அது அகன்று, 16 வது பொதுத் தேர்தலை நோக்கி மமுக இனி அடித்தாடும் விதமாக பயணிக்கும் என்று நம்பலாம்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன், கட்சியின் கடந்த கால வரலாற்றையும் தேசிய முன்னணி உடன் இணைந்து மேற்கொண்ட அரசியல் பயணத்தையும் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.

தவிர, இனம் மொழி சமய பண்பாட்டு எல்லைகளைக் கடந்து மலேசிய கூட்டு சமுதாயத்திற்காக பணியாற்றுவதன் மூலம் மமுக ஒரு பல இனக் கட்சி என்பதை நிரூபித்து வருகிறது.
அதன் அடிப்படையில் பரந்த நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்ற பாங்கினையும் விரிவாக எடுத்துரைத்தார்.




மமுக சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் சுரேன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் தேசிய மகளிர் தலைவி மு.புனிதா உள்ளிட்ட ஏனைய தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




