
பன்னாட்டு மாநாடாக இருந்தாலும் உள்நாட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சமுதாய வீதியில் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றல்மிக்க ஒரேத் தலைவராக விளங்குகிறார் டத்தோஸ்ரீ மு. சரவணன்.
தமிழ் இனத்தில் இரு சமூகத்தினர் அந்த நாள் முதல் இந்த நாள் வரை வர்த்தகத் துறையில் சிறந்து விளங்குகின்றனர்.

அதில் ஒரு சமூகத்தினரான தமிழ் முஸ்லிம் பெருமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சீராட் பன்னாட்டு மாநாட்டின் நிறைவு நாளான நேற்றைய நிகழ்ச்சியை தொடக்கி வைத்து எழுச்சியுடன் செம்மாந்த கருத்துக்களை முன்வைத்து சிறப்பாக உரை ஆற்றிய இவர், பிற்பகலில் நடைபெற்ற ராஜ ராஜ சோழன் நிகழ்ச்சியில், “ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகு, காலம் அறிந்து மற்ற பேச்சாளர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதுதான்” என்று கூறி தமிழகத்து சொல்வேந்தர் சுகி சிவம், மலையகத்து சிறந்த பேச்சாளர் பாண்டித்துரை ஆகியோருக்கு வழிவிட்டு ஒதுங்கிய பாங்கு ஒரு சிறந்த தலைவருக்கான ஆளுமையை வெளிப்படுத்துகிறது.

மஇகா தேசிய துணைத் தலைவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தரும் மலேசியத் தமிழ் இலக்கியப் பாட்டையின் சொல் வேந்தருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் சீராட் மாநாட்டில் பேசியது உண்மைதான்.
தலைவர்கள் ஏராளமான பேர் இருக்கின்ற இன்றைய சூழலில், சமூகத்திற்கான எழுச்சிமிக்க தலைமைத்துவம் இல்லை என்று அவர் சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமானது.

இதை அவர் சுட்டிக் காட்டியதுடன் நின்று விடாமல் அதை நிறைவேற்றிக் காட்டவும் முன்வர வேண்டும்.
காலமகள் அவருக்கு துணை நிற்கட்டும் என்று குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்.


