Monday, August 10, 2026

அரசியல் வேறு; அரச நிருவாகம் வேறு!

மக்கள் நீதிக் கட்சி(பிகேஆர்)யைச் சேர்ந்த மூன்று மக்கள் பிரதிநிதியர், தத்தம் தொகுதி மக்களுக்கான கடமையை ஆற்றுவதில் இருந்து மறைமுகத் தடை செய்வதும் நெருக்கடி கொடுப்பதும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அழகல்ல.

‘மலேசிய மடாணி’ முழக்கத்துடன் இன்றைய மத்தியக் கூட்டரசிற்கு தலைமை ஏற்றுள்ள பிகேஆர், தன் கட்சியைச் சேர்ந்த சுபாங் எம்பி வோங் சென், அம்பாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், பெட்டாலிங் ஜெயா மக்கள் பிரதிநிதி லீ ச்சியான் ச்சங் ஆகிய மூவரும் தத்தம் தொகுதிக்கான சிறப்பு நிதியை நிர்வகிக்கும் MyKhas இணையதளத்தை அணுகுவதிலிருந்து அண்மையில் தடுக்கப்பட்டுள்ளனர்.

இம்மூவரும், கடந்த மேத் திங்களில் ‘பெர்சம’(BERSAMA) கட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். பிகேஆர் மேநாள் தலைவர்களான ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோரால் இந்தப் புதியக் கட்சி நிறுவப்பட்டுள்ளது.

தாய்க் கட்சியான பிகேஆர் எம்பிக்களான வோங் சென், ரோட்சியா இஸ்மாயில், லீ ச்சியான் ச்சங் மூவரும் தங்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் புதுக் கட்சியைத் தொடங்கிய நிகழ்ச்சியில கலந்து கொண்டது, பிகேஆர் தலைமைக்கு குறிப்பாக பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

பிகேஆர் கட்சிக்கு எதிரானதாகாவும் ஒழுங்கு முறையையும் கட்சி விதியையும் மீறியதாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால், சம்பந்தப்பட்ட முவர்மீதும் கட்சி அளவிலான அரசியல் நடவடிக்கையையோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையையோ எடுப்பதற்கு பிகேஆர் தலைமைக்கு முழு அதிகாரமும் உரிமையும் உள்ளது.

அதை விடுத்து, மூன்று பேரும் தங்களின் தொகுதிகான கடமையை ஆற்றுவதில் தடை ஏற்படுத்தும் பொருட்டு, அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதில் விலக்கு அளித்திருப்பது வெளிப்படையான காழ்ப்புணர்வைக் காட்டுகிறது.

கட்சி(பிகேஆர்) நிதியையோ அல்லது கட்சி நிருவாக இயந்திரத்தையோ பயன்படுத்து-வதில் இருந்து இந்த மூவரும் விலக்கப் பட்டிருந்தால், அந்த மட்டில் சரி; ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படுவது தனி மனித காழ்ப்புணர்வைக் காட்டுகிறது. ஜனநாயகத்திற்கு முரணானது.

இந்த முறுகல் நிலையின் உச்சமாக, சுபாங் எம்பி வோங் சென், தன்னுடைய நாடாளும்ன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

உண்மையில் கடந்த புதன்கிழமை தன் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரி அப்துல்லிடம் வழங்கி இருக்கிறார்.


ஒரு நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பதற்கு ஏற்ப மூன்று நாள் வேலை நாள் அவகாசத்தை வழங்கி, இன்று மாலை முறைப்படி தன்னுடைய பதவி விலகலை ஊடகத்தில் தெரிவித்துள்ளார் வோங் சென்.

பிகேஆர் தொடர் அரசியல் பயணத்திற்கு இது பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.

2017-இல் அம்னோ இப்படித்தான் செய்து வந்தது; தலைமைக்கு எதிராக கருத்து சொன்னாலோ அல்லது விமர்சனத்தை முன்வைத்தாலோ சம்பந்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து விலக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது.

தற்பொழுது, பிகேஆர் அத்தகையை வேலையைத் தொடர்கிறது. இப்படி சன்னம் சன்னமாக கட்சி சிதைந்து வந்தால், அது, பிகேஆருக்கு பாதகமாகவே அமையும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை