
ஆலயங்கள் மீதான ஒரு சில அண்மைய அறிவிப்புகள் மற்றும் ஜம்ரி வினோத் போன்ற பொறுப்பற்றவர்களின் குறைகூறல்கள் அனைத்தும் மலேசிய இந்துக்களுக்கு அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, ம.இ.கா,வும் மலேசிய இந்து சங்கமும் இணைந்து நாடு தழுவிய அளவில் ஆலயங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைக் களைவதற்கும் அவற்றுக்குத் துணை நல்குவதற்கும் ஏதுவாக ஒருங்கிணைந்து செயல்படவிருக்கின்றன என்று மஇகா தேசிய துணைத் தலைவர்
டத்தோஶ்ரீ மு. சரவணன் தெரிவித்துள்ளார்.
மஇகா மாநில அலுவலகங்கள் அனைத்தும் இதற்கான செயலகமாக செயல்படும்.
இந்து சங்கத்தோடு இணைந்து அந்தந்த மாநிலத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஆலயப் பிரச்சனை, நிலப் பிரச்சனை, அதற்கு என்ன மாதிரியான தீர்வையும் ஆலோசனையையும் வழங்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அதேவேளை, அந்தந்த மாநில அரசிற்கு என்ன மாதிரியான வேண்டுகோளையும் தீர்வையும் முன்வைக்க வேண்டும் என்று ஆராய்வதற்கும் அந்தந்த மாநிலத்தின் மஇகா-மஇச பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னெடுப்பிற்கு ம.இ.கா. தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் மலேசிய இந்து சங்கத் தலைவர் சங்கபூஷன் தங்க கணேசனும் ஒருமித்து இசைவு தெரிவித்துள்ளனர்.
மலேசிய இந்துக்கள் ஆனைவரும் இன்றைய சூழலை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் மாநில ம.இ.கா. பொறுப்பாளர்களும் இந்து சங்கப் பொறுப்பாளர்களும் உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக சமயப் பாங்காளரு-மான டத்தோஸ்ரீ எம்.சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.


