
பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோக பல மோகன் அவர்கள், மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தும் முக்கியமான சீர்திருத்தங்களை தொடரச் செய்யக்கூடிய ஒரே அரசியல் கூட்டணி தேசிய முன்னணி (தேமு) என தெரிவித்துள்ளார்.
2007 நவம்பர் 25 ஆம் தேதி இந்திய சமூகத்தினர் நடத்திய பெருமளவிலான தெரு போராட்டத்திற்குப் பிறகு இன்று 19 ஆண்டுகள் கடந்தும், அப்போது முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், வாக்குறுதியளிக்கப்பட்ட மாற்றத்திற்காக இந்திய சமூகம் இன்னும் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டு தேசிய முன்னணி அரசு, மலேசிய இந்தியர்களின் நீண்டகால சமூக-பொருளாதார சவால்களை களைய மலேசிய இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் (Malaysian Indian Blueprint) என்ற விரிவான திட்டத்தை அறிவித்து ஒரு முக்கியமான முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அப்போது பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையில் இந்தியர்களுக்கான அமைச்சரவை குழு அமைக்கப்பட்து. இதில். இதில் பிரதமர் துறையின் பொருளாதார திட்டமிடல் பிரிவு (இபியூ) மற்றும் இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்புப் பிரிவு (SEDIC) ஆகியவை இணைந்து அந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணித்ததாக அவர் விளக்கினார்.
ஆனால் 2018 பொது தேர்தலுக்குப் பிறகு BN அரசு வீழ்ச்சியடைந்ததால் அந்த முயற்சிகள் நீண்ட காலம் நீடிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
அத்தேர்தல் பிரச்சாரத்தின் போது துன் மகாதீர் முஹம்மத் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் இந்திய சமூகத்தைப் பாதிக்கும் இதே பிரச்சினைகளை முன்வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் 2022 ஆம் ஆண்டு பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான மடானி அரசு ஆட்சிக்கு வந்தபோதும் இதே பிரச்சினைகளை தீர்க்க வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அந்த வாக்குறுதிகள் இதுவரை அர்த்தமுள்ள நடவடிக்கைகளாக மாறவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு தேர்தலில் மகாதீர் முகமது மற்றும் 2022 தேர்தலில் அன்வர் இப்ராஹிமை நம்பி இந்திய சமூகம் ஏமாற்றம் அடைந்தனர்.
2007 போராட்டத்திற்கு கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் கடந்தும் மலேசிய இந்தியர்கள் இன்னும் பாகுபாடு மற்றும் ஒதுக்கப்பட்ட நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், பலமுறை வாக்குறுதி அளிக்கப்பட்ட முன்னேற்றத்தின் தெளிவான அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“கோயில்கள் ‘சட்டவிரோத கோவில்’ எனக் குறிக்கப்பட்டு இடிக்கப்படுவது மிகவும் வேதனையானது.
இது இந்திய சமூகத்தில் ஏமாற்றத்தையும் அநீதியின் உணர்வையும் மேலும் அதிகரிக்கிறது.
பல வகையில் நாம் மீண்டும் ஆரம்ப நிலைக்கே திரும்பிவிட்டதாக தோன்றுகிறது,” என அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் இந்திய சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, நீண்டகால தீர்வுகளுக்கான உண்மையான உறுதிப்பாடு இல்லாத நிலை நீண்ட காலமாக தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.
2017 ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சியில் தொடங்கப்பட்ட சீர்திருத்த முயற்சிகளை தொடரச் செய்யக்கூடிய ஒரே அரசியல் கூட்டணி தேசிய முன்னணி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்பினர் கட்சியாக இருக்கும் பிபிபி மஇகா மற்றும் தேசிய முன்னணியை ஆதரிக்கும் கட்சிகளுடன் இணைந்து கல்வி, பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, வீடமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு, சமூக நலன் மற்றும் உட்சேர்க்கை ஆகிய துறைகளில் முக்கியமான மாற்றங்களை முன்னெடுக்கத் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.
மலேசியாவின் தேசிய வளர்ச்சியில் இந்திய சமூகமும் சமமான பயன்களைப் பெறுவதற்கும் சமூக-பொருளாதார இடைவெளியை குறைப்பதற்கும் இவை மிகவும் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய சமூகத்தின் நீண்டகால ஆசைகள் இறுதியில் நிறைவேறுவதற்கு பிபிபி தொடர்ந்து தனது பங்கினை வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


