
தேசிய முன்னணியிலேயே தொடர்வதாக மஇகா அறிவித்துள்ளது.
தேசிய அரசியலில் பாரம்பரியமிக்கக் கட்சியும் நாடு விடுதலை அடைவதற்கு முன்பே தோன்றிய அரசியல் இயக்கமுமான மஇகா, 2026ஆம் ஆண்டுக்கான முதல் மத்திய செயலவைக் கூட்டத்தை இன்று அதன் தலைமையகத்தில் நடத்தியபின் ஊடகத்தாரை சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தது.
ஒற்றுமை அரசில் பதவி இல்லாமல், சொந்தக் கூட்டணியிலும் மரியாதை இல்லாத நிலையில் பெரிக்காத்தான் கூட்டணியில் இணையலாம் என்ற பார்வை இருந்தது உண்மைதான்.

அந்த காலக்கட்டத்தில் பெரிக்காத்தான் கூட்டணி என்னும் தேசியக் கூட்டணியின் தலைவராக இருந்தவர் டான்சிறீ முகைதீன்.
அவர் தேசிய முன்னணியில் நீண்ட காலம் பயணித்தபோது, ஜோகூர் மாநில மந்திரி பெசார்(மாநில முதல்வர்), கூட்டரசு கல்வி அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். இந்திய சமுதாயத்துடன் நெருக்கமான நட்பும் உறவும் கொண்டிருந்தவர்.
காலவோட்டத்தில் அரசியல் களம் மாறினாலும், அவர் தலைமையிலான கூட்டணிமீதிருந்த ஆர்வமும் நல்லெண்ணமும் மஇகாவிற்கு இப்பொழுதில்லை.
இப்பொழுது மதவாதக கட்சியான பாஸ், தேசியக் கூட்டணிக்கு தலைமை ஏற்பதால், தற்போதைய நிலையில் தேசிய முன்னணியிலேயே தொடர்வதென முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும் தேவையேற்பட்டால் கட்சியின் அடித்தட்டு தொண்டர்கள் உட்பட கட்சியின் அனைத்துத் தரப்பினருடனும் பேசி அடுத்த முடிவெடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


