
ஒரே நாட்டில் கண்ணுக்கெட்டிய தொலைவில் வாழ்ந்தபோதும் பெற்ற தாயின் அன்பு அரவணைப்பு கண்டிப்பு கண்காணிப்பு எதுவும் இல்லாமல் வாழ வேண்டிய அபாக்கிய நிலை பிரசன்னா தீட்சாவைப் போல இன்னொரு குழந்தைக்கு ஏற்படவேக் கூடாது.
ஒரே அரசியல் சாசனத்தின்கீழ் ஒரே பண்பாட்டுச் சூழலில் அதே காற்றை சுவாசித்தும் அதே நீரைப் பருகியும் வாழ்ந்த போதிலும் தாயையும் மகளையும் இன்றுவரை பிரித்து வைத்திருப்பது எது?
மதம்!, மதம்!! மதம்!!!
மதவாதம்! மதவாதம்!! மதவாதம்!!!
ஏ மதவாதம் என்னும் கோடரிக்காம்பே, நீ இந்த மண்ணில் ஒடிந்துவிழும் நாள் எந்நாள்?
இன்னும் எத்தனைக் காலத்திற்கு எம் மானுட குலத்தில் பிரிவினையையும் சச்சரவையும் ஏற்படுத்துவாய்?
வானியல் வித்தகன் கலிலியோவை பித்தன் என்றாய்;
பாண்டிய மன்னனுக்கு பித்தம் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவேற்றி பிணந்தின்னிக் கழுகாக மாறினாய். ஒரு தலைக்கு ஒரு தங்கக் காசு என விலைபேசி, பல்லாயிரக் கணக்கான ஆசீவர்களை தலைவேறு உடல்வேறாக்கி மௌரியப் பேரரசில் பௌத்தம் வளர்த்தாய்.
ஈழ மண்ணில் இலட்சக் கணக்கான தமிழர்தம் குருதியை வெதுவெதுப்புடன் குடித்துத் தீர்த்தாய்; அன்றைய பர்மா-இன்றைய மியன்மாரில் இலட்சக் கணக்கான ரொகிங்கியா மக்களை இன்னமும் அலைக்கழிக்கிறாய்; வங்கதேச இந்துக்களை சன்னம் சன்னமாக அழித்து வருகிறாய். இப்பொழுதுகூட, நோன்பு மாதம் என்றுகூட பார்க்காமல் பாலத்தீன மண்ணிலும் வளைகுடா மண்டலத்திலும் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்களை அழித்தாய்; சிதைத்தாய்; இன்னமும் அவ்வண்ணமே செய்தும் வருகிறாய்.
இப்படி, காலந்தோறும் மதம்பிடித்து அலையும் உன்னை காலன் கணக்குத் தீர்க்கும் நாள் எந்நாள்? உலக மக்கள் யாவரும் ஒன்றித்து வாழும் வண்ணம் நீ அழிந்தொழிய மாட்டாயோ?

இந்திரா காந்தியின் மூத்த மகளும் மகனும்
பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியை திருமதி இந்திரா காந்தியின் மூன்றாவது மகள் பிரசன்னா தீக்சா-வை மீட்டு தாயிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு தலைப்பட்சமாக அந்தப் பெண் மதமாற்றம் செய்யப்பட்டதும் செல்லாது என்றும் அந்த மடந்தையை எங்கிருந்தாலும் மீட்டு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பேரா மாநிலத்து ஈப்போ உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆண்டுகள் பல ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை.
அரசு வழங்குகின்ற எரியெண்ணய் சலுகையை தன் அடையாள அட்டைமூலம் பயன்படுத்திக் கொண்டு, இந்திரா காந்தியின் மேநாள் கணவன் பத்மநாதன் முகமது ரிடுவான் என்ற பெயருடன் இன்னமும் உள்நாட்டில்தான் இருக்கிறார் என்று ஊடகத் தகவல் தெரிவித்தாலும், அவரின் அடையாள அட்டையை வேறு யாராவது பயன்படுத்தி இருக்கலாம் என்று தேசிய காவல் படைத் தலைவரே சொன்னார்.
ஒருவரின் அடையாள அட்டையை இன்னொருவர் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாக இருந்தாலும், அதை நாட்டின் காவல் படைத் தலைவரே வழிமொழிந்தது வினோதத்திலும் வினோதம்.
இதன் தொடர்பில், தேசிய பதிவுத் துறையும் இன்றுவரை விளக்கம் அளிக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, முகமது ரிடுவானைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுவதாக தேசிய காவல்படைத் தலைவரே பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்தது இன்னும் புதுமையானது; பெற்ற தாயிடம் இருந்து ஒன்றரை வயது குழந்தையை கணவனே கடத்திச்சென்று இன்றுவரை மறைமுக வாழ்க்கையைத் தொடர்வது என்ன தருமம், என்ன நீதியென்றேத் தெரியவில்லை.

முகமது ரிடுவான் தன் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பெட்ரோல் நிலையத்தில் எண்ணெய் நிரப்பிய மறைகாணிப் பதிவு தெளிவாக இல்லையென்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எஸ் பி எம் தேர்வு மாணவியாக தற்பொழுது இருக்க வேண்டிய இந்தப் பெண் பிரசன்னா தீக்சா, ஏறக்குறைய ஒன்றரை வயதாக இருந்த பொழுது சொந்த தந்தையாலேயே கடத்தப்பட்டு மதமாற்றமும் செய்யப்பட்டாள்.
மலேசிய தேசிய அரசியலையே புரட்டிப்போட்ட தேர்தல் முடிவு 2008 மார்ச் எட்டாம் நாள் வெளியானது. அன்றைய நாளிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி பிறந்த இந்தப் பெண் குழந்தை, இன்று தன் பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடும் அதேவேளை 19-ஆவது வயதை எட்டுகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் எட்டாம் நாள் 18 வயதைத் தொட்டபொழுதே ‘Minor’ என்னும் பருவத்தைக் கடந்து, ‘Major’ என்னும் நிலையை எட்டிவிட்டதால், இனி அந்தப் பெண் தன் எதிர்காலம் குறித்து கல்வி-வேலை-சமயம்-பண்பாடு-இல்லறம் குறித்து எதுவாயினும் தன் சொந்த முடிவை எடுக்கலாம்.

நீதிமன்றம்கூட அதில் தலையிடாது; இதையெல்லாம் உணர்ந்த தாய் மு.இந்திரா காந்தி, “தன் கடைசிப் பெண்ணும் இரண்டாவது மகளுமான பிரசன்னா தீக்சா, எந்த சமயத்தைத் தழுவி இருந்தாலும் இனி அது ஒரு பொருட்டன்று; அவளைப் பார்த்தால் போதும்; அவளுக்குப் பிடித்த கரடி பொம்மையுடன் அலைகிறேன். அதை அவளிடம் ஒப்ப்டைத்து, ஆரத் தழுவி என் வாஞ்சையைத் தணித்துக் கொள்வேன்” என்று கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னும் அந்தத் தாயையும் அன்பு மகளையும் சேர்க்க நாட்டோரே, நல்லோரே, சமதரும எண்ணம் கொண்ட தனி மனிதர்களே, சீரிய சிந்தனை கொண்ட தலைவர்களே உங்களின் எவராவது ஒருவராவது முன்வரமாட்டீரோ?


