
டத்தோ டாக்டர் லோக பாலமோகன் தலைமையில் புத்தெழுச்சி
பிபிபி கட்சி நேற்று தனது 73ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.
நீண்ட அரசியல் பயணத்தை நினைவுகூர்வதோடு, தற்போதைய தலைமையின்கீழ் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
1953 ஏப்ரல் 10ஆம் தேதி பேராக் முற்போக்கு கட்சி எனத் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, பின்னர் தனது பெயரை மக்கள் முற்போக்கு கட்சி என மாற்றிக் கொண்டு மலேசிய அரசியலில் முக்கிய பங்காற்றியது.
1970களில் தேசிய முன்னணியில் இணைந்து அதன் செல்வாக்கை தேசிய அளவில் விரிவுபடுத்தியது.
2000களின் ஆரம்பத்தில் பிபிபி முக்கிய முன்னேற்றம் கண்டது. மேலவையில் பிரதிநிதித்துவம் மற்றும் துணை அமைச்சர் பதவிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
2004 பொதுத் அதேர்தலில் தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியை வென்றது, அதன் அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
ஆனால் 2008 பொதுத் தேர்தல் ‘அரசியல் சுனாமி’ என அழைக்கப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியது. தேசிய முன்னணிக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவு பிபிபியையும் பாதித்தது.
உள்கட்சி பிரச்சினைகள் தீவிரமடைந்து, 2019ஆம் ஆண்டு கட்சி பதிவு ரத்து செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பதிவு செய்யப்பட்டது.
தற்போது பிபிபி,, டத்தோ டாக்டர் லோகபால மோகன் தலைமையில் அமைதியான முறையில் கட்சி செயல்படுகிறது.
அவர் தனித்துவமான தலைமையை வெளிப்படுத்துகிறார்.
முன்னாள் துணை அமைச்சருமான அவர், கட்சியின் நம்பிக்கையையும் அமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகிறார்.
அவரின் முக்கிய சாதனைகளில் ஒன்று பிபிபியை மீண்டும் தேசிய முன்னணி கூட்டணியில் இணைத்தது ஆகும்.
கட்சியின் 72வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேமு தலைவர் டத்தோஸ்ரீ அகமத் சாகித் அமிடி, பிபிபி மீண்டும் இந்திய வாக்காளர்களின் நம்பிக்கையை பெற உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பல இனக் கட்சியாக இருந்தாலும், பிபிபி இன்னும் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியின் ஆதரவைப் பெற்றுள்ளது.
தற்போதைய தலைமையில் பிபிபி விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் புதிய கிளைகள் அமைத்தல், அடிப்படை நிலைத் தலைமையை வலுப்படுத்தல் மற்றும் தொழில் முனைவோரை கட்சியில் இணைத்தல் ஆகியவை அடங்கும்.
அடுத்த பொதுத் தேர்தலில் 8 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 12 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தையும் கட்சி அறிவித்துள்ளது.
இது சவாலான இலக்காக இருந்தாலும், மலேசிய அரசியல் மாற்றமடைந்து கொண்டிருப்பதால் இது சாத்தியமற்றது அல்ல. ஜனநாயக செயல் கட்சி (DAP) மற்றும் மக்கள் நீதி கட்சி (PKR) போன்ற கட்சிகளின் எழுச்சி இதற்குச் சான்றாகும்.
இனம், மதம் பேதமின்றி சமத்துவமான மற்றும் நியாயமான கல்வி முறைக்காக கட்சி தொடர்ந்து போராடும் என்று பிபிபி தலைவர் அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, ரூகுன் நெகாரா கொள்கைகளுக்கு இணங்க, அனைவருக்கும் சமமான மற்றும் நியாயமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாய்ப்புகளுக்காக பிபிபி தொடர்ந்து தற்போதைய தலைமையின்கீழ் குரல் கொடுத்து வருகிறது.
இந்த அணுகுமுறை அடிப்படையில் உண்மையான மலேசிய கூட்டு சமூகத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது..
புதிய திசை, வலுவான கூட்டணிகள் மற்றும் அதிகரித்துவரும் உறுப்பினர் ஆதரவுடன் பிபிபி மீண்டும் எழுச்சி பெறும் நிலையில் உள்ளது.
டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் தலைமையில் பிபிபி மீண்டும் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை கட்சி உறுப்பினர்களிடையே அதிகரித்து வருகிறது.
ஜெயரத்தினம் மணியம் @ அஜாய்
பிபிபி தேசிய ஊடக அதிகாரி,


