
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையரை மாட்சிமைசால் மாமன்னர் தீர்மானிக்க இருக்கிறார்!
இந்த நியமனம் அரசியல்மயமாக்கப்படாது என்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு வலுவான தலைமையின் முக்கியத்துவத்-தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை வழிநடத்த சிறந்த வேட்பாளரைத் தாம் முடிவு செய்வேன் என்றும் ‘யாங் டி-பெர்த்துவான் அகோங்’ சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
அரச(அரண்மனை) ஊடக அலுவலகத்திற்கு அளித்த அறிக்கையில், இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கத் தேவையில்லை; ஊழல், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் முக்கிய நிறுவனமாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்-MACC, தொடர்ந்து திறம்பட செயல்படுவதை உறுதி செய்ய இந்தப் பதவி முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
“இனிவரும் காலத்தில் MACC-ஐ வழிநடத்த சிறந்த வேட்பாளர் யார் என்பதை நான் முடிவு செய்வேன்” என்று முகநூலில் பகிரப்பட்ட அந்த அறிக்கையில் அவர் கூறினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தற்போதைய தலைமை ஆணையர், அஸாம் பாக்கி, அடுத்த மாதம் மே 12-ஆம் நாள் தன் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். கடந்த 2020, மார்ச் மாதத்தில் அவர் முதன் முதலில் நியமிக்கப்பட்டதிலிருந்து, அவரின் பணிக்கால ஒப்பந்தம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது; 2023 மே, 2024 மே, மற்றும் 2025 மே என ஒவ்வோர் ஆண்டு தவணைக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டன.
இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி, பொருளாதாரத் துறை முன்னாள் அமைச்சர் ரஃபிஸி ரம்லி உட்பட பல தரப்பினரும் அஸாமின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.


