Tuesday, April 28, 2026

ஒற்றுமைக் கூட்டணியில் முதல் ஓட்டை!

70 ஆண்டு சுதந்திர மலேசியாவில், தற்பொழுது நாட்டை ஆளுகின்ற அரசியல் கூட்டணி, மிகவும் விசித்திரமான கூட்டணி.

தேசிய அரசியலில் காலமெல்லாம் கீரியும் பாம்புமாக இருந்த தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் இணைந்து புதிய கூட்டணி அமைத்து நாட்டை ஆண்டு வருகின்றன. ஆனால், இந்தக் கூட்டணி, ‘ஒற்றுமைக் கூட்டணி’யென தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பெயர்தான் இன்னும் வினோதமானது;

தற்பொழுது ஏறக்குறைய மூன்றரை ஆண்டை எட்டுகின்ற இந்தக் கூட்டணியில் முதல் முறையாக பிளவும் பிணக்கும் முளைத்துள்ளன. அதுவும், ஒரு மாநில அரசைக் கவிழ்க்கும் அளவிற்கு, நெகிரி செம்பிலான மாநில நம்பிக்கைக் கூட்டணியில் செங்குத்தான பிளவை ஏற்படுத்தி உள்ளது.

இது, கொரோனா காலத்தில் பெர்சத்துக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஃபைஸால் அசுமு தலைமையிலான பேராக் மாநில அரசை, கமுக்கமாக கவிழ்த்து அம்னோ பேராக் தலைவர் டத்தோ முகமட் சாரணி தலைமையில் புதிய ஆட்சியை அம்னோ எப்படி அமைத்ததோ, ஏறக்குறைய அதைப்போன்ற குயுக்தி அரசியலை, தற்பொழுது நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் அம்னோ அரங்கேற்றுவதாக அரசியல் நோக்கர்கள்அவதானிக்கின்றனர்.

2020 டிசம்பர் 05-ஆம் நாள், மந்திரி பெசார் பதவி விலகல் கடிதத்தை கிந்தா அரண்-மனையில் ஒப்படைத்தபின், அகமட் ஃபைஸால் அசுமு கலங்கிய கண்களுடன் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி, அவரின் அரசியல் வாழ்வில் மட்டுமல்ல; மாநில அரசியல் வரலாற்றிலும் மறக்க முடியாத நாளாகும்.

இன்னும் ஐந்தாறு மாதங்களில் தேர்தல் வர இருக்கின்ற நிலையில், நெகிரி செம்பிலான் மாநில அரசைக் கைப்பற்ற நினைக்கும் அம்னோ நெகிரி செம்பிலான் மாநிலத் தலைமையின் முயற்சிக்கு நம்பிக்கைக் கூட்-டணி(பக்காத்தான் ஹரப்பான்) கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநில மந்திரி பெசார்(முதல்வர்) டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூனுக்கு அளித்த வந்த ஆதரவைத் திரும்பப் பெற்ற 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த நட-வடிக்கை, ஒற்றுமை அரசாங்கத்தின் உணர்வைப் பிரதிபலிக்க வில்லை என்றும் “மாநில அரசைக் கைப்பற்றும் முயற்சி” யென்றும் நம்பிக்கைக் கூட்டணியின் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபாமி ஃபாட்சில் கண்டித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்கு நம்பிக்கைக் கூட்டணி வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை, இது-போன்ற ‘துரோகச் செயலை’ வன்மையாக நிராகரிப்பதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மந்திரி பெசார் அமினுடின் ஹரூணுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்ற-தற்காக 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்-கள் கூறிய காரணங்கள், சற்றும் பொருத்த-மில்லாதவை என்றும் ஃபாமி கூறியுள்ளார்.

“ஒற்றுமை அரசும் நாடும் உலகளாவிய விநியோகச் சவால்களை எதிர்கொண்டும் பொருளாதார ஏற்ற-இறக்க சூழலை எதிர்கொள்ளவும் மக்களின் சுமையைக் குறைக்கவும் பாடுபட்டுவரும் வேளையில், மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இருந்தபோதும், அமினுடின் தலைமை-யிலான நெகிரி செம்பிலான் மாநில நிருவாகம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்பதில் நம்பிக்கைக் கூட்டணிக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஃபாமி தெரிவித்திருக்கிறார்.

மேலும், மாநில நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் மக்கள் நீதிக் கட்சியும் (பிகேஆர்) அது தலைமை வகிக்கும் நம்பிக்கை கூட்டணியும் மாநிலத் தலைமை-யுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2023 நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணி-யும் பங்காளிகளாகப் போட்டியிட்டன; இதில் நம்பிக்கைக் கூட்டணி 17 இடங்களையும் தேசிய முன்னணி 14 இடங்களையும் வென்றன.

நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை, அவர் வகிக்கும் பதவியி-லிருந்து நீக்க முயன்றுவரும் நான்கு தலைவர்கள் சம்பந்தப்பட்ட தற்போதைய நெருக்கடியின் காரணமாக, அமினுடினின் தலைமை மீது நம்பிக்கை இழந்ததைக் காரணம் காட்டி, நெகிரி செம்பிலான் அம்னோ நேற்றைய முன்தினக் அவருக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

மாநில சட்டமன்றத்தில் தனக்குள்ள பெரும்-பான்மை ஆதரவு குறித்த பிரச்சினை தெளிவுபடுத்தப்படும் வரை மந்திரி பெசாராகப் பதவியில் நீடிக்குமாறு அமினுடினிடம் துவாங்கு முஹ்ரிஸ் கூறியுள்ளார்.

மறுபுறம், ஐந்து பெரிகாத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதர-வைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான எளிய பெரும்பான்மை இப்போது தங்களிடம் இருப்பதாக நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி, குறிப்பாக மாநில அம்னோ கூறியுள்ளது.

இதில் இன்னோர் அரசியல் விநோதமும் ஏற்பட்டுள்ளது.

2020-இல் பேராக் மாநிலத்தில் பெர்சத்து தலைமையிலான ஆட்சியை எந்த அம்னோ கவிழ்த்ததோ அதே அம்னோவிற்கு முட்டுக் கொடுக்க இப்பொழுது முன்வந்துள்ள பெர்சத்துக் கட்சியின் உள்நோக்கம் என்னவாக இருக்கும்?

அது அப்போது; இது இப்போது; ‘கிடைத்த வரை லாபம்’ என்ற சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர வேறென்னவாக இருக்கும்?

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை