
மலேசியத் தேர்தல் ஆணையம் (EC), ஜோகூர் நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்கான தேர்தல் நாள் தேர்தல் நடைமுறை உள்ளிட்ட அறிவிப்பை இன்று செய்துள்ளது.
ஜொகூர் மாநில பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் ஜூலை 11-லும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் ஆகஸ்ட் 01 அன்றும் நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார்,
ஜொகூர் சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்புமனுத் தாக்கல் ஜூன் 27-யிலும் நெகிரி செம்பிலானில் ஜூலை 18 அன்றும் நடைபெறும்.
இவ்விரு மாநிலங்களின் சட்டமன்றங்கள் இம்மாதத் தொடக்கத்தில் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர், காவல் படையினர் போன்றோர் முன் வாக்குப்பதிவு, ஜொகூரில் ஜூலை 7யிலும் நெகிரி செம்பிலானில் ஜூலை 28யிலும் நடைபெறும்.
பிரச்சார காலம் வழக்கம்போல 14 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஜொகூரில் ஜூலை 10 இரவு 11.59 மணி வரையிலும் அதைப்போல நெகிரி செம்பிலானில் ஜூலை 31 இரவு 11.59 மணி வரையிலும் பிரச்சாரம் அனுமதிக்கப்படும்.
ஜொகூர் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 86.8 மில்லியன் வெள்ளி எனவும், நெகிரி செம்பிலானுக்கானது வெ.80.6 மில்லியன் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் 2.73 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள வேளையில் நெகிரி செம்பிலானில் 889,490 வாக்காளர்கள் உள்ளனர்.
ஜொகூரில் 42,971 தேர்தல் பணியாளர்கள் 1,140 வாக்கு மையங்களில் பணியாற்றும் அதேவேளை நெகிரி செம்பிலானில் 15,344 பணியாளர்கள் 439 மையங்களில் பணியாற்றுவர் என்றும் தேர்தல் ஆணையம் என்று அறிவித்துள்ளது.


