
ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும் தங்களின் வேதனை மட்டும் தீர்ந்தபாடில்லை; தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனையால் மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஆர். ராஜசேகரன், தன் ஆதங்கத்தையும் குமுறலையும் செய்தியாளர்களிடையே
மொத்தமாக கொட்டித் தீர்த்தார்.
நாகரீக மனிதனின் ஒட்டுமொத்த அடையாளமும் முழு வடிவமும் சிகை அலங்காரம்தான்; ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சொத்தாளியாக இருந்தாலும் தலை முடியை சீர் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மனிதனை சமுதாயம் நோக்கும் விதமும் அணுகும் விதமும் அலாதியாக இருக்கும்.

இந்த நாட்டில் தற்பொழுது வங்காள தேசியர், மியன்மார் நாட்டவர், பாகிஸ்தானியர், இந்திய குடிமக்கள் உள்ளிட்ட தரப்பினரெல்லாம் முடி திருத்தும் நிலையங்களை திறந்து ஆங்காங்கே நடத்துகின்றனர். அவர்களுக்கு எப்படி அனுமதி கிடைக்கிறது? அவர்களுக்கான ஆள்பலம் எப்படி சீர் செய்யப்படுகிறது என்ற விவரம் எதுவுமே தெரியவில்லை.
ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய மலாயா காலத்தில் இருந்தே இந்த நாட்டு குடிமக்களின் நாகரீக செழுமைக்கு கட்டியம் கூறும் வகையில் பாரம்பரிய சிகை அலங்கார நிலையங்களை தலைமுறை தலைமுறையாக இந்த நாட்டில் நடத்தி வருவது இந்திய சிகை அலங்கார நிலையத்தினர் தான்.
இதையெல்லாம் மத்திய கூட்டுரசு கருத்தில் கொள்வதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டு கூட்டத்திலும் தொழிலாளர் பற்றாக்குறை பற்றி பேசுவதே வழக்கமாகிவிட்டது.

இத்தகைய சூழலில் மிகுந்த போராட்டத்-திற்குப் பிறகு கடந்த ஆண்டு 3,500 வெளிநாட்டு தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு அரசு அனுமதி அளித்தது; ஆனாலும் அதிகமான சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை தறுவிவிக்க முடியவில்லை
பல்வேறு தடங்கல்காரணமாக இதுவரை அந்த சிக்கல் நீடிக்கிறது. தொழிலாளர் பற்றாக்குறையால் சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் கடையை நடத்த முடியாமல் வருமானமும் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
இத்தகைய சிக்கல்களையும் இன்னலையும் சொல்லி தீர்வு காண்பதற்காக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனை சந்திக்க விரும்பி பல முறை முயற்சி மேற்கொண்டும் தோல்விதான் மிஞ்சியது.

அவர் எங்களை சந்திக்க அடியோடு மறுக்கிறார். அவர் இப்படி தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் நாங்கள் யாரிடம் சென்று எங்கே முறையிடுவது என்று தெரியவில்லை என்று இந்த சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டுக் கூட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜசேகரன் பொறிந்துத் தள்ளினார்.
இதற்குமுன் மனிதவள அமைச்சராக இருந்த ஸ்டீவன் சிம்’மிடம்கூட தங்கள் பிரச்சனையை சொல்ல முடிந்தது; அதற்கு முன், வி. சிவகுமார், அவருக்கு முன் டத்தோஸ்ரீ மு. சரவணன், மு குலசேகரன் போன்றவர்கள் எல்லாம் மனிதவள அமைச்சராக இருந்தபொழுது தங்களால் எளிதாக சந்திக்க முடிந்தது;

நிறை குறை எதுவாக இருந்தாலும் அனைவருடனும் எங்களால் எளிதில் கருத்தாட முடிந்தது.
“இவர்களுக்குள் முன்பு தான்ஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியனை எந்த நேரத்திலும் அனுமதி பெறாமல் திடீர் திடீரென சந்தித்து எங்கள் குறைகளை சொல்லி தீர்வு காண முடிந்தது; இப்பொழுது மனிதவள அமைச்சராக இருக்கின்ற ரமணனை சந்திக்கவும் தொடர்பு கொள்ளவும் முடியவே இல்லை;
எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர் பற்றாக்குறை சிக்கல் குறித்து மூன்று அமைச்சுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டி இருக்கிறது உள்துறை அமைச்சகம் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் நலத் துறை ஆகியவற்றையும் நாட வேண்டி இருப்பதால் தாங்கள் அலைய வேண்டியிருக்கிறது;
இந்த சிக்கல்களை விட ‘Gantian’ எனப்படும் மாற்று தொழிலாளர்களை அமர்த்தவும் தெரிவிக்கவும் குழு நுழைவுத் துறை பல தடங்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

அனுமதி பெற்ற தொழிலாளர் ஒருவர் ஏதோ ஒரு சூழலில் சொந்த தாயகம் திரும்பும் நிலையில் அவருக்கு பதிலாக மாற்று தொழிலாளியை அமர்த்திக் கொள்வதற்கு முன்பு எந்த தடையும் சிக்கலும் இல்லை ஆனால் இப்பொழுது அவ்வாறு முடிவதில்லை இது முடி திருத்தும் தொழிலுக்கு மட்டுமல்ல உணவக தொழில் உள்ளிட்ட ஏனைய இந்திய பாரம்பர பாரம்பரிய தொழில் துறையினரும் இது போன்ற சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்”என்று ராஜசேகரன் மேலும் தெரிவித்தார்.
முடி திருத்தும் நிலையத்திற்கு தேவையான தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்காக ஒரே ஒரு அமைச்சகத்தை மட்டும் நாடும் வகையில் நடைமுறையை மாற்றி அமைத்தால் அது தங்களுக்கு சுலபமாக இருக்கும் இது குறித்து மத்திய அரசு உரிய கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் நேற்றைய முன் தினம் கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டப கூட்ட அரங்கில் நடைபெற்ற வெள்ளி விழா நிகழ்ச்சியில் ராஜசேகரன் செய்தியாளர்-களிடம் படபடத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்க தலைவர் டத்தோ முகமது மோசின் பின் அப்துல் ரசாக், சிலாங்கூர்- கோலாலம்பூர் முஸ்லிம் நட்புக் கழகத்தின் தலைவர், டத்தோ பர்துல் இட்ரிஸ், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்க தலைவர் செ. வே. முத்தமிழ் மன்னன், ஆகியோருடன் முடி திருத்தும் நிலைய உரிமையாளர் சங்க தோற்றுநர் பண்டிட் டாக்டர் மதிராஜன், மேனாள் தலைவர் சுதந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் தலைமையில் சிறப்பு செய்யப்பட்டது.


