
ஜூலைத் திங்களில் நடைபெற இருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் லெடாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட N09- கம்பிர், N10- தங்காக் N11- ஜெரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என்று முழு நம்பிக்கை உள்ளதாக மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி தேசிய தகவல் தொடர்புத் தலைவர் ஜெயரத்னம் மணியம் @ அஜாய் தெரிவித்தார்.
தங்காக்கில் நடைபெற்ற பிஎன் தேர்தல் இயந்திர அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், லெடாங் மக்களிடையே வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சிக்காக தேசிய முன்னணிமீது மீண்டும் நம்பிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார்.
கடந்த மாநிலத் தேர்தலில் தங்காக் தொகுதியை வெறும் 372 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி இழந்ததை சுட்டிக்காட்டிய அவர், இம்முறை அந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“வாக்காளர்களுடனான எங்களின் சந்திப்புகளும் அடித்தட்டு மக்களின் மனநிலையும் தங்காக் மீண்டும் தேசிய முன்னணி வசமாகும் என்பதைக் காட்டுகின்றன. கம்பிர் மற்றும் செரம் தொகுதிகளிலும் வலுவான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
வெள்ளப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் மக்களின் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காண அனுபவமும் நிரூபிக்கப்பட்ட செயல்திறனும் கொண்ட அரசாங்கம் தேவை என்றும் அவர் கூறினார்.
மேலும், அம்னோ, ம.சீ.ச., ம.இ.கா., பிபிபி உள்ளிட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் வெற்றியை உறுதி செய்யும் என அஜய் நம்பிக்கை தெரிவித்தார்.


