Thursday, July 30, 2026

எம்சிஎம்சி மடாணி அரசின் ஆயுதமா? -பேசாத பேச்சுக்குதடை உத்தரவு!

நீதித்துறை தன் பொறுப்பிலிருந்து விலகுதல், நிருவாக அடிமைத்தனம், அரசியலமைப்புச் சுதந்திரத்தில் பின்னடைவு, மலேசியத் தகவல் பல்லூடக ஆணையத்தை-MCMC ஆயுதமாகப் பயன்படுத்தி அண்மையில் பெறப்பட்ட ஒருதலைப்பட்சமான இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பாக நாட்டின் தலைமை நீதிபதி மாண்புசால் துன் வான் அகமட் ஃபரித் பின் வான் சாலே-விற்கு மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 26-ஆம் நாள் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மலேசிய நீதிமன்றங்களின் சுதந்திரம் மற்றும் நேர்மைக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் அதேவேளை, இந்த உத்தரவின் அசாதாரணமான போக்கு, பொதுமக்களின் கண்ணோட்டத்தையும் நீதித்துறை மீதான நீண்டகால நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்ற கவலையின் காரணமாக இந்தக் கடிதத்தை எழுதுவதாக பொன்.வேதமூர்த்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கடும் உத்தரவு, அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது; தற்போதைய வெளியீடுகள் அவதூறானவை அல்லது சட்டவிரோதமானவை என்று இதுவரை எந்த நீதித்துறை அமைப்பும் கண்டறியாத நிலையில், அந்த வெளியீடுகள் தொடர்பான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஒரு நீதிமன்றம் எதிர்காலப் பேச்சுரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் முன்கூட்டியே முடக்க முடியுமா என்று வினவி உள்ளார்.

ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட, அவதூறானதாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையை முறையாகத் தடுக்கலாம், ஆனால் அது ஒருபோதும் முழு அச்சகத்தையும் மூடவோ அல்லது அந்த செய்தித்தாளை எதிர்காலத்தில் அச்சிடுவதற்குத் தடை செய்யவோ முடியாது.

அதைப்போல, ஒரு தொலைக்காட்சி நிலையம் அவதூறான உள்ளடக்கத்தை ஒளிபரப்பினால், நீதிமன்றம் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அது ஒருபோதும் அந்த நிலையத்தை முழுவதுமாக தடைசெய்யாது.

ஆயினும், வான் முஹம்மது அஸ்ரியின் வழக்கில் இந்த நிலை முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது. அவரின் சமூக ஊடகக் கணக்கின்மீது விதிக்கப்பட்ட தடை, தகவல் தொடர்பு ஊடகத்தின்மீது ஏவப்பட்ட ஒரு சர்வாதிகாரப் போக்காகும்.

சட்டம் உண்மையான, அடையாளம் காணக்கூடிய அல்லது நிரூபிக்கப்பட்ட தவறுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். மதானி அரசாங்கத்தின் அரசியல் கவலையின் அடிப்படையில் அல்ல;

ஓர் இடைக்காலத் தடை உத்தரவின் நோக்கம், பிரதிவாதி நாளை என்ன சொல்வாரோ என்ற மதானி அரசாங்கத்தின் அச்சத்தின் அடிப்படையில் அமைந்துவிடக்கூடாது

ஓர் ஊடகத்தின் எதிர்காலக் கணக்கையும் எதிர்காலப் பேச்சையும் தடை செய்வதன் மூலம், நீதிமன்றம் அபாயமான கோட்பாட்டிற்கு வித்திடுகிறது.

இது ஒருதலைப்பட்சமான முடிவாகும். பிரதிவாதி முற்றிலும் ஆஜராகவில்லை, மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வழக்காடவோ அல்லது அடிப்படை அரசியலமைப்பு உரிமையை நிலைநாட்டவோ வாய்ப்பளிக்கப்படவில்லை.

நீதிமன்றம் ஒரு விண்ணப்பதாரரின் கூற்றுகளுக்கு எளிதில் அடிபணிய முடியாது, குறிப்பாக அந்த விண்ணப்பதாரர் மதானி அரசாங்கத்தின் ‘அதிகார மையமாக’ செயல்படும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கும் நிலையில், ஒருதலைபட்ச தடை உத்தரவ்வு, நீதித்துறையின் புனிதத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.

மதானி அரசாங்கத்தின் எல்லைமீறிய அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான பாதுகாப்பு அரணாக நீதித்துறை இருக்க வேண்டும்; அரசியல் சாசனமும் இதைத்தான் வரையறை செய்துள்ளது. முறையான ஆய்வின்றி, அடிப்படை சுதந்திரத்தை ஈவிரக்கமின்றி நசுக்கும்போக்கு, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் சமிக்ஞையை அனுப்புகிறது.

புத்ராஜயாவில் உள்ள தனது அரசியல் எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீதித்துறை தீவிரமாக வளைந்து கொடுக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இத்தகையப் போக்கு, நீதிமன்றங்கள், அதிகாரத் தரப்பினருக்கு அடிபணிந்தும், கட்டுப்பட்டும் செயல்படும் நிலையை ஏற்படுத்தும்.

தவிர, பொதுமக்களின் கடைசி புகலிடமான நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு யாவும் முற்றிலுமாக நீங்கிவிடும் என்று கவலைகொள்ளும் அதேவேளை, ஜனநாயகமும் நசிந்துவிடக்கூடும் என்று சட்டவல்லுநருமான பொன்.வேதமூர்த்தி அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

நம் நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதும் மலேசிய நீதித்துறையின் இந்த இருண்ட அத்தியாயம் எவ்வாறு நினைவுகூரப்படும் என்பதைத் தீர்மானிப்பதும் தங்களின் மேன்மைமிகு அலுவலகத்தின் ஆழ்ந்த கடமையாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி அந்தக் கடிதத்தில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை