
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு ஆலோசகர் உறுப்பினராக தியாகராஜ் சங்கர நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக்கின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய இவர், இரு தினங்களுக்கு முன்பு ஜூன் 29ஆம் நாள் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு ஆலோசகர் உறுப்பினராக பொறுப்பு ஏற்றார்.
கோலாலம்பூர் மாநகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு நியமன உறுதிக் கடிதத்தை டத்தோ பண்டார் Datuk Seri TPr Fadlun bin Mak Ujud வழங்கினார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
கெஅடிலான் கூட்டுரசுப் பிரதேச துணைத் தலைவருமான இவர் செபூத்தே தொகுதி கெஅடிலான் தலைவராகவும் இருக்கிறார்.
தம்மீது நம்பிக்கை வைத்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு ஆலோசகர் உறுப்பினராக நியமனம் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தியாகராஜ் குறிப்பிட்டார்.
சிறைச்சாலை உளவுத்துறை அதிகாரியாக (ASP) 17 ஆண்டுகள் பணியாற்றி இவர் அரசியலில் ஈடுபட்டு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு ஆலோசகர் உறுப்பினர் பதவி தமக்கு வழங்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்வதாகவும் இவர் குறிப்பிட்டார்.
மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சிறந்த முறையில் அவற்றுக்குத் தீர்வு காண கடுமையாக உழைப்பேன் என்றும் தியாகராஜ் உறுதியளித்துள்ளார்.


