
மலேசிய அரசியலில் இரு முறை பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமது, இன்றும் இனவாத அரசியல் வழியில் தன் நிலைப்பாட்டைத் தொடர்கிறார் மலாய் வாக்காளர்களை “மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்” என அழைக்கும் அவரின் கருத்து, தேசிய ஒருமைப்பாட்டையும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் சவாலுக்கு உள்ளாக்குகின்றன. இந்தக் கட்டுரை, மகாதீரின் அரசியல் பயணத்தின் முரண்பாடுகளையும் மலேசிய சமூகத்தின் எதிர்காலத்திற்கான தாக்கத்தையும் ஆராய்கிறது.
ஒரு சிறுத்தைப் புலி தன் தோலில் இருக்கும் கோடுகளை இழந்தாலும் இழக்கலாம்; அதைப்போல ஒரு குள்ளநரி தன் தந்திர குணத்தை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்ளலாம்; ஆனால், பிராமணர்கள் தங்களின் வஞ்சக குணத்தை தம் ஆழ்மனதிலிருந்து ஒருபோதும் அகற்றவே மாட்டார்கள் என்று டாக்டர் டி என் நாயர் இங்கிலாந்தில் பிரிட்டிஷ் ராணி முன் நடைபெற்ற வட்ட மேசைக் கூட்டத்தில் பேசினார்.
அதைப்போல இரு முறை இந்த நாட்டை ஆண்ட முதுபெரும் தலைவரான துன் டாக்டர் மகாதீர், வானமே இடிந்து விழுந்தாலும் தன்னுடைய இனவாத அரசியலை மாற்றிக் கொள்ளவே மாட்டார் போல தெரிகிறது.
மலாய் வாக்காளர்கள் மலாய் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அவர் இப்பொழுது மலாய் சமூகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தேசிய அரசியலாக இருந்தாலும் உலக அரசியலாக இருந்தாலும் இவர் அனைத்தையும் மத-இன அடிப்படையிலேயே சிந்திக்கிறார்.
இவரின் அண்மைக்கால கருத்துக்கள் தேசிய இறையாண்மைக்கும் மலேசிய கூட்டு சமுதாயத்தின் ஒருங்கிணைப்பிற்கும் பாதகமானவை. மொத்தத்தில், இந்த மலையக ஜனநாயகத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார், மகாதீர்.
“நீங்கள், மலாய் இனத்தவராக இருந்தால், மலாய் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்” என்கிறார் இவர்.
இன்னும் பத்து நாட்களில் ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலும் அடுத்த மாதம் இதே நாளில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் “வாக்குப்பெட்டி மூலம் மலாய் வாக்காளர்களின் தேர்வுதான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்று இவர் இப்போது கூறுவது பச்சையான வலச்சாரிப் போக்காகும்.
முதலில் 22 ஆண்டுகளும் அடுத்து 20 மாதங்களும் என இரு முறை பிரதமராக இருந்து இவர் நாட்டை ஆண்டபொழுது இவருடைய அரசியலிலும் நிருவாகத்திலும் சீன- இந்திய தலைவர்களின் ஈடுபாடும் பங்களிப்பும் இருந்துள்ளன; இவரே ஒவ்வொரு தேர்தலிலும் சீன- இந்தியர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் வெற்றி பெற்றார்.
தற்போதைய அரசியலில் இவர் அடியோடு ஆதரவையும் பிடிப்பையும் பொது மக்களின் நம்பிக்கையும் இழந்துவிட்ட நிலையில், வேறு வழி இல்லாமல் இனவாத அரசியலைப் பேசுகிறார்.
இவருக்கும் இந்நாளைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் அரசியல் ரீதியான சிக்கல் எழுந்த பொழுது அதை தனி மனித பகையாக்கி அவரை கட்சியிலிருந்து நீக்கியதன் விளைவாகத்தான் மக்கள் நீதி கட்சி – பிகேஆர் தோன்றியது மொத்தத்தில் இன்னொரு அரசியல் கட்சி உருவானதற்கு இவர்தான் காரணம்.
டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக இருந்த காலத்தில் இவர் அம்னோவில் இருந்து வெளியேறிய நேரத்தில், பெர்சத்து-BERSATU கட்சியில் இணைந்து புதிய அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.
மலாய் வாக்குகள் அப்போது பிரிந்ததைப் பற்றி இவர் பேசவில்லை; அக்கறைப்பட வில்லை. அதே பெர்சத்து கட்சியிலிருந்து இவர் நீக்கப்பட்ட பின் இன்னொரு மலாய்க் கட்சியான பெஜுவாங் கட்சியை உருவாக்கினார். அது மலாய் சமூகத்தையும் மலாய் வாக்காளர்களையும் பிரித்தது ஆகாதா?
2019 நவம்பர் 16 தஞ்சோங் பியாய் நாடாளு-மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இவர் பார்த்து பார்த்து நிறுத்திய பெர்சத்து வேட்பாளர் சீன(மசீச) வேட்பாளரிடம் 15000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மை-யில் தோல்வி அடைந்தார்;
மலேசிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் இது ஒரு அசாதாரண தேர்தல் முடிவாகும்.
அதேத் தொகுதியில் ஒருவேளை அம்னோ வேட்பாளரை நிறுத்தி இருந்தால் இந்த பெரும்பான்மை இன்னும் அதிகரித்திருக்கக் கூடும்.
இதே ஜோகூர் மாநில கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் மலாய் சமூகத்தை பிரிக்கும் வகையில் உருவாக்கிய பேஜுவாங் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 42 வேட்பாளர்களும் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் கட்டுத்தொகையையும் இழந்தனர்.
2022 நவம்பர் 19, 15 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், இவர் உருவாக்கிய லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் வைப்புத் தொகையையும் இழந்தார்.
இந்த அளவிற்கு மக்களின் ஆதரவை அடியோடு இழந்த பின்னும் இவர் இன்னும் இனவாத அரசியலையே பேசி வருகிறார்.
காஷ்மீர் மாநிலம் குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சனை என்றால் இவர் பிரச்சினையின் ஆழத்தையும் காரணத்தை-யும் கருத்தில் கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு பாகிஸ்தான் பக்கம் நிற்கிறார்; பன்னாட்டு அரசியலில் இவரின் பார்வை எத்தகையது என்பதற்கு இது ஒரு சான்று.
மலாய் மக்களின் விசுவாசம் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கோ அல்லது பிரிவுகளுக்கோ அல்லாமல், மலாய் மக்களுக்கே இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமது இப்பொழுது கூறுவது எப்படி சாத்தியமாகும்?
இவரின் கூற்றுப்படி, ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியில் இடம் பெற்றுள்ள மசீச-வும் மஇகாவும் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள அம்னோ (மலாய்) வாக்காளர்கள் இந்த இரு கட்சிகளுக்கும் ஓட்டு போடாமல் மலாய் வேட்பாளர்களுக்கு போட வேண்டும் என்றால், அது கூட்டணி தர்மத்தை மீறுவதாக ஆகாதா?
அப்படியே மலாய் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றால், எந்த மலாய் வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை இவரால் வரையறுத்துக் கூற முடியுமா?
காரணம் பெர்சத்து, பாஸ், ‘பெர்சம’ உள்ளிட்ட கட்சிகளுடன் இன்றைய அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமரின் கட்சியான பி கே ஆர் வேட்பாளரும் களத்தில் உள்ளனர்.
வரவிருக்கும் தேர்தல்களில், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு மலாய் வாக்காளர்களை, ஒரு முகநூல் பதிவின்மூலம் இவர் வலியுறுத்தியுள்ளார்,
தவிர வாக்குப்பெட்டியில் மலாய் வாக்காளர்களின் தேர்வுதான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் மகாதீர் கூறியுள்ளார்.
“இந்த நாடு ‘தானா மலாயு’வாக (மலாய் தேசம்) நீடிக்க வேண்டுமென்றால், அரசியல் கட்சிகள் அல்லது அரசு சாரா நிறுவனங்கள் மீதான உங்கள் விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல் மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள்.
“மலாய் மக்களின் விசுவாசம் மலாய் மக்களுக்கே இருக்க வேண்டும். நமது விசுவாசம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது பிரிவுக்கோ அளிக்கப்பட்டால், நாம் ‘தானா மலாயு’வை இழந்துவிடுவோம்.
“‘தானா மலாயு’ இல்லாமல், இந்த உலகில் மலாய்க்காரர்களை நாம் இழந்துவிடுவோம். மலாய்க்காரர்கள் நாடற்ற மக்களாகிவிடுவார்கள்,” என்று அந்தப் பதிவில் மகாதீர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இதே மகாதீர் முன்னர் ஒரு முறை மலாய் மக்களைப் பார்த்து சோம்பேறிகள் என்று வசைப்பாடி இருக்கிறார்; கடந்த ஏப்ரல் மாதத்தில்கூட மலாய்க்காரர்கள் தங்கள் ஒற்றுமையின்மைக்கும் போராட்டங்களுக்கும் தாங்களேதான் காரணம் என்று கூறினார். மலாய் கட்சிகளின் பெருக்கம் சமூகத்தைப் பிளவுபடுத்தி, அவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதில், தான் தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்பு அவர் அம்னோ, பெர்சத்து, பெஜுவாங் கட்சிகளுக்குத் தலைமை தாங்கி, மலாய் வாக்காளர்களை பிளவு படுத்திய இதே மகாதீர், இப்பொழுது பசப்புகிறார்.
காலம் சகலத்தையும் கருத்தில் கொள்ளும்!


