
ரவாங் அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை திங்கள் ஐந்தாம் நாள் திருக்குட நன்னீராட்டு புனித விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த விழா ரவாங் பட்டணத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த இந்து பெருமக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு நிகழ்வாகும் என்று ஆலயத் தலைவர் டத்தோஸ்ரீ தாடி பாலசுப்பிரமணியன் அப்பள நாயுடு தெரிவித்தார்.
தொடக்கத்தில் முருகன் ஆலயமாக இருந்த இந்தத் திருத்தலம் கடந்த நூற்றாண்டில் 1950-ஆம் ஆண்டுகளில் விநாயகர் வழிபாட்டுத் தலமாக மறு உருமாற்றம் கண்டது.

அது முதல் ரவாங் மற்றும் சுற்று வட்டார வட்டார மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இந்த வீரகத்தி விநாயகர் ஆலயம் விளங்கி வருகிறது.
இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது; ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டம் கட்டமாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருப்பணிகள் யாவும் நிறைவு பெற்று இன்று ஞானக் கடவுள் விநாயகப் பெருமானின் திருவருளோடு இன்று இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார் பாலசுப்ரமணியன்.

இந்த விழாவில் நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிக அதிகமாக பக்தர்கள் வந்து குவிந்தனர். 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து இன்றைய திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றதாக பாலசுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

இந்த விழாவில் சிறப்பாக கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், சிலங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு, மஹிமா தலைவரும் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ ந. சிவக்குமார் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வேளையில் இந்த ஆலய திருப்பணி முழுமை பெற்று இன்றைய திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஏதுவாக ஏராளமான பிரமுகர்களும் பொதுமக்களும் கொடை அளித்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த வேளையில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை விநாயகப் பெருமானின் திருவருள் அவர்களுக்கு நிரம்பக் கிட்ட வாழ்த்துவதாக பாலசுப்ரமணியன் மேலும் தெரிவித்தார்.



