
“அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவர் அடித்தொழ மறுப்பவர் மனிதரில்லை”
என்று ஒலிக்கும் பாடலால் விழுத்தெழுந்த மானிடர்கள் பலர்.இப்பாடல் வரிகளை தன் பொன் எழுத்துக்களால் எழுதி மனிதகுலத்திற்கு அர்ப்பணித்தவர்தான் கவிநாயகம் கா.மு.செரிப்.
கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, காவியம், கதைவசனம், திரைப் பாடல், உரைநடை, வரலாறு, திறனாய்வு, பயண இலக்கியம், பத்திரிகை, சொற் பொழிவு, அரசியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் இடம் பெற்றவர் கா.மு.செரிப்.
வெள்ளையனே வெளியேறு போராட்டம், தமிழக எல்லைப் போராட்டம் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டகளில் ஈடுபட்ட செயல்வீரர்.
பல்கலை வல்லவராக திகழ்ந்ந கா.மு.செரிப் அரசியலிலும் ஈடுபட்டார். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து 1942ல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.1947ல் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.-யின் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு பல முறை சிறைக்கு சென்றார்.
கவி.கா.மு.செரிப் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி 1940-50 களில் கொடிகட்டிப் பறந்த பல நாயக நடிகர்களுக்கு வழிகாட்டி-னார்.
400க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை இயறாறியுள்ளார். இவரின் முதல் பாடல் இடம்பெற்ற படம் ‘பொன்முடி’ ஆகும்.
‘சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?’ ‘நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்’, :பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்’
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’,
‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏதும் வையகம் இதுதானடா’, ‘வானில் முழு மதியைக் கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே….போன்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கினாறன.
ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ வேண்டும் என்பதை கவி.கா.மு.செரிப் வாயிலாக பயின்று கொண்டேன் என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். அழைத்தால் வருவோம், வாய்ப்பு கொடுத்தால் பாடுவோம். யாரையும் சார்ந்து வாழ மாட்டோம் என்ற கொள்கைப்படியே வாழ்ந்த கவி.கா.மு.செரிப் தனது 81 ஆம் வயதில் 07-07-1994 அன்று இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார்.
நாகர்கோவிலில் குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் கவி.கா.மு.செரிப் அவர்களின் நூற்றாண்டு விழா19-10-2014 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ்வானம் சுரேஷ் என்பவரின் பதிவை ‘Peer’ புலன குழுவில் பகிர்ந்தவர் அன்வர்தின்.
- -


