
கல்வி முனையமாக உருமாறிவரும் நீலாயில் அதிகமான உயர்க்கல்வி நிலையங்கள் உள்ளன. ஆனால் போக்குவரத்து வசதி அந்த அளவிற்கு மேம்பாடாதது ஒரு பெரும் குறை என்று இந்தத் தொகுதியில் பெர்சத்துக் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ள தத்தோ சரவணகுமார் தெரிவித்தார்
நீலாய் சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து கட்சியின் சார்பில் எண் 5-இல் போட்டியிடும் டத்தோ வி. சரவணக்குமார், தாம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் நீலாயில் அரசு மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாக உறுதியளித்தார்.
நீலாய் மக்களின் முக்கியத் தேவைகளில் ஒன்றாக மருத்துவமனை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நீலாய் மண்டலம் மக்கள் தொகை அதிகரித்து வரும் பகுதியாக மாறி வருகிறது; அதற்கு ஏற்ப நீளாய் துரித வளர்ச்சி கண்டு நகரமயமாகி வருகிறது.
“இருந்தாலும், இதுவரை நீலாயில் அரசு மருத்துவமனை இல்லாதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

டிஎஸ்கே அரசு சாரா அமைப்பின்வழி நீண்டகாலமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறிய அவர், அந்தச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் பெர்சத்து கட்சியில் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது நீலாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சி தலைமை வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
நீலாய் பழைய பட்டணப் பகுதியில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் கடுமையான வெள்ளப் பிரச்சினை ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தான் நீலாய் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், பத்தாங் பெனாரிலிருந்து நீலாய் பட்டணத்திற்குச் செல்லும் சாலை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் நேர்கிறது என்று குறிப்பிட்ட அவர், அந்தச் சாலையின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நீலாய் 3 பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் அதிகரித்திருப்பது அப்பகுதியின் வளர்ச்சியை பாதித்துள்ளதாகவும் முன்பு திரை துணி பரபரப்பான வர்த்தக மையமாக விளங்கிய அந்தப் பகுதி தற்போது தனது அடையாளத்தை இழந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
அத்துடன், நீலாயில் பொது போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லாததோடு, வேலைவாய்ப்புகளும் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடிப்படை வசதிகள் இருந்தும் இப்பகுதி எதிர்பார்த்த அளவுக்கு மேம்பாடு அடையவில்லை என்றார்.
இந்த மாநிலத் தேர்தலில் மாற்றத்திற்கான வாய்ப்பை வழங்குமாறு நீலாய் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்ட டத்தோ வி. சரவணக்குமார், பெர்சத்து அணிக்கு ஆதரவு கிடைத்தால் நீலாய் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை முன்னெடுப்போம் என உறுதியளித்தார்.
குறிப்பாக, நீலாய் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


