
கடல்சார் வாணிபத்தை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி, உலக நாடுகளை வளைத்த ஆங்கிலேயர்கள் இந்த மலையகத்தையும் விட்டுவைக்கவில்லை.
அன்றைய மலாயாவில் பினாங்கில்தான் முதன்முதலாக பிரித்தானியக் குடியேற்றம் தொடங்கியது.
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,1786ஆம் ஆண்டு இதே நாளில்( ஆகஸ்ட் 11) கெப்டன் பிரான்சிஸ் லைட் தலைமையில் பிரித்தானியக் கொடி பினாங்கில் ஏற்றப்பட்டது. இதன் மூலம் மலாயா நிலப்பரப்பில் பிரித்தானிய ஆட்சியின் தொடக்கமாக-அடித்தளமாக கருதப்படும் குடியேற்றம் தொடங்கப்பட்டது.
அந்த சமயத்தில் பினாங்கு நிலப்பரப்பு, கெடா சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தவிர, சியாம் மற்றும் பர்மா(மியன்மார்) நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவியது.
இத்தகைய அழுத்தத்தால் பாதுகாப்பு உதவி தேவைப்பட்ட சுல்தான் அப்துல்லா முகர்ரம் ஷா, பிரித்தானியர்களின் பாதுகாப்பு வாக்குறுதியை ஏற்று, பினாங்கை அவர்களிடம் ஒப்படைத்தார்.
மலாக்கா நீரிணையின் வடக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள பினாங்கு, கடல் வர்த்தகத்திற்கு முக்கியமான துறைமுகமாக ஆங்கிலேயர்களால் கருதப்பட்டது.
அதைப்போல மளமளவென்று வளர்ச்சி கண்ட பினாங்கில் நிலைகொண்ட பிரித்தானியர்கள் இந்திய-சீன வர்த்தகப் பாதையில் வலுவான நிலையைப் பெற்றனர்.
பினாங்கின் ஜார்ஜ் டவுன் நகரம், இந்தக் குடியேற்றத்தின் அடிப்படையில்தான் உருவானது. இன்று வரை பிரான்சிஸ் லைட்-இன் பெயர் பினாங்கின் பல இடங்களில் நினைவுச் சின்னங்களாகக் காணப்படுகிறது.


