
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பதை ஜனநாயக செயல் கட்சி(ஜசெக) ஆகஸ்ட் 16 அன்று முடிவு செய்ய இருக்கிறது.
பக்கத்தான் ஹரப்பான் புத்ராஜயாவை கைப்பற்றியபோது, நிறுவன சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், நல்லாட்சி ஆகியவற்றை மக்கள் எதிர்பார்த்தனர். தவிர, பல தசாப்தங்களாக பிகேஆர் கண்டனம் செய்துவந்த அரசியல் கலாச்சாரம் ஒரு முடிவைக் காணும் என்றெல்லாம் மலேசியர்களை நம்புமாறு அன்வார் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் எதுவுமே நடக்கவில்லை.
நாட்டு மக்களுக்கு பக்காத்தான் ஹரப்பான் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன, ஏனெனில் கடந்த 20 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படிப்பட்டவை.
தேசிய அரசியல் களம் மாறிவிட்ட இந்த நேரத்தில், ஜசெக மடாணி அரசிலிருந்து விலக முடிவு செய்தால், ஜசெக அமைச்சர்கள் வெறுமனே பதவியைத் துறந்துவிட்டு வெளியேறக்கூடாது. அரசாங்கத்தின் மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தபிறகு, அன்வாரின் சீர்திருத்தத் திட்டமெல்லாம் என்ன ஆனது என்பது குறித்து ஜசெக முழுமையான-நேர்மையான விளக்கத்தை மக்களுக்கு அளிக்கக் கடமைப்பட்டுள்ளது.
ஜசெக என்னென்ன சீர்திருத்தங்களை முன்னெடுத்தது? எவையெவை நிராகரிக்கப்பட்டன அல்லது தாமதப்படுத்தப்பட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்டன அல்லது கைவிடப்பட்டன என்பது குறித்து நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
தவிர, ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க சமரசங்கள் செய்ய வேண்டியிருந்திருந்தால், அந்த சமரசங்கள் என்னென்ன என்பதை ஜசெக விளக்க வேண்டும்.
அன்வார் முன்னெடுத்த ‘ரிஃபார்மாசி’ முழக்கத்தின் தோல்விக்காக ஜசெக-வைக் குறைகூறும் முயற்சியல்ல இது; மாறாக, அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் இருந்த ஒரு முக்கிய கட்சியான ஜசெக, மலேசியர்களுக்கு உண்மையைச் சொல்லுமாறு கேட்பதைப் பற்றியது.
இதைவிட தவிர்க்க முடியாத இன்னொரு பெரிய கேள்வி இருக்கிறது.
பிரதமர் அன்வார் இப்ராகிம் தன் அரசியல் போராட்டத்தை ‘ரிஃபார்மாசி’யை மையமாகக் கொண்டு கட்டமைத்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, மலேசியர்கள் அவருடன் அணிவகுத்து, தியாகம் செய்து, வாக்களித்து, துணைநின்றார்கள். ஏனென்றால், அவர் எப்போதாவது பிரதமரானால், அவர் முன்னெடுத்த சீர்திருத்தங்கள் இறுதியாக நிஜமாகும் என்று மக்கள் நம்பினர்.
அன்வார் மீண்டும் மீண்டும் ‘sakau’ என்று முழங்கியதைத் தாண்டி, வாக்குறுதியளிக்கப்பட்ட ‘ரிஃபார்மாசி’ நடவடிக்கை என்ன ஆனது? உண்மையான நிறுவன மாற்றம் எங்கே?
- 1.
- அஸாம் பாக்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின்(MACC) தலைவராகத் தொடர்ந்து நீடித்தார், மேலும் அவரின் பதவிக்காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
- 2.
- வலைப்பதிவர்கள், சமூக ஊடக கருத்தாளர்கள், மாணவ ஆர்வளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் இணையத்தில் கருத்து கூறுவதற்காகத் தொடர்ந்து விசாரணைகளையும் கேள்விகளையும், அமலாக்க நடவடிக்கைகளையும் எதிர்கொள்கின்றனர். மேலும், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 வழங்கும் கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடர்ந்து ஒருவித அச்சமூட்டும் போக்கு ஏற்படுத்தப்படுகிறது. பக்கத்தான் கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்தபோது கண்டிக்கப்பட்ட ஒரு சட்டம், இப்போது இவர்களின் ஆட்சியிலும் நீடிக்கிறது.
- 3.
- நீதியின் கடைசி அரணாக விளங்கும் நீதித்துறையின் சுதந்திரம், இந்த அரசாங்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்வார் தன் முன்னாள் தலைமை வழக்கறிஞரான அகமட் டெரிருடின் சாலேவை(Ahmad Terrirudin Salleh) நேரடியாக கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதியாக அமர்த்திணார், ஆனால், அவரைவிட மூத்த நீதிபதிகள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இருந்தபோதிலும் அவர்களைப் புறக்கணித்தார் அன்வார். டெரிருடின் நீதித்துறையில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டும் நீதித்துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மையும் சுதந்திரமும் இல்லையென்ற விமர்சனமும் எழுந்தன; எல்லாவற்றுக்கும் மேலாக, அன்வார் நீதித்துறையில் ‘தன் ஆட்களை’ நியமிக்க முனைகிறாரா என்ற பார்வையும் எழுந்துள்ளது.
- 4.
- ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்ட அரசாங்க ‘கொள்முதல் சட்டம் 2025’, கொள்முதல்களை அங்கீகரிக்கவும் சலுகைகளை வழங்கவும் அமைச்சர்கள் விரிவான அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் துணைபுரிந்தது. இது, அரசியல் விருப்பத்திற்கு ஏற்ப பில்லியன் கணக்கான பொதுச் செலவினத்திற்கு வழிவகுத்தது. இது, அன்வார் ‘சகாவ்’ (ஊழல் ஊழல்) என்பதை மறைமுகமாக ஊக்குவிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
- 5.
- இனப் பார்வை, சமய சகிப்பின்மை, வகுப்புவாதபோக்கு ஆகியவை அரசியலில் கலந்து நஞ்சாக்குகிறது. அதேநேரத்தில், அரசியல்வாதிகளும் தீவிரவாதிகளும் அரசியல் ஆதாயத்திற்காக இனம் மற்றும் மதத்தை மீண்டும் மீண்டும் சீண்டுகிறார்கள். பல்வேறு பிரச்சினைகளை விடாமுயற்சியுடன் கையாளத் தவறியதன் மூலம், இந்த இன மற்றும் மத வெறுப்பில் அன்வாருக்கும் பங்கு உண்டு.
- 6.
- மலேசியாவில் சிறுபான்மை இந்திய மற்றும் ஓராங் அஸ்லி சமூகங்கள் எதிர்கொள்ளும் பின்தங்கிய நிலையை மாற்றுவதற்கு ஏற்ற நீண்டகால சமூக-பொருளாதார உருமாற்றத் திட்டங்களை வகுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
- 7.
- போலீஸ் காவலில் நிகழும் மரணங்களும் சந்தேக நபர்கள் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுவதும் தேசத்தைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அந்த 3 பேரும் மிக அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு ஒலிப்பதிவு குறிப்பிடுகிறது; அதில், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தன் உயிருக்காகக் கெஞ்சிய சத்தமும் கேட்கிறது.
- 8.
- தியோ பெங் ஹொக்கிற்கான நீதி, 17 ஆண்டுகளுக்குப் பிறகும் கிடைக்கவில்லை; இதன் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது;
- 9.
- சுங்கத் தீர்ப்பாய அதிகாரி ஒருவர், நிதி அமைச்சகக் கட்டிடத்தில் கழுத்திலும் கால்களிலும் கேபிள் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார், ஆனாலும் காவல்துறை அதைத் திடீர் மரணம் என வகைப்படுத்தி, அதில் எந்தக் குற்றச் செயலும் இல்லை எனக் குறிப்பிட்டது;
- 10.
- பமீலா லிங், ஊழல் தடுப்பாணையத் தலைமையகத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பட்டப்பகலில் காணாமல் போனார், மேலும் அவர் இன்னும் காணாமல் போனவராகவே உள்ளார்.
- 11.
- ஊழல் தடுப்பாணைய அமலாக்க முகமைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களை மக்களுக்கு உண்மையாகப் பொறுப்புடையதாக மாற்றும் சீர்திருத்தங்கள் எங்கே?
- 12.
- பொதுச் செலவினம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த அடிப்படைக் கேள்விகள் அப்படியேத் தொடரும் நிலையில், சாதாரண மக்களுக்கும் பொது வணிகத்திற்கும் மின்-விலைப்பட்டியல் போன்ற நடவடிக்கைகள் சுமையாக உள்ளன.
இவை யாவும் ஒரு புரட்சி நடவடிக்கையைக் கோரும் சாத்தியமற்ற சீர்திருத்தங்கள் அல்ல. பலவற்றிற்கு அரசியல் உறுதி, சட்ட நடைமுறை, வெளிப்படைத்தன்மை, இந்த அரசாங்கத்திடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ள மகத்தான அதிகாரத்தைப் பயன்படுத்தும் துணிவு ஆகியவையேத் தேவைப்படுகின்றன.
எனவே, ஒற்றுமை அரசாங்கத்திற்குள் இருந்த மற்றவர்களால் ‘ரிஃபார்மாசி’ தடுக்கப்பட்டதா?; அன்வாரின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக சமரசம் செய்யப்பட்டதா?; அல்லது அதிகாரம் கிடைத்தவுடன் மற்ற அனைத்தும் கைவிடப்பட்டனவா என்பதை ஜசெக மலேசியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

பொன். வேதமூர்த்தி
தலைவர்
மலேசிய முன்னேற்றக் கட்சி
11 ஆகஸ்ட் 2026


