Tuesday, August 11, 2026

ச்சென்னா தொகுதியும் அந்தோணி லோக் தோல்வியும்!

மலேசியா உண்மையில் வளர்ந்துவிட்ட நாடா அல்லது வளர்ந்துவரும் நாடா என்பதை வரையறுத்துக்கூற முடியவில்லை.

கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் கரைசேரும் என்னும் சூழல் வலுத்துவிட்ட நிலையில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போக்குவரத்துக் குற்றத் தண்டம் இரட்டிப்பு, ஆனால், வருமானம் மட்டும் இரட்டிப்பாகவில்லை; அதிகரிக்கவில்லை என்றால் மக்கள் வாழும்வகைதான் என்ன?

சாரா உதவித் தொகை தாராளம் என்று மடாணி அரசு பறைசாற்றிக் கொண்டு, மறுபுறம் அந்த நிதியை மக்களிடம் இருந்தே வசூலிக்க முனைப்பு காட்டுகிறதோ என்று எண்ணிடத் தோன்றுகிறது.

இதன் தொடர்பில் போக்குவரத்துத் துறை வகையாகப் பயன்படுத்தப் படுகிறதா என்ற எண்ணம் பொதுவாக பொதுமக்களிடையே அதிகமாக பரவி இருக்கிறது.

2020 மார்ச் திங்கள் 10-ஆம் நாள், நாட்டின் எட்டாவது பிரதமராக பதவியேற்றார் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்; அது கொரோனா பருவம் உச்சத்தில் இருந்த நேரம்.

தனக்கான பெரும்பான்மை குறித்து நிச்சயமற்ற நிலை இருந்தபோதும் அதைப்பற்றி கவலைப்படாமல், நாடாளுமன்றத்தில் தான் பெரும்பான்மை ஆதரவுபெற்ற பிரதமர் என்பதை நிரூபிக்காமலேயே ஏறக்குறைய 20 மாதங்கள் நாட்டை ஆண்டவர் முகைதீன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஆட்சிக் காலத்தில் அவசர நிலைகூட பிரகடனப்படுத்தப்பட்டது.

இப்படிப்பட்ட அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் பிரிம் உதவித் தொகையை மாற்றுப் பெயரில் வழங்கியது உட்பட ஏராளமான சலுகையை முகைதீன் தலைமையிலான அரசு வழங்கியது; குறிப்பாக, சமூக நலத் திட்டங்கள் நன்றாக செயல்படுத்தப்பட்டன.

இவற்றுக்கான செலவை ஈடுகட்டும் வகையில், பொதுமக்களிடம் இருந்தே ஈவிரக்கமில்லாமல் நிதித் திரட்டப்படுகிறதோ என்ற பார்வை அப்போது சமூகவீதியில் அதிகமாக பகிரப்பட்டது.

முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஆயிர வெள்ளியை வகைதொகையின்றி வசூலித்த அரசு முகைதீன் அரசு.

உயிரச்சம் கொண்டவர்களும் அரசாணையை மதிக்கிறவர்களும் கட்டாயம் முகக்கவசத்தை எந்நேரமும் அணிந்திருந்தனர். அதேவேளை, கொரோனா நச்சுயிருக்கு அஞ்சி உயிர்ப்பயம் கொண்டவர்களாக இருந்தாலும் அரச உத்தரவை மதிக்கும் குடிமக்களாக இருந்தபோதும், அவ்வப்பொழுது முகக்கவசத்தை அகற்றிக் கொண்டிருந்தனர்.

காரணம், முகக்கவசத்தை எந்த நேரமும் அணிந்திருந்தால் இயல்பான சுவாசம் கிட்டாது; மெல்லிய அளவில் மூச்சுத் திணறல் ஏற்படும்; அந்த வேளையில் முகக்கவசத்தை சற்று நேரம் அகற்றுபவர்கள், சுவாசக் கவசத்தை மறந்துவிட்டவர்கள், கவனக் குறைவாக அணியாதவர்கள், கவசம் தீர்ந்தவர்கள் அப்படிப்பட்டவர்களை வேட்டையாடுவதைப் போல காவல் துறையினர் மூலம் வளைத்து, ஆளுக்கு ஆயிர வெள்ளியென வசூலித்து வசூல் ராஜாவைப் போல திகழ்ந்தது, அன்றைய அரசு.

இதுகுறித்து விமர்சனம் எழுந்தபொழுது, பொதுமக்களின் நன்மை கருதிதானே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது; அதை மீறினால் இப்படித்தான் என்று சொல்லி சமாளிக்கப்பட்டது.

ஏறக்குறைய அதைப்போல, இன்றைய மடாணி அரசாங்கத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு, போக்குவரத்துக்குற்றங்களை இழைப்போர் ‘வெல்லக் கட்டியை’ப் போல தென்படுகின்றனர்போலும்;

சாலை சைகை விளக்கை மீறுவது, வாகன ஓட்டும் உரிமம் வைத்திராதது, வாகன ஓட்டும் உரிமம் காலாவதியானது, இரட்டைக் கோட்டில் முந்துவது போன்ற போக்குவரத்துக் குற்றங்களை இழைக்கும் வாகனவோட்டியரை இந்த அரசுக்கு அதிகமாகப் பிடிக்கிறது; அப்படிப்பட்டோரிடம் இருந்து, ஒற்றைக்கு இரட்டையாக தண்டம் வசூலிக்க தலைப்படுகின்றனர்.

குறிப்பாக, மது மயக்கத்துடனும் போதைப் பொருள் மயகத்துடனும் வாகனம் ஓட்டுவோர் செய்யும் தவற்றினால், அப்பாவி மக்களின் உயிருக்கும் உடலுக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படுவதை நிச்சயம் எவராலும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.

இதன் தொடர்பில் அரசு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கமோ, விளக்கக்கூட்டமோ நடத்தப்படுவதில்லை. தவறுநேரும்பொழுது, தண்டத் தொகையை மட்டும் உயர்த்துவதில் பயனில்லை என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்.

குறிப்பாக, பெட்ரோல், டீசல் விற்பனையைப் பொருத்தவரை, மானிய விலையிலான பெட்ரோலையும் டீசலையும் மலேசியர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வெளிநாட்டினரோ அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்களோ மானிய விலையில் விற்கப்படும் டீசலையும் பெட்ரோலையும் வாங்க தடைவிதிக்கப்படும் என்றுதான் மடாணி அரசு தொடக்கத்தில் சொல்லி வந்தது.

ஆனால், நடைமுறை வேறாக உள்ளது.

தொடக்கத்தில் ஒவ்வொரு மலேசியருக்கும் ஒரு மாதத்திற்கு 300 லிட்டர் என்றும் பின்னர் 200 லிட்டர் பெட்ரோல் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

200 லிட்டருக்குள் எல்லைகட்டி வாழ முடியுமா என்பதைப் பற்றி அரசு யோசிக்கவில்லை. அதற்குமேல், தேவைப்பட்டால், வெளிநாட்டினரைப் போல அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

கனரக வாகனங்களை வைத்திருப்போரின் நிலை இன்னும் மோசமாக விட்டது.

மொத்தத்தில், இது அரசின் நிலைப்பாடு என்றாலும் பொதுமக்களின் கோபம் நேரடியாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்மீது திரும்பி உள்ளது. இதன் நேரடி பிரதிபலிப்புதான் ஆகஸ்ட் 01 நெகிரி மாநில சட்டமன்றத் தேர்தலின்போது, அவர் தோல்வி அடைந்தது. ச்சென்னா தொகுதியில் மட்டுமல்ல; வேறு எந்தத் தொகுதியில் அவர் போட்டியிட்டு இருந்தாலும் அவர் தோல்வியைத்தான் தழுவியிருப்பார்.

இவற்றை யெல்லாம் மறைத்துவிட்டு, அல்லது புறந்தள்ளிவிட்டு பொதுமக்களிடம் நேரில் செல்வோம்; அவர்களின் குறைகளை நேரில் கேட்போம் என்று அந்தோணி லோக்கும் அவருக்குப் பதிலாக ஜசெக(ஜனநாயக செயல் கட்சி)-வின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைமையை நேற்று ஏற்ற நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அருள்குமாரும் மேம்போக்காகத் தெரிவித்திருப்பது, இந்த இருவருமே பொதுமக்களின் உண்மை நிலையை உணராமல் உள்ளனர் என்பதைத்தான் காட்டுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை