Friday, August 14, 2026

ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு திடலும் வேண்டும், புதிய கட்டடமும் வேண்டும்! -டத்தோ சுரேஷ் ராவ்

ரவாங், ஆக.14– ரவாங் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய கட்டடம் அமைக்கப்படுவதுடன், மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகளுக்கான பள்ளித் திடலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பள்ளியின் முன்னாள் வாரியக்குழுத் தலைவர் டத்தோ சுரேஷ் ராவ் வலியுறுத்தினார்.

ரவாங் தமிழ்ப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கட்டட வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில், மாணவர்களின் விளையாட்டு மற்றும் புறப்பாட நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான பள்ளித் திடலை இழக்கும் வகையில் எந்தவொரு கட்டுமானத் திட்டமும் அமையக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

புதிய கட்டடம் அமைப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், தற்போது உள்ள சிஎஃப் (CF) அனுமதி இல்லாத பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடத்தை நிர்மாணிக்கலாம் என்று அவர் ஆலோசனை முன்வைத்தார்.

மேலும், அந்தப் பழைய கட்டடத்தை இடிப்பதற்கான செலவை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் டத்தோ சுரேஷ் ராவ் கூறினார்.

“பள்ளிக்கு கட்டடம் அவசியம். அதேபோன்று மாணவர்களுக்கான திடலும் அவசியம். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான கட்டடத்தை அமைக்க வேண்டும்; அதே நேரத்தில் மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் திடலும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றார்.

திடல் இல்லாத நிலை ஏற்பட்டால், மாணவர்களின் விளையாட்டு, உடற்கல்வி மற்றும் இதர புறப்பாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில், பக்கத்து பள்ளியின் திடலைப் பயன்படுத்துவது நீண்டகாலத் தீர்வாக அமையாது என்றும் டத்தோ சுரேஷ் ராவ் குறிப்பிட்டார்.

“பக்கத்து பள்ளியின் திடலைப் பயன்படுத்துவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. எங்களது மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் சொந்தப் பள்ளி வளாகத்திலேயே இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களின் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதி உறுதி செய்யப்பட வேண்டும்,” என்றார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இன்று ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நேரில் வருகை தந்து நிலைமையை கேட்டறிந்ததாக டத்தோ சுரேஷ் ராவ் தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவலைகளை கேட்டறிந்த பாப்பா ராயுடு, இப்பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பள்ளியின் திடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியளித்துச் சென்றதாக அவர் கூறினார்.

இதற்கு நன்றி தெரிவித்த டத்தோ சுரேஷ் ராவ், பள்ளியின் தேவைகள், மாணவர்களின் நலன் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்துக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

ரவாங் தமிழ்ப்பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான கட்டட வசதிகளும், மாணவர்களின் முழுமையான கல்வி மற்றும் புறப்பாட வளர்ச்சிக்குத் தேவையான திடலும் இணைந்தே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை