Tuesday, September 15, 2026

SMK டானாவ் கோத்தா 2-ஆம் படிவ மாணவி மரணம்: -சிறப்பு விசாரணைக் குழு அமைக்க மஇகா பணிப்படை கோரிக்கை!

ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டாகச் செய்யும் சிரிப்பிலும் கூடத் துன்பத்தை உண்டுபண்ணும். உலகப் பண்பை அறிந்து நடக்கும் நல்லவர்கள், தன் பகைவரிடத்திலும் அன்பு காட்டுவர்.

பள்ளிகளில் உண்மையிலேயே கேலிவதை (Buli) பிரச்சனை உள்ளதா?

SMK டானாவ் கோத்தா 2ம் படிவ மாணவியின் மரணம் தொடர்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க மஇகா பணிப்படை (Briged MIC) கோரிக்கை விடுத்துள்ளது

அவசர முடிவெடுக்காமல் முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்!

அலட்சியமாக இருக்காதீர்கள்! இந்தச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காணுங்கள்!

இந்த விவகாரத்தை எதிர்த்துப் போராட மஇகா பணிப்படை முழு ஒத்துழைப்பு நல்கத் தயாராக உள்ளது என்று அதன் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.

அத்துடன், காலஞ்சென்ற மாணவி கெஸியா நிஷாவின் (Keziah Nisha) குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவியை வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

இந்த இளம் வயது மாணவியின் மரணத்தை மஇகா பணிப்படை மிகவும் தீவிரமாகக் கருதுவதோடு, ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள அவரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.

மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். கேலிவதை, இன ரீதியிலான அவதூறுகள், பள்ளியின் சூழல் மற்றும் இதர தொடர்புடைய காரணிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் முழுமையாக எந்த முன்முடிவும் இன்றி விசாரிக்கப்பட வேண்டும்.

பெறப்பட்ட தகவல்களின்படி, தனக்கு எதிராக வகுப்பறை மாணவர் ஒருவர் இன ரீதியிலான சொற்கள் உட்பட அவதூறான வார்த்தைகளைப் பேசியது குறித்து சம்பந்தப்பட்ட மாணவி ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக உள்முறை விசாரணை நடத்தியபோதிலும், போதுமான சான்றுகள் இல்லை எனக் கூறி, அது கேலிவதை சம்பவமாக உறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பள்ளியின் விசாரணையில் புகார் உறுதி செய்யப்படவில்லை என்பதற்காக, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தானாக முடிவெடுத்துவிட முடியாது என மஇகா பணிப்படை வலியுறுத்துகிறது.

இந்த மரணத்திற்குப் பிறகு, சாட்சிகளின் வாக்குமூலம், புகார்கள் தொடர்பான பதிவுகள், பள்ளி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்கு உதவக்கூடிய பிற ஆதாரங்களைக் கொண்டு, அதிகாரிகள் உண்மையில் நடந்தது என்ன என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று ம இ கா பணிப்படை கேட்டுக் கொள்கிறது.

பள்ளி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு காவல்துறையினருக்கும் கல்வி அமைச்சுக்கும் (KPM) தெரிவிக்கப்பட்டுள்ளதா? ஓர் ஆசிரியரின் விசாரணை மட்டுமே இறுதி முடிவை தீர்மானித்துவிட முடியுமா?

கல்வி அமைச்சு பதிலளிக்க வேண்டும்: முந்தைய வழக்குகளின் நிலை என்ன?
கடந்த மாதம் கூட, ஒரு ஆசிரியர் தனது சக ஊழியர்களின் கேலிவதை அல்லது மன அழுத்தத்திற்கு ஆளானதாகக் கூறப்பட்டு மரணமடைந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதை மஇகா பணிப்படை நினைவூட்டுகிறது.

14 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட துயரத்தை எளிதாக கடந்து செல்ல முடியாது. மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த கவலையடையச் செய்கின்றது.

பள்ளிகள் இனி பாதுகாப்பான இடமாக மாற வேண்டும்.
நாங்கள் உண்மையையும் வெளிப்படைத்தன்மையையும் விரும்புகிறோம்! கேலிவதை, பாகுபாடு, அலட்சியம் அல்லது நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) மீறல்கள் கண்டறியப்பட்டால், சட்டத்தின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சிக்கல்களைக் கையாள அரசாங்கம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், எதிர்கால சந்ததியினருக்குப் பள்ளிச் சூழல் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

காவல்துறை தலைமை ஆணையர் இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவிற்குத் தலைமை தாங்கி, பள்ளிகளில் – குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே – இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும்; பள்ளிகள் பாதுகாப்பான இடம் என்ற நம்பிக்கையைப் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் மஇகா பணிப்படை பரிந்துரைக்கிறது என்று

மஇகா தேசிய
பணிப்படைத் தலைவர்
ஆண்ட்ரூ டேவிட்
சுட்டிக் காட்டினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை