
மலேசியத் தெலுங்கு சமூகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மலேசியத் தெலுங்குச் சங்கம் (Telugu Association of Malaysia – TAM), 2026 ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் நாட்களில், பினாங்கில் உள்ள Penang Waterfront Convention Centre (PWCC)-இல் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மலேசியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த தெலுங்குச் சமூகத் தலைவர்கள், பேராளர்கள், சிறப்பு விருந்தினர்கள், கலாசாரப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி, தெலுங்கு மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைக் கொண்டாடவுள்ளனர் என்று மலேசியத் தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன், இதன் தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- மலேசியத் தெலுங்குச் சங்கத்தின் 46வது ஈராண்டுப் பேராளர் மாநாடு(2026).
29 ஆகஸ்ட் 2026 | காலை 9.00 மணி – பிற்பகல் 2.00 மணிவரை
மலேசியத் தெலுங்குச் சங்கத்தின் 46ஆவது ஈராண்டுப் பேராளர் மாநாட்டுடன் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
மலேசியா முழுவதிலும் உள்ள தெலுங்கு சங்கத்தின் 30 மாநில- வட்டாரக் கிளைகளைச் சேர்ந்த பேராளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
சங்கத்தின் இதுவரையிலான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் அமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் குறிப்பாக மலேசியாவில் தெலுங்கு மொழி, கலாசாரம், கல்வி, கலை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான மலேசிய தெலுங்கு சங்கத்தின் எதிர்கால பயணம் குறித்து விவாதிப்பதற்கும் இம்மாநாடு ஒரு முக்கிய தளமாக அமையும் என்று அவர் சொன்னார்.
இம்மாநாட்டின் தலைமைச் சிறப்பு விருந்தினராக மக்கள் முற்போக்குக் கட்சித் தலைவரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சக மேநாள் துணை அமைச்சருமான டத்தோ டாக்டர் லோகபால மோகன் கலந்து கொண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க இருக்கிறார் என்று அவர் சொன்னார்.
இதனிடையே ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் மலேசியத் தெலுங்கு சங்கத்தின் 70ஆவது பிளாட்டின ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, பினாங்கு மாநில முதல்வர் ச்சாவ் கூன் இயோ, ஆந்திரப் பிரதேச தொழில் முனைவோர் அமைச்சர் கொண்டபாலி சிரினிவாஸ் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மறுநாள் ஆகஸ்ட் 30ஆம் நாள் முதலாவது ஆசிய பசிபிக் தெலுங்கு கூட்டமைப்பு மாநாடு மிகப்பெரிய அளவில் நடை பெறுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, குவைத், சிங்கப்பூர், மொரிஷியஸ், மலேசியா, தாய்லாந்து, மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொள்கின்றனர் என்று மலேசியத் தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் தெரிவித்தார்.


