
தந்தை பெரியாரின் கொள்கை வரியைத் திரித்து வெளியிட்ட மலேசிய நண்பன் நாளிதழுக்குக் கடும் கண்டனம்.
-கழகத் தலைவர் நாக.பஞ்சு
தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திய ’மானமும் அறிவும் மாந்தர்க்கு அழகு’ என்ற சுயமரியாதை, பகுத்தறிவு மற்றும் மாந்தநேயச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு, மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் சார்பில் பத்திரிகைக்கு வழங்கப்பட்ட விளம்பரச் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால், அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த *மானமும் அறிவும் மாந்தர்க்கு அழகு’-பெரியார்என்ற பெரியாரின் கொள்கை வரியை,
மாணவும் அறிவும் மாத்திரைக்கு அழகு (பெரியார்) என்று பொருளையே சிதைக்கும் வகையில் திரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இது சாதாரண எழுத்துப் பிழையாகக் கருத முடியாத அளவுக்கு, தந்தை பெரியாரின் சிந்தனையையும் அவரது கொள்கை முழக்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, ஒரு சமூகச் சீர்திருத்தத் தலைவரின் புகழ்பெற்ற கொள்கை வரியை வெளியிடும்போது, அதன் சொற்களையும் பொருளையும் சரிபார்த்து வெளியிட வேண்டியது பத்திரிகையின் அடிப்படைக் கடமையாகும்.

எனவே, தந்தை பெரியாரின் ’மானமும் அறிவும் மாந்தர்க்கு அழகு’ என்ற வரியைத் திரித்து வெளியிட்ட மலேசிய நண்பன் நாளிதழின் பொறுப்பற்ற செயலுக்கு மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், இவ்வாறு ஏற்பட்டுள்ள தவறுக்கு உரிய விளக்கத்தையும், திருத்த அறிவிப்பையும் தெளிவாக வெளியிட வேண்டும் என்றும் மலேசிய நண்பன் நாளிதழை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தந்தை பெரியாரின் கொள்கை வரிகளைத் திரிக்கவோ, சிதைக்கவோ அனுமதிக்க மாட்டோம்!
மானமும் அறிவும் மாந்தர்க்கு அழகு!
பகுத்தறிவே மனிதர்க்கு அழகு!
அன்புடன்,
நாக.பஞ்சு எ.எம்.என்.,
தலைவர்,
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்.


