
இயற்கை சூழலில் கண்களை கவரும் பல் வண்ணக் கோலத்தில் தமிழ் அர்த்தம் சமூக பண்பாட்டு சமய கூறுகளில் வெளிப்படுத்தும் சிற்பங்களை ஆலய கோபுரத்திலும் தூண்களிலும் தாங்கிய வண்ணம் பண்டார் ரவாங், கோல காரிங் சாலையில் எழுந்தருளியுள்ள தேவி அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் வரும் திங்கள்கிழமை ஆகஸ்ட் 31ஆம் நாள் திருக்குட புனித நீராட்டு விழா நடைபெற இருக்கிறது என்று இந்த ஆலயத்தின் தலைமை அர்ச்சகரும் பொறுப்பாளருமான சிவ திரு கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தெரிவித்தார்.
அன்று காலை 7:00 முதல் 8:10 மணி வரை நடைபெற உள்ள இந்த இறைத் திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்பில் கடந்த இருபத்து மூன்றாம் நாளிலிருந்து, (திருக்குட நன்னீராட்டு விழாவிற்கு முந்தைய ஆறாவது நாள்) பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று வியாழக்கிழமைகாலை ஆறு மணி அளவில் புனித மண் எடுத்தல் அங்குரார்ப்பணம் கும்ப அலங்காரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதைப் போல மாலை 6:20 மணியளவில் தீ தீப லட்சுமி பூஜை, பெருந்தீப ஆராதனை, மங்கள சீர்வரிசை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இதைப்போல நாளை வெள்ளிக்கிழமை நாளை மறுநாள் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு பூசனைகள் அம்மன் வழிபாடு, அம்மனுக்கு எண்ணெய் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளுடன் கும்ப அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று திங்களன்று காலையில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மிக பேரளவில் நடைபெற இருக்கிறது என்று கிருஷ்ணமூர்த்தி குருக்கள் மேலும் தெரிவித்தார்.



