Saturday, September 12, 2026

நேப்பாள வெள்ளப் பேரிடர்: 55 மலேசியருடன் இதுவரை தொடர்பில்லை! -சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க மாமன்னர் உத்தரவு!!

📞 மலேசியர்களுக்கான உதவித் தொடர்பு
• Wisma Putra ஹாட்லைன்: 03-8887 4570
• Kathmandu தூதரகம்: +977-1-400 2000 / +977-98510 20000
• மின்னஞ்சல்: mwkathmandu@kln.gov.my

நேபாளம் இந்துக்களின் புனித பூமியாக, ஆன்மீகத்தின் சொர்க்கபுரியாகக் கருதப்படுகிறது. ஆறுகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள் உயர்ந்த மலை உச்சிகள் என இயற்கை எழில் நிறைந்த தேசம், நேபாளம். ஆனால் அவ்வப்போது மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் நாடாகவும் அறியப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை திடீரென நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் கோஷி ஆற்றங்கரையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தியது.

இந்து மதத்தினர் அதிக அளவில் புனித யாத்திரை செல்லும் கைலாச மானசரோவர் திபெத்தில் அமைந்துள்ளது.

மானசரோவர் செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. அதில் இந்தியா வழியாக இரண்டு பாதைகளும் நேபாளம் வழியாக ஒரு பாதையும் உள்ளது.

இந்தியாவில் லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்), நாது லா கணவாய் (சிக்கிம்) போன்ற இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் செலல்லாம். அதே போல மேற்கு நேபாளம் ஹும்லா வழியாகவும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

நேபாளத்தின் ஹும்லா மானசரோவர் செல்ல ஏப்ரல் முதல் அக்டோபர் இடையிலான காலம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், பயணிகள் அக்டோபர் இறுதி வரை மானசரோவர் செல்கிறார்கள். மானசரோவர் செல்பவர்களில் பெரும்பாலானோர் இந்திய யாத்ரீகர்கள். இவர்களில் குறிப்பாக தமிழ் நாட்டு யாத்திரிகர்களைப் போலவே, மலேசிய யாத்திரிகளும் அங்கு செல்கின்றனர்.

அப்படிச் சென்றவர்களில்தான் அதிகானோரின் நிலை, தற்பொழுது கேள்விக் குறியாகி உள்ளது.

நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி யுள்ளது; குறைந்தது 157 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 17 யாத்திரிகர்கள் உள்ளிட்ட 55 மலேசியர்கள், தொடர்பு இழந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாட்சிமைசால் மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.

26-08-2026 அன்று திடீரென்று இலேசான நிலநடுக்கம், 5.2 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டு, அதன் விளைவாக பனி மலைகள் சரிந்து(glacial collapse) பனிமலை உருகி இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்றும் சொல்லப் படுகிறது.

இந்த வெள்ளத்தினால் நேப்பாளத்தில் Nuwakot, Rasuwa மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, Bhote Koshi, திரிசூலி ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மலேசியர்களின் நிலை:
17 பேர் கொண்ட மலேசிய ஆன்மிகக் குழுவினர் கைலாச மலை யாத்திரைக்காக நேப்பாளம் சென்றிருந்த நிலையில், அவர்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் காட்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகம், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களுடன் தொடர்பு இழந்துள்ளதை உறுதி செய்துள்ளது. அவர்களின் குடும்பத்தினர் சமூக ஊடகங்களின் மூலம் உதவி கோரி உள்ளனர்; கடைசித் தொடர்பு நேப்பாள குடிநுழைவு சோதனை மையத்தில் பதிவாகியுள்ள தகவலும் கிடைத்துள்ளது.

நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளத்தின் விளைவாக, 19 பாலங்களுடன் 40 கி.மீ. சாலையும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல கிராமங்களும் அழிந்துள்ளன. குறிப்பாக, 12 ஹைட்ரோபவர் நிலையங்கள் சேதமடைந்து 431 மெகாவாட்(MW) மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

சீனாவின் Gyirong எல்லைப் பகுதியில் கூட 265 பேர் காணாமல் போயுள்ளனர் என சீன அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன, இந்திய நாடுகள்கூட நேப்பாளத்திற்கு மீட்புப் பணியில் உதவி வருகின்றன.

குறிப்பாக, நேப்பாளத் தலைநகரம் காட்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியவைச் சேர்ந்த காணாமல்போன குடும்பத்தினர் mwkathmandu@kln.gov.my என்ற மின்னஞ்சலுக்கு சம்பந்தப்பட்டவர்களின் கடப்பிதழ் உள்ளிட்ட பயண விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

தவிர, மலேசியர்கள் தொடர்பான தகவலை புத்ராஜெயா விஸ்மா புத்ரா அலுவலகமும் காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து வெளியிடுகின்றன.

விஸ்மா புத்ரா(மலேசிய வெளியுறவு அமைச்சக)அவசர ஹாட்லைன்: 03-8887 4570 மின்னஞ்சல்: mwkathmandu@kln.gov.my
காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் தொலைபேசி எண்: +977-1-400 2000 அவசர எண்: +977-98510 20000.

இதற்கிடையில் விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், கைலாச மலைக்குச் சென்ற மலேசிய இந்து யாத்திரிகர்களில் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை குறைந்தது 175 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 28 நாடுகளைச் சேர்ந்த 476 வெளிநாட்டவர்கள் உட்பட 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அண்மைய தகவல் தெரிவிக்கிறது.

மலேசியர்களில் 55 பேர் தொடர்பு இழந்த நிலையில், உலங்கூர்தி(ஹெலிகாப்டர்கள்) துணையுடன் நேப்பாள இராணுவமும் மருத்துவ குழுக்களும் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. துணையாக, நேப்பாள காவல் படை, படகு சேவையினர் மற்றும் 1,100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பேரிடரில் காயமடைந்தவர்களுக்கு கட்டமின்றி சிகிச்சை வழங்க நேப்பாள அரசு உத்தரவிட்டுள்ளது; பேரிடரில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு Rasuwa மருத்துவ மனை மற்றும் காட்மாண்டு பயிற்சி மருத்துவமனைகளில் தொடர்சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பன்னாட்டு சமூகமும் நேப்பாளத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது;

சீனா, இந்திய நாடுகளுடன் உலக சுகாதார அமைப்பும்(WHO) நேப்பாளத்திற்கு மருத்துவப் பொருட்கள், கூடாரங்கள், உணவுப் பண்டங்களுடன் மீட்பு குழுக்களையும் அனுப்பியுள்ளன.

இந்தியாவும் நேப்பாள எல்லைப் பகுதிகளில் இருந்து தன் குடிமக்கள் ஆயிரக்கணக்காநோரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளது; இருநாட்டு எல்லைப்பகுதியில் ஓடும் Gandak ஆற்றுப் பகுதியில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.

கைலாசமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு, தற்பொழுது தொடர்பு அற்றிருக்கும் ஏறக்குறைய 55 பேரும் நேப்பாளத் தலைநகரம் காட்மண்டுவில் உள்ள குடிநுழைவு அலுவலகத்தில் பரிசோதனைக்குப் பின் அங்கிருந்து நேபாள்குஞ் சென்று, அங்கு ஓர் இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் அங்கிருந்து 45 நிமிட பயணத்தில் சிமிகோட் செல்லவும் அங்கிருந்து வாகனத்தின் மூலம் கைலாசமலைக்குச் செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.

இங்கிருந்துதான், மானசரோவருக்கான உண்மையான பயணம் தொடங்குகிறது. இந்த நிலையில்தான், மலேசிய ஆன்மிகப் பயணத்தினர் 17 பேருள்ளிட்ட 55 பேரின் நிலைகுறித்து தெரியாமல் இருக்கிறது.

அனைவரும் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக தாயகம் திரும்புவர் என குமரி எதிர்பார்க்கிறாள்.

இந்தநிலையில், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமது கூறுகையில், திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் துணை இயக்குநர் சானி ஹருல் மற்றும் மத்திய மண்டல அகாடமி அதிகாரி ஃபக்ருல் முனீர் ஈசா ஆகியோர் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு(EBC) ஜீப் வாகனத்தில் பயணம் செய்த 10 மலேசியர்கள் அடங்கிய குழுவில் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஆர். லோகதர்ஷினி கூறுகையில், திபெத்தில் உள்ள கைலாச மலைக்கு யாத்திரை சென்ற 17 மலேசியர்களில் தன் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இருந்தனர் என்றும் ஆனால் தற்போது அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் தந்தை எஸ். ராமன்59, தாய் எம். நீலவேணி 54, மாமா எஸ். முருகன் 60, 58 வயதான அத்தை ஜி. பத்மவதி ஆகியோரும் அந்தக் குழுவுடன் ஆகஸ்ட் 23 அன்று நேபாளம் சென்றனர்; அவர்கள் செப்டம்பர் 5 வரை தங்கள் புனிதப் பயணத்தைத் தொடரத் திட்டமிட்டிருந்தனர்.

“நேற்று மலேசிய நேரப்படி காலை சுமார் 10:30 மணியளவில், சுற்றுலாக் குழுவினர் நேபாள-திபெத் குடிவரவு சோதனைச் சாவடியிலிருந்து ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதுவே அவர்களுடனான கடைசி நேரடித் தொடர்பாகும்” என்று லோகதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “சுற்றுலா முகமையையும் மலேசியத் தூதரகத்தையும் தொடர்புகொள்ள முயன்றதாகவும் ஆனால் எந்தத் தகவலும் கிடைக்க வில்லை” என்றும் லோகதர்ஷினி மேலும் கூறினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை