
மலேசிய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள 222 தொகுதிகளில் தாப்பா நாடாளுமன்ற தொகுதி மட்டும் மிகவும் பாக்கியமிகு தொகுதியாகும்.
அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் அமைச்சரவையுடன் தொடர்பு கொண்டிருப்பர்.
1984 இல் பேராக் மாநிலத்தின் பத்தாங் பாடாங்-ஹிளிர் பேராக்(Batang Padang & Hilir Perak) மாவட்டங்களின் பகுதிகளை ஒன்றிணைத்து 1984 தொகுதி மறுவரை-யறையின்போது உருவாக்கப்பட்ட தொகுதி இது;

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் ஏழாவது பொதுத் தேர்தல் 1984-இல் நடைபெற்ற பொழுது, இந்தத் தொகுதியில் இருந்து முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி டான்ஸ்ரீ எம் ஜி பண்டிதன்.
அவர் நாடாளுமன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.

அடுத்து எட்டாவது (1990) பொதுத் தேர்தலி-லும் ஒன்பதாவது (1995) பொதுத் தேர்தலி-லும் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்-தெடுக்கப்பட்ட டான்ஸ்ரீ க. குமரன், சுகாதாரத் துறை துணை அமைச்சராக பொறுப்பு வகுத்திருக்கிறார்.
தொடர்ந்து 10வது (1999) பொதுத் தேர்தலி-லும் 11-ஆவது(2004) பொதுத் தேர்தலிலும் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி டான்ஸ்ரீ எஸ். வீர சிங்கம் ஆவார்.
இவரும் துணை அமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார்; உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் நலத்துறை சார்ந்து பொறுப்பு வகித்த அவரும் டான்ஸ்ரீ பட்டம் பெற்றவர்.

தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி-களான பண்டிதன், குமரன், வீரசிங்கம் ஆகிய மூன்று பேருமே தான்ஸ்ரீ பட்டம் பெற்றவர்கள்.
வீர சிங்கத்திற்குப் பிறகு, பன்னிரண்டாவது (2008) பொதுத் தேர்தல், 13-ஆவது(2013) பொதுத் தேர்தல், 14 ஆவது (2018) பொதுத் தேர்தல், தற்போதைய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15-ஆவது(2022) பொதுத்தேர்தல் என தொடர்ந்து நான்கு தவணைகளாக அந்த தொகுதியை தன்வசப் படுத்தி இருப்பவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன்.
ஏழாவது நாடாளுமன்றம் முதல் 14வது நாடாளுமன்றம் வரை எட்டு தவணைகளாக ஏறக்குறைய 40 ஆண்டுகள் தொடர்ந்து தாப்பா தொகுதியின் மக்கள் பிரிதிநிதி ஏதோ ஒரு வகையில் அமைச்சரவையில் இடம்பெற்று வந்தனர்.
ஆனால் நிகழும் இந்தத் தவணையில் மட்டும் அது ஈடேறவில்லை.
தொடர்ந்து இந்திய பிரதிநிதிகளே குறிப்பாக தமிழர்கள் வெற்றிபெறும் தேசிய முன்னணி கோட்டையான தாப்பாவில், 15 வது நாடாளு மன்றத்தில் சரவணன் வெற்றிபெற்று இருந்-தாலும் அரசியல் காரணங்களுக்காக அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது.
இத்தனைக்கும் தேசிய முன்னணியின் ஊடாக ஆளும் தரப்பில் – மத்தியக் கூட்டரசில் இணைந்திருக்கிற மஇகாவின் மக்கள் பிரதிநிதி சரவணன் ஆவார்.

இருந்தாலும் 15 வது நாடாளுமன்றத் தேர்தலில் இதேத் தாப்பாத் தொகுதியில் சரவணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்ட சரஸ்வதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது.
தொழில் முனைவோர் நலம் கூட்டுறவு மேம்பாட்டுத் துறையில் துணை அமைச்சராக பதவி ஏற்றதன் மூலம் தாப்பா நாடாளுமன்றத்திற்குரிய பாரம்பரியத்தை நாடாளுமன்றத்தில் தொடர்ந்தார் க சரஸ்வதி.
தற்போதைய 15- ஆவது நாடாளுமன்றத்தில் பிரதமர் இடையில் செய்த அமைச்சரவை மாற்றத்தின் பொழுது அதுவும் அற்றுப் போனது. துணை அமைச்சர் பொறுப்பில் இருந்து சரஸ்வதி அப்போது நீக்கப்பட்டார்
மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் தொடர்ந்து அமைச்சரவையுடன் தொடர்பு கொண்டிருந்த தாப்பா நாடாளுமன்றத் தொகுதி, தற்பொழுது அந்தப் பாரம்பரியத்தை இழந்து நிற்கிறது.
இன்றைய தாப்பா மக்கள் பிரதிநிதியும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ மு. சரவணனாருக்கு கேபினட் அமைச்சராக பொறுப்பு வகிக்கக்கூடிய தகுதியும் வாய்ப்பும் இருந்தும் ஏதோ சில பல காரணங்களால் குறிப்பாக அரசியல் சூழ்நிலையால் அது நடைபெறாமல் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அவர்மீது இன்று ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட இருக்கிறது.
நாட்டின் எட்டாவது பிரதமர் தான்ஸ்ரீ முகைதீன் யாசின், ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் தலைமையிலான அமைச்சரவை-களில் மனித வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், வெளிநாட்டுத் தொழிலாளர் நியமனம் தொடர்பாக ஏதோ தவறு நடந்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட இருக்கிறது.
இதன் தொடர்பில் பொதுவெளியில் சமூக ஊடகத்தின் மூலம் கருத்து தெரிவித்துள்ள சரவணன், தன் மீது எந்த குற்றமும் இல்லை என அடித்து சொல்லி இருப்பதுடன் இந்த வழக்கை எதிர்கொண்டு தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றும் உறுதிபட உரைத்திருக்கிறார்.
அவர் சொன்னபடி நடக்கட்டும்; நீதிமன்ற நடைமுறைகளை எதிர்கொண்டு அவர் மீண்டு வரட்டும்; மீண்டும் அரசியல் உலகிலும் மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்திலும் ஒருசேர உலா வரும் நாள் அமைந்தால் அது மலேசியத் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்ல; இந்தியர்தம் அரசியலுக்கும் நன்மையாக அமையக்கூடும்.
காலமகள் முடிவு எதுவானாலும் காத்திருப்போம் அதுவரை!


